பிராந்தியம் | மருத்துவம் | 2021-07-25 21:46:24

கல்முனை பிரந்தியத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை

(ஏ.எல்.எம்.ஷினாஸ் )

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா (Covid-19) சினோபாம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள்  (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டனர். 

13 சுகாதார வைத்திய அதிகாரிகள்  பிரிவிலும் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட 37 தடுப்பூசி ஏற்றும் நிலையங்களிலும்  13 வைத்தியசாலைகளிலும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில்  தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி ஏற்றி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் கல்முனை அல்-பஹ்ரியா தேசிய  பாடசாலையில் இடம்பெற்றது. இங்கு பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை, மருதமுனை அல்-மதீனா வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மருதமுனை வைத்தியசாலை ஆகிய இடங்களிலும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மத்தியமுகாம், காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், திருக்கோவில், பொத்துவில் போன்ற 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர். குறிப்பாக பிராந்தியத்தில் வசிக்கும் 60 வயதை தாண்டிய ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாயம் தடுப்பூசி பெற்று உயிரிழப்பை தவிர்த்து கொள்ளுமாறு சுகாதார துறையினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
 

ஆரம்ப நிகழ்வில் இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.ஜி.சுகுணன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி சுஜித் பிரியந்த, பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி, பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி ஆர். ரமேஷ;, கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் உட்பட வைத்திய அதிகாரிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts