உள்நாடு | இலக்கியம் | 2021-09-05 11:33:40

காரைதீவு பிரதேச சபை ஊழல்களை வெளிக்கொணர்ந்த உறுப்பினருக்கு உயிரச்சுறுத்தல் : பொலிஸில் முறைப்பாடு பதிவானது !

-நூருல் ஹுதா உமர்-

அதர்மத்தை எதிர்த்து குரல்கொடுத்து மக்களின் வரிப்பணம் வீணாக கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்தும் குரல்கொடுத்து வரும் எனக்கு அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகின் முதல் தமிழ் பேராசிரியர் பிறந்த விபுலமண்ணுக்கு அபகீர்த்தியை உண்டாக்கும் யாரையும் கண்டு நான் எனது மக்கள் பணியை நிறுத்தப்போவதில்லை. என்னை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளேன் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் க. குமாரஸ்ரீ காரைதீவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், காரைதீவு பிரதேசசபை தவிசாளரின் ஊழல்கள், ஜனநாயக விரோத செயல்கள், அடக்குமுறைகள் தொடர்பில் சபை அமர்வுகளிலும், சபைக்கு வெளியேயும் என்னுடைய எதிர்ப்பை ஆரம்பம் முதலே வெளியிட்டு வருகிறேன். நீதி, தர்மம் எங்கிருக்கிறதோ அங்கு எனது குரல் எப்போதும் ஓங்கியொலித்துள்ளதுடன் மக்கள் எங்களின் சுயட்சை குழுவுக்கு எந்த நோக்கத்திற்காக வாக்களித்து தெரிவு செய்தார்களோ அந்த பணியை சிறப்பாக செய்துவருகிறேன். ஊழல்களுக்கு துணைபோகாமல் தனித்து நின்று மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் என்னை ஓரங்கட்டி காரைதீவை சாப்பிட்டு ஏப்பமிட நினைப்பவர்கள் யார் என்பதை காரைதீவு மக்கள் நன்றாக அறிவர்.

தீய சக்திகளின் ஜனநாயக விரோத செயல்களுக்கும், ஊழலுக்கும் துணைபோக மறுக்கும் என்மீது பொய்யான கற்பனை கதைகளை தவிசாளர் அடிக்கிக் கொண்டிருக்கிறார். தவிசாளர் வழங்கும் சில சலுகைகளை கண்டு மயங்கிய சிலரும் போலியான துண்டுப்பிரசுரங்கள், கற்பனையான ஊடக அறிக்கைகள், சமூகவலைத்தள பதிவுகளென அதற்கு பக்கவாத்தியம் இசைக்கிறார்கள். அவர்களுக்கு சட்டம் தன்னுடைய கடமையை செய்யும் என நம்புகிறேன். 

எனது மக்கள் ஊழலை எதிர்த்து, காரைதீவின் அடையாளமாக தனித்து  நிற்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பை எதிர்த்து எங்களுக்கு வாக்களித்தனர். அவர்கள் வழங்கிய ஆணையை அவர்களுக்காகவே பயன்படுத்துவேன். ஊழல்வாதிகளுக்கும், இனவாத, பிரதேசவாத செயற்பாடுகளுக்கும் துணைபோகும் ஈனச்செயலை யாருக்காகவும் நான் எப்போதும் செய்யப்போவதில்லை என்றார். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts