பிராந்தியம் | குற்றம் | 2021-06-18 15:52:26

கல்முனைக்குடி பிரதான வீதியில் குப்பை வீசுவோர் மீது கடும் நடவடிக்கைக்கு ஏற்பாடு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைக்குடி பிரதான வீதியின் சில முக்கிய இடங்களில் குப்பை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை முதல் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்ற நபர்களைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பதற்கான பணிப்புரையையும் ஆலோசனைகளையும் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கியுள்ளார்.

தற்போது திண்மக்கழிவகற்றல் சேவை மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்முனைக்குடி வலயத்தைப் பொறுத்தளவில் ஒவ்வொரு வீதியிலும் வாரத்திற்கு இரு தடவை குப்பை சேகரிப்புக்காக திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. பிரதான வீதியில் நாளாந்தம் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

அத்துடன் பிரதான வீதியின் சாஹிபு வீதி சந்தி, டொக்டர் றிஸ்வி வீதி சந்தி மற்றும் அமானா வாங்கி முன்பாகவும் ஒவ்வொரு நாளும் காலை 6.30 தொடக்கம் 7.00 மணி வரை திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்கள் தரித்து நின்று குப்பைகளை சேகரிக்கின்றன. இதன்போது அவ்விடங்களில் ஏற்கனவே வீசப்பட்டு, குவிந்து கிடக்கின்ற குப்பைகள் அள்ளப்படுவதுடன் பொது மக்களினால் ஒப்படைக்கப்படுகின்ற குப்பைகளும் பொறுப்பேற்கப்படுகின்றன.

எனினும் இவ்வாறு குப்பைகள் சேகரித்து, அகற்றிச் செல்லப்பட்ட பின்னரும் சிலர் வேண்டுமென்றே பொறுப்பற்ற முறையில் மேற்படி சந்திகளிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனர். சட்டத்தை மதிக்காமலும் பொதுநலன் சார்ந்த உணர்வு எதுவுமில்லாமலும் செய்கின்ற இந்த ஈனச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

கண்டிமூடித்தனமான இச்செயற்பாட்டினால் நகரின் இவ்வாறான முக்கிய இடங்கள் மாசுபட்டு, துர்நாற்றம் வீசுவதுடன் மிக அசிங்கமாகவும் காட்சியளிக்கின்றன. மேலும், பிரதான வீதியினால் செல்கின்ற உள்ளூர், வெளியூர் பயணிகளுக்கு இவை அருவருப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் முழு நகரத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தப்படுகின்றது.

ஆகையினால், இச்செயற்பாட்டில் இருந்து சம்மந்தப்பட்டோர் உடனடியாக தவிர்ந்து கொள்ள வேண்டும். நாளை தொடக்கம் இவ்விடங்களிலும் ஏனைய பொது இடங்களிலும் குப்பை போடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்களைக் கண்டறிவதற்காக மாநகர சபை ஊழியர்கள் சிலர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சி.சி.ரி.வி. காட்சிகளும் பெறப்படவுள்ளன. இவ்வாறு கண்டறிப்படும் நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகர முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு ஊர் நலன் விரும்பிகளும் அமைப்புகளும் கரிசனையுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts