கட்டுரைகள் | அரசியல் | 2021-06-28 14:36:15

வெள்ளிடைமலையாகி வரும் கைதிகளின் விடுதலைகள்!

-சுஐப் எம். காசிம்-

ஏதாவதொரு முக்கிய தினத்தில், எவருக்காவது விடுதலை கிடைக்கும் அரசியல் கலாசாரம் இருப்பதுதான், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒழிக்கப்படும் வரைக்கும் கைதிகளுக்குள்ள ஒரேயொரு ஆறுதல். சுதந்திர தினம், பொஸன் போயா தினம் மற்றும் விஷேட தினங்களிலாவது, சிலர் பொதுமன்னிப்பில் விடுதலையாகாதிருந்தால், நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்திருக்கலாம். இவ்வாறுதான் சில நடைமுறைகளும் உள்ளன.

இப்போது, இதிலொரு தினத்தில்தான் 93 கைதிகள் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் கைது செய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் விடுதலை கிடைத்திருக்கிறது. அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 15, யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவரும் வெளியாகியதால் சட்டம் வெள்ளிடைமலையாகி இருக்கிறது.

வழக்குகள் இழுத்தடிக்கப்படுதல், சாட்சிகள் உயிரிழத்தல் அல்லது திட்டமிட்டுக் கொல்லப்படுதல், இன்னும் துப்புக்களைத் தேடிப்பெற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்க அதிக காலம் தேவைப்படுதல் உள்ளிட்ட காரணங்களால்தான், கைதிகளும் காலாதிகாலமாக கூட்டுக்குள் கிடக்க நேரிடுகிறது. இதனால் இவர்கள் அனுபவிக்கும் இடர்களின் எதிரொலிகளை, எழுத்துருவில் கொண்டுவர முடியாது. அனுபவித்தோரால் மட்டுமே இவ்விடர்களையும், வலிகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் இந்த வலிகளைச் சுமந்த ஒரு இளம் அனுபவசாலிதான். இவரது வேதனைகள், உணர்வுகள்தான் அண்மையில், பாராளுமன்றத்தில் குரலாக ஒலித்தது. ஒலித்ததுடன், ஓயாது பணியாற்றியும் இருக்கிறது. பல ஆண்டுகள் அரசியல் கைதிகளாக இருந்த 16 தமிழர்களின் விடுதலைக்கு வித்திட்டு ஆரம்பமான நாமலின் குரலோடு, கைதிகளின் வாழ்வில் புதியதொரு பயணம் தொடங்க நாமும் பிரார்த்திப்போம்.

சந்தேகத்தில் அல்லது குற்றத்துக்காக ஒருவர் சிறையிலடைக்கப்படுவது எத்தனை பேரைப் பாதிக்கிறது. உறவு, உணர்வு, பாசத்துக்கு அடிமைப்படாத மனிதனாக எவரும் இல்லையே! இதனால்தான், அடைபட்டுள்ள ஒருத்தருக்காக உறவுகளும், பலருக்காக சமூகமும், தலைவனுக்காகத் தொண்டர்களும் துன்பப்படுகின்றனர். இதுவே, இப்படி என்றால், செய்யாத குற்றத்திற்காக சந்தேகத்திலும், செய்த குற்றத்திற்காக தண்டனைக் காலத்துக்கு அதிகமாகவும், இன்னும் வழக்குகளே தொடுக்கப்படாமல் இருபது ஆண்டுகளுக்கு மேலாகவும், கூண்டில் அடைபட்டுக் கிடப்பது, எந்த உணர்வுகளை கிளறாமலிருக்கும். எனவேதான், இவ்வாறான கைதுகளுக்கு வழிகோலுகின்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பக்கம் அரசியலின் பார்வை திரும்பியிருக்கிறது.

1979 ஆம் ஆண்டு, நாட்டின் அன்றைய அவசர தேவை கருதிக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் இன்றுவரைக்கும் உயிருடனிருப்பது ஏன்? 'இதை, இல்லாமலாக்குங்கள்' என்று சிலரும், இன்றைய தேவைக்கு ஏற்ப, இந்தச் சட்டத்தை திருத்துமாறு பலரும் குரல்கொடுத்தும் முடியாமல் முழு மூச்சுடன் வாழும் சட்டமும் இதுதான். நாட்டின், வடக்கு, தெற்கு பேதமின்றிப் பலரைப் பதம் பார்த்ததும் இந்த பயங்கரவாதத் தடுப்புச்சட்டம்தான். ஆனால், கிளர்ச்சிகளும் பயங்கரவாதமும் முற்றாக முறியடிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு, இந்தச் சட்டம் அவசியமில்லை என்பதுதான், சர்வதேசத்தின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டுக்கு இணங்காத இலங்கை அரசுக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகைகள் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தின் 47ஆவது தொடர் ஆரம்பமாகியுள்ளதால், களத்தைச் சூடாக்கும் இந்த அறிக்கையை எச்சரிக்கையாகத்தான் இலங்கை அரசாங்கம் நோக்குகிறது. பயங்கரவாதம், கிளர்ச்சிகள் அடக்கப்பட்டுள்ளதுதான். அதற்காக, வெளிநாடுகளின் விருப்புக்கு ஏற்ப இந்தச் சட்டத்தை திருத்த முடியாது, நாட்டின் இறைமையை எச்சரிக்கும் வழித்தடங்கள் தென்படும் வரைக்கும் இதன் தேவையுள்ளதாக நீதியமைச்சு நியாயம் சொல்லியிருக்கிறது. மானிடப் பிறப்பின் மகிமையையே மலினப்படுத்தும் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், ஜனநாயகத்துக்கான உயிர்கொல்லி என்பதுதான் மேலைத்தேயவாதிகளின் விவாதம். இருந்தாலும், இவர்களின் நிலைப்பாடுகள், குவான்தனமோ, அபுகிராப் சிறைச்சாலைகள் மற்றும் சிரியாவில் இடம்பெறும் லட்சணங்களில் தெரிகிறதே!எனவே, எவரது தேவைகளுக்காகவும் எங்களை அழுத்தக் கூடாதென்றுதான் இலங்கை சொல்கிறது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாது, இரண்டு வருடங்களுக்கு மேலாக சந்தேக நபரைத் தடுத்து வைத்திருத்தல், பொலிஸாரின் பாதுகாப்பிலுள்ள கைதிகள் மரணித்தல் இவையிரண்டும் இல்லாத வகையில்தான், இந்தச் சட்டம் திருத்தம் செய்யப்படலாம். வழக்குகளே தொடுக்கப்படாமல் 13 பேரும், விசாரணைகள் முடிந்தும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாது 116 பேரும், 35 பேர் தண்டனைக்கு அதிகமான காலங்களையும் சிறையில்கழித்தவாறு, காத்துக்கிடப்பது, கல்நெஞ்சுகளையும், குண்டுக் கண்களையும் கலங்கடிக்காமலா விடும்?

மற்றும் குற்றத்தின் மூளைசாலிகளைத் தப்பவிட்டு, ஏவப்பட்டோரைக் கைது செய்ய உதவியிருப்பதும் இந்தச் சட்டம்தான். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட ஒரு அப்பாவி, பயங்கரவாதிக்கு உணவுப் பார்சல் கொண்டு வந்திருக்கலாம் அல்லது சிறிய பெற்றரியை (மின்கலம்) வாங்கி வந்திருக்கலாம். இதன்போது, கைதான அதிக தமிழர்களைத்தான், இந்தச் சட்டம் காலாதிகாலமாகக் கைவிலங்கிட்டிருக்கிறது. உத்தரவிட்ட பயங்கரவாதி காட்டுக்குள்ளே, உயிருக்கஞ்சி உதவிய அப்பாவி கூட்டுக்குள்ளே! இதுதான், இச்சட்டத்தின் இன்றைய லட்சணம்.

ஏன்? களத்தில் போராடி, இலங்கை இராணுவத்தின் மனவலிமைகளையே உடைத்தெறிந்த, பல உயிர்களையே காவுகொண்ட முன்னாள் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படலாம் என்றால், இவர்களில், மூவாயிரம் பேர், சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்படலாமென்றால், உயிருக்கு அஞ்சி உதவிய அப்பாவிகள், தங்களது உறவுகளுடன் இணைக்கப்படக் கூடாதா?இந்த உணர்வுகளின் எழுகைகளே, இந்தச் சட்டத்தை திருத்த வழிகோல உள்ளதோ?

"சிறைக்கைதிகளும் மனிதர்களே" என்று பொரளை சிறைச்சாலை சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகம் நமது நெஞ்சங்களையும் நனைக்கட்டும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts