உள்நாடு | அரசியல் | 2021-06-18 16:23:52

கல்முனை பிராந்தியத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை; -எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி. தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று வியாழன் (17) அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரங்களும் பாவனையும் அதிகரித்திருப்பது தொடர்பாக நான் ஏற்கனவே ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். அதைத் தொடர்ந்து அவர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு பணிப்புரை விடுத்ததன் பேரில் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இருந்தும் முற்றுமுழுதாக போதைப்பொருள் வியாபாரங்களும் பாவனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இது சம்மந்தமாக பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருக்கிறேன். இதன்போது சில வியாபாரிகள் இப்பிரதேசத்தை விட்டு தற்காலிகமாக மறைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இருந்தபோதிலும் இவ்விடயம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினரை அதிகளவில் ஈடுபடுத்தி, சம்மந்தப்பட்டோரை வளைத்துப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

பொதுவாக அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, எமது பகுதியில் இருந்து அதனை முற்றாக ஒழித்து, எமது இளம் சந்ததியினரை பாதுகாப்பதற்காக நான் உட்பட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம்- என்று ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts