உள்நாடு | அரசியல் | 2021-07-08 00:14:39

றிசாட் பதியுதீனின் சிறப்புரிமையினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் தார்மிகப் பொறுப்பு  - முஷரஃப் எம்.பிகாட்டம்

ஏ.பி.அப்துல் கபூர் 

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியுதீன் கடந்த 74 நாட்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பதானது அவரது அடிப்படை உரிமையினை மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமையினை மீறும் செயலாகும். எனவே அவரது மற்றும் அடிப்படை உரிமைகளினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் தார்மிகப் பொறுப்பு என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம்.எம். முஸரப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(07) நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியதன் பின்னர் அது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பாராளுமன்ற வரலாற்றில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இது வரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்படவுமில்லை தடுத்து வைக்கப்படவுமில்லை. ஆனால் றிசாட் பதியுதீன் அத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாழ்கிறார். அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமைகள் பறிக்கப்படும் பொழுது அதனை உறுதிப்படுத்துவது இவ்வுயரிய சபையின் சபாநாயாகருக்குள்ள அரசியலமைப்பினூடான கடமையாகும்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக எந்தவித ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களோ நியாயமான காரணங்களோ கிடையாது. சபாநாயகரிடம் தெரிவிக்காது றிசாட் பதியுதீனை கைது செய்தமை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களினை விசாரணைக்குட்படுத்துமாறு பொறுப்புள்ள தரப்பினரை வேண்டுவது சபாநாயகரின் கடமையாகும். பொலிஸ் மா அதிபர், பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வின் அறிக்கை என்பன றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட போது நகைப்புக்குரியதாக கணிக்கப்பட்டது. ஏனெனில் அவ்வறிக்கைகள் எல்லாம் றிசாட் பதியுதீனை நிரபராதி என கோடிட்டு காட்டியிருந்தன.

இந்த உயரிய சபையானது அரசியல் பழிவாங்கல் நிமித்தம் பாதிக்கப்பட்டுள்ள எனது கட்சி தலைவரின் இந்த உயரிய சபையின் உறுப்பினரின் விடுதலை தொடர்பாக ஒரு சிறிய நடவடிக்கையாவது இதுவரையில் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

றிசாட் பதியுதீனின் அநியாயமான கைது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கிலிருந்து நான்கு தடவைகள் நீதியரசர்கள் தொடர்ச்சியாக விலகியிருப்பது றிசாட் பதியுதீனை சட்ட ரீதியான மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்த மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த உயரிய சபை ஏதாவது மாற்று வழிமுறையொன்றினூடாக  பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள றிசாட் பதியுதீனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

றிசாட் பதியுதீன் தலைமை தாங்குகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராகிய நான் இவ்வுயரிய சபையினை வேண்டுவது உடனடியாக கட்சித் தலைவர்களுடனான விசேட கூட்டத்தினை கூட்டி நீதியினை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இச்சபையினை வேண்டி நிற்பதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம்.எம். முஸரப் தெரிவித்தார். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts