உள்நாடு | சமூக வாழ்வு | 2021-10-01 16:24:28

பெரியநீலாவணையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு  'பட்டினி - அற்ற மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை கட்டியெழுப்புதல், சிறுவர் சுற்றாடல் பாதுகாப்பு படையணியை தாபித்தல், மற்றும் ஒரு லட்சம் பலா மரங்களை நடுதல்' எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று (01.10.2021) பெரியநீலாவணைப் பிரதேசத்தில் நடைபெற்றது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில்  அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி. ஜெ. அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எம். முகம்மட் நியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் பலா மரக் கன்றை நாட்டி சிறுவர் தின தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

பெரியநீலாவணை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில் நடைபெற்ற மரம் நடும் தேசிய சிறுவர் தின நிகழ்வில் சிறுவர்கள் தமது கரங்களால் மகிழ்ச்சியாக மரங்களை நாட்டி  இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிகழ்வுகளில் பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள், கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அமைப்பாளர் சர்மில் ஜஹான், பிரதி அதிபர் எம்.சி.நஸார், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. எஸ்.சரீபா, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி  நித்தியா விஜேந்திரன், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள்,  கிரீன் லைஃப் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts