பிராந்தியம் | அரசியல் | 2021-06-22 10:44:24

கொரோனாவை எதிர்கொள்ள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சுகாதார ஒத்துழைப்பு குழு ஸ்தாபிக்கபடல் வேண்டும் : மாநகர சபை உறுப்பினர் வேண்டுகோள். 

-நூருல் ஹுதா உமர்- 

கொரோனா பெருந்தொற்றால் நாடு சந்திக்கும் அதே அளவு பிரச்சினையை கிழக்கு மாகாணமும் சந்தித்துவரும் இந்த சூழ்நிலையில் கல்முனை மாநகரில் எதிர்காலத்தில் மிகப்பெரும் கொரோனா பெருந்தொற்று அச்சநிலை காணப்படுகிறது. மக்களின் பொறுப்பற்ற தன்மைகளினால் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு பெறுமானம் இழக்கிறது. கல்முனையை கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்க சுகாதார துறையினருடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகளை கொண்ட குழுவினரையும் களமிறக்க கல்முனை மாநகர முதல்வர் முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். 

இன்று காலை கல்முனை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  முதலாம், இரண்டாம் அலையின் போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடிய முதல்வர் இந்த பெரிய அலையின் போது மௌனமாக இருப்பது கவலையளிக்கிறது. கல்முனை மாநகர சபை ஊழியர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டும் எவ்வித முறையான அணுகுமுறைகள் இல்லை. லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொண்ட இந்த மாநகர சுகாதாரத்தை நூற்றுக்கும் குறைவான அதிகாரிகளையும், சுகாதார ஊழியர்களையும் கொண்டு கட்டுப்படுத்த முடியாது. மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சுகாதார பொதுமக்கள் குழுவை சுகாதார ஊழியர்களுடன் இணைப்பு செய்வதன் மூலம் கல்முனை மாநகரை இந்த பெருந்தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும். பயணத்தடை, ஊரடங்கு அமுலில் உள்ள நாட்களிலும், தளர்த்தப்படும் நாட்களிலும் எமது பிரதேசத்தின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை சகலரும் நன்றாக அறிவோம். 

உள்ளுராட்சி மன்றங்களுக்கு தொற்றுநோய் தடுப்புக்காக வழங்கப்பட்டுள்ள தத்துவங்கள், சரத்துக்களை கொண்டு அதிகாரத்தை பயன்படுத்தி கல்முனை முதல்வர் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இனவாதம், பிரதேசவாதம், கட்சி பேதங்கள், கொள்கை முரண்பாடுகள் கடந்து இந்த காலகட்டத்தில் கொரோனாவை வெல்ல நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். அதற்கான ஒழுங்கான கட்டமைப்பை முறையாகவும், அவசரமாகவும் செய்ய கல்முனை மாநகர சபை நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts