கல்வி | குற்றம் | 2021-10-07 16:43:21

மாணவர்களின் கல்வியை அரசாங்கம் சீரழிக்கின்றது; உலகளாவிய ரீதியில் இலங்கையிலேயே இத்தகைய நெருக்கடி. கறுப்பு ஆசிரியர் தின எதிர்ப்பு போராட்டத்தில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

ஏ.எல்.எம்.ஷினாஸ்,நூறுல் ஹூதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்


இலங்கை அரசாங்கம் மாணவர்களின் கல்வியை சீரழிக்கின்றது. உலகளாவிய ரீதியில் ஆசிரியர்களை வீதிக்கு இறக்கி தமது உரிமைக்காக போராட்டத்தை நடாத்தத்த வைக்கின்ற மிகவும் மோசமான நெருக்கடியான சூழல் இலங்கையிலேயே காணப்படுகின்றது. என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியது.

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த கறுப்பு ஆசிரியர் தின கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (06.10.2021) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம் மூஸா இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்று 'ஒக்டோபர் - 6 'உலகளாவிய ரீதியில் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் ஒரு உன்னத நாளாகும். இன்றைய தினத்தில் கௌரவிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களை இந்த அரசாங்கம் வீதிக்கு இறக்கி தமது உரிமைகளுக்காக போராட வைத்திருக்கின்றது. அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீருங்கள் என்றே கேட்கிறோம். தவிர புதிதாக ஒரு பிரச்சினையை நாம் உருவாக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பலராலும் பேசப்பட்டது. அண்மையில் வெளியான தேசிய பரீட்சைகளின் பெறுபேறுகளின் படி மாணவர்கள் உயர்ந்த பெறுபேற்றை பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் இருந்த சாதனையாளர்கள் நாம்தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம்.

மாணவர்களின் கல்வி மீது, அவர்களுடைய எதிர்காலத்தின் மீது இந்த அரசாங்கத்திற்கு அக்கறை இருக்குமாக இருந்தால் ஆசிரியர்களான எங்களை போராட்டங்களை கைவிட்டு பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு முன் வரவேண்டும். வெறும் ஐயாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவிற்கு அடிமையானவர்கள் ஆசிரியர்களல்ல.

இந்த நாட்டின் ஜனாதிபதி உட்பட அமைச்சரவை, பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து வந்தவர்கள். ஆனால் ஆசிரியர்கள் கடந்த 85,86 நாட்களாக முன்னெடுக்கின்ற போராட்டங்கள் பற்றி அவர்கள் எந்த கரிசனையும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.  இந்த நாட்டில் இருக்கின்ற விலைவாசி இதர தேவைகளுக்கு மத்தியில் எங்களுடைய உரிமைகளை தான் கேட்டு நிற்கின்றோம்.
எமது பிரச்சினைகளை கவனத்தைக் கொண்டு அரசாங்கம் உரிய தீர்வை மிக விரைவில் தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

'5000/- ரூபாவுக்கு அலைபவர்கள் ஆசிரியர்கள் அல்ல', 'ஆசிரியர்களை கௌரவிக்கும் தினத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கியது யார்?', 'புதிய பிரச்சினைகளை நாம் உருவாக்கவில்லை பழைய முரண்பாட்டை தீருங்கள் என்கிறோம்' போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் இருந்து இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டம் வரையில் நடை வழியாகச் சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts