பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-07-21 09:34:19

கொவிட்-19 ஆட்கொல்லி நோயிலிருந்து மனித சமுதாயம் மீட்சி பெறட்டும்; -பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கல்முனை முதல்வர் றகீப்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மனித வாழ்வுக்கு சவாலாக உருவெடுத்துள்ள கொவிட்-19 எனும் ஆட்கொல்லி நோயிலிருந்து மனித சமுதாயம் மீட்சி பெற இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"மனிதனைப் புனிதப்படுத்துகின்ற ஹஜ் எனும் தியாகம் நிறைந்த வணக்கம் எமக்கு நிறைய படிப்பினைகளைக் கற்றுத் தருகின்றது. ஒற்றுமை, சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு விடயம் ஹஜ்ஜை விட வேறு எதுவும் இருக்க முடியாது. ஹஜ் போதிக்கும் தத்துவங்களை கடைப்பிடிப்போமாயின் சமூகத்தில் ஒருபோதும் பிளவுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. தவிரவும் இறையச்சம் பேணி, தீய நடத்தைகளைத் தவிர்த்து, நற்செயல்களில் ஈடுபடவும் துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்கவும் எவரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்வதற்கும் ஹஜ் வழிகாட்டுகிறது.

கொவிட்-19 தொற்று வீரியமடைந்துள்ள ஒரு இக்கட்டான சூழ்நிலையிலேயே முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். இக்கால சூழலில் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடித்து, கொவிட் பரவல் கட்டுப்பாட்டுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை எல்லோரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்தபோது கடந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை அவரவர் வீடுகளில்
இருந்தே கொண்டாடினோம். ஆனால் தற்போது பயணக்கட்டுப்பாடு தளர்ப்பட்டுள்ள நிலையில் அனுஷ்ட்டிக்கப்படுகின்ற ஹஜ்ஜுப் பெருநாளையும் நமது வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுவதன் மூலம்  கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கான எமது சமூகத்தின் ஒத்துழைப்பை பறைசாற்றுவதுடன் எம்மையும் எமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம்.

அதேவேளை, கொவிட்-19 எனும் அரக்கனின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியிலும் முஸ்லிம்கள் மீதான இனவாத செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருவதைக் காண்கின்றோம். இச்சூழ்நிலையில் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் அனைத்து விடயங்களிலும் மிகவும் அவதானமாக செயற்பட்டு, இனவாத நெருக்கடி, அச்சுறுத்தல்களில் இருந்து விடுதலை பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

மேலும், உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் இயற்கை அனர்த்தங்களினாலும் ஆட்சி மற்றும் ஆயுத அடக்குமுறைகளினாலும் அல்லல்படுகின்ற எமது இஸ்லாமிய சகோதரர்களின் நிம்மதியான வாழ்வுக்காகவும் இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்திப்போம். அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts