வெளிநாடு | அரசியல் | 2021-06-15 14:50:21

இஸ்ரேலின் 13-வது பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றாா், பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேலில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்தவர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீது ஊழல் மற்றும் மோசடி புகார்கள் எழுந்தன. இதையடுத்து மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு சரிந்தது.

இதனால் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி வெற்றி பெற்றபோதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதன் பின்னர் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் லிக்குட் மற்றும் புளு அண்ட் ஒயிட் கட்சியில் கூட்டணியில் ஒற்றுமை அரசு நிறுவப்பட்டது. ஆனாலும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சில மாதங்களிலேயே அரசு கலைந்தது. இதன் விளைவாக கடந்த மார்ச் மாதம் 4-வது முறையாக பொது தேர்தல் நடந்தது.

இதில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறவில்லை. சிறிய கட்சிகளின் ஆதரவோடு புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூ முயற்சித்த போதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. வேறு எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லை என்பதால் இஸ்ரேலில் மீண்டும் 5-வது முறையாக பொதுத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் திடீர் திருப்பமாக இஸ்ரேலின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு எதிராக கூட்டணி அமைத்தன. ஆட்சியமைப்பதற்கு 60 இடங்கள் தேவை என்கிற நிலையில் 8 கட்சிகளை உள்ளடக்கிய இந்த எதிர்க்கட்சி கூட்டணிக்கு 61 இடங்கள் உள்ளன. அதன்படி எதிர்க்கட்சி கூட்டணி புதிய ஒற்றுமை அரசை நிறுவின.

இந்த நிலையில் இந்த புதிய அரசுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நாடாளு மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.

ஒரு உறுப்பினா் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, இஸ்ரேலின் 13-வது பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றாா். இதன்மூலம் இஸ்ரேலில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள பென்னட்டிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இஸ்ரேலின் பிரதமர் ஆகியிருப்பதற்கு வாழ்த்துக்கள். இந்தியா - இஸ்ரேல் இடையேயான தூதரக ரீதியிலான உறவு அடுத்த ஆண்டுடன் 30 ஆண்டுகளை எட்டும் நிலையில் உங்களை சந்தித்து இரு நாடுகளிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பென்னட், “வாழ்த்து தெரிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பை மேலும் வலுப்படுத்துதற்காக உங்களோடு இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts