பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-07-01 20:31:38

மருதமுனையை முடக்கும் தீர்மானம் தற்காலியமாக தளர்த்தப்பட்டது.

(நூறுல் ஹூதா உமர், ஏ.எல்.எம்.ஸினாஸ், எம்.என்.எம்.அப்றாஸ், அஸ்லம் மௌலானா, சர்ஜூன் லாபிர், பாறுக் ஷிஹான், எம்.ஐ.எம்.சம்சுத்தீன்)

மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று (30) கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற சுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்றும் (30) இன்றும்(01) மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையை கவனத்தில் கொண்டு முடக்க நிலையை சுகாதார நிபந்தனைகளுடன் தற்காலியமாக தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.30 மணியளவில் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இம்முடிவுகள் பெறப்பட்டது.

சுகாதாரத்துறையினரின் ஆலோசனையின் பேரில் மேற்படி கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கடுமையாக ஆராயப்பட்டு பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் மாலை 6.00 தொடக்கம் மறுநாள் காலை 6.00 மணி வரை மூடப்பட வேண்டும். குறித்த இந்த காலப்பகுதிக்குள் பொதுமக்கள் நடமாட்டம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. என்ற இறுக்கமான நிபந்தனையுடன் முடக்க நிலை தளர்த்தப்பட்டது. சட்த்தை மீறுவோர் மீது எவ்வித கருணையும் காட்டாது பொலிஸார், இராணுவத்தினருடன் இணைந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என்றும் தீர்மாணிக்கப்பட்டது

சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் இந்த தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்படும்.

இக்கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத்தலி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர்.அப்துல் வாஜித், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.ஆர்.எம்.அஸ்மி, கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையினர், மருதமுனை வர்த்தக சங்க பிரதிநிதியினர், பொலிஸார், இராணுவத்தினர், மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts