கல்வி | அரசியல் | 2021-07-25 21:38:01

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்

கிழக்கு மாகாணத்தின் கல்முனைத் தொகுதியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து பல்வேறுபட்ட அபிவிருத்திகளில் முன்னோடியாக இருந்து இன,மத பாகுபாடின்றி சேவை செய்த நம்பிக்கையின் நட்சத்திரம் ஏ.ஆர்.மன்சூர் மக்களை விட்டு பிரிந்து  இன்று (25.07.2021) நான்கு வருடம் சென்றுவிட்டது.

மறைந்த அமைச்சர் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் காலத்தில் வர்த்தக வாணிப கப்பல் துறை அமைச்சராக அதே காலத்தில் கிழக்கு மாகாண பாதுகாப்பு கவுண்ஸிலின் உயர்பீட அங்கத்தவராக மற்றும் 2003 ஆம் ஆண்டில் குவைத் நாட்டின் தூதுவராக என்றெல்லாம் பதவிகளை அலங்கரித்தவர்.

1933.05.30 இல் கல்முனைக்குடியில் எக்கீன் தம்பி ஆலிம் அப்துல் றஸாக் அவர்களுக்கும் , முகம்மது அப்துல் காதர் சரீபா உம்மா அவர்களுக்கும் ஆறாவது பிள்ளையாக பிறந்த இவர் 1939,1943 காலப்பகுதியில் கல்முனைக்குடி அல் - அஸ்ஹர் பாடசாலையில் ஆரம்பக்கல்வியைப் பெற்று 1943 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து அதன் பின்னர் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் ஆங்கிலத்தை ஆர்வமாக கற்றதன் காரணமாக பின்னர் மட்டக்களப்பு சிவானந்தா உயர்தரப் பாடசாலையில் இரண்டாம் நிலைக் கல்வியைக் கற்றார். உயர்கல்விக்காக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் சேர்ந்த பின்னர் மிகவும் திறமையாக பரீட்சையில் சித்திபெற்றதன் காரணமாக 1955 ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து 1958 ம் ஆண்டு உயர் நீதிமன்ற அப்புக்காத்தாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் கல்முனைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் கேற் முதலியார் எம்.ஸ். காரியப்பரின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரை திருமணம் செய்து அதன் மூலம் எம். மின்ஹா, எம். றகுமத், எம். மரீனா ஆகிய மூன்று பிள்ளைகளுக்கும் தந்தையாக இருந்து அம்மூவரையும் சிறந்த ஒழுக்கமுள்ள, இஹ்லாசான நற்பிரஜைகளாக்கி அவர்களையும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்தார்.

தற்போது கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக இவரின் புதல்வர் றஹ்மத் மன்சூர் நியமிக்கப்பட்டு பல்வேறுபட்ட சேவைகளை மக்கள் நலன் கருதி செய்து வருகின்றார். 1977 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஐ.தே. கட்சி அபேட்சகராக போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகி 1979 ல் யாழ்ப்பாண மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சரானார். அதே வருடத்தில் வர்த்தக கப்பல்துறை அமைச்சராகவும் அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராகவும் நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொண்டமை வரலாற்றில் முதல் தடவையாகும்.

இதற்கு உறுதுணையாக மறைந்த செயல்வீரர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக, மாவட்ட அமைச்சராக 17 வருடங்கள் தனது அரசியலை புனிதமாகவும் , நேர்மையாகவும் , களங்கமில்லாமலும் , எவரையும் பழிக்குப்பழி வாங்காமலும் இவ்வுலக வாழ்க்கையை விட மறுமைநாள் பற்றிய எண்ணத்தோடு பூரண இஸ்லாமிய வாழ்க்கை வழியை பின்பற்றி தனது சேவையை மக்களுக்காக அர்ப்பணித்த மாமனிதர்தான் மர்ஹும் அமைச்சர் மன்சூர் அவர்கள்.

இவரின் காலத்தில் பாடசாலைகளுக்கான பௌதீகவள அபிவிருத்தி , வேலைவங்கி ( Job Bank ) மூலமான அரசியல் நியமனங்கள் , அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரிக்கான அமைச்சரவைப் பத்திரம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கட்டுமானத்திற்கான குவைத் நிதி , முஸ்லிம் கல்வி மாநாட்டுப் பிரேரணைகளை பாராளுமன்ற உரைகளில் முன்வைத்தமை மற்றும் கல்முனைத் தொகுதியிலுள்ள பாடசாலைகளுக்கான பௌதீகவள அபிவிருத்தியில் கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை , மஹ்மூத் பாலிகா , கல்முனை பற்றிமா தேசிய பாடசாலை , கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை , மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரி , மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி போன்றவற்றிக்கு பாரிய பங்களிப்புச் செய்தது மட்டுமன்றி மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் கட்டிடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் . மற்றும் 1C பாடசாலைகளை 1AB பாடசாலைகளாக மாற்றி அப்பாடசாலைகளில் கணித , விஞ்ஞான பிரிவுகளை ஏற்படுத்தி மாணவர்களின் கல்விக்கு உரமூட்டினார்.

குறிப்பாக அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களுடைய காலத்திலே கல்முனைப் பிராந்தியம் தென்கிழக்கு முகவெற்றிலையாக திகழ வேண்டுமென்ற திட்டத்தை முன்வைத்த மகான். கல்முனை நவீன சந்தை , பொதுநூலகம் , நீதிமன்ற கட்டிடத் தொகுதி , பிரதேச செயலகங்கள் , கல்முனை செயலகக் கட்டிடம் , பாடசாலைகள் , இஸ்லாமாபாத் குடியேற்றம் , கல்முனை இலங்கை வங்கிக் கட்டிடம் , கல்முனை பொலிஸ் நிலையக் கட்டிடம் , மருதமுனை மக்கள் மண்டபம் , மருதமுனை இரு பெரும் வீட்டுத் திட்டங்கள் , மற்றும் இன்னும் பல மக்கள் பயன்பெறக்கூடிய பல அபிவிருத்தி அரசியலை கோடிட்டுக் காட்டிய பெருந்தகை. எவ்வித பிரதியுபகாரமும் எதிர்பாராது அநேக இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தகைமைக்கேற்ப எண்ணிலடங்காத தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தார். 1992 ஆம் ஆண்டு அநேக தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் இவரின் சிபாரிசிலேயே முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு ரணசிங்க பிரேமதாஸ அவர்களால் வழங்கப்பட்டது .
 
இவரின் சேவையைப் பாராட்டி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதிப் பட்டம் 2016.02.20 இல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களால் சூட்டப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

கல்முனை மாநகர சபையின் முன்ளாள் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் பற்றிய ‘ஏ.ஆர்.மன்சூர் வாழ்வும் பணிகளும்’  எனும் நூல் 2019 ஆம் ஆண்டு மன்சூர் பௌண்டேசன் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதுவெளியீடு

இவரின் அதியுயர் சேவையினால் பயனடைந்த மக்களின் துஆ பிராத்தனைகள் அன்னாரின் மறுமை வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்துவதோடு  அல்லாஹ் அவருக்கு மேலான சுவர்க்கத்தை வழங்குவதற்காக இருகரம் ஏந்தி பிராத்திக்கின்றோம்.

எம்.எம்.எம்.நியாஸ் - அதிபர்

மருதமுனை - புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயம்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts