உள்நாடு | அரசியல் | 2021-06-08 16:26:09

தேவையுடையோருக்கு உதவ "அயலவருக்கு உதவுவோம்" திட்டம் ஆரம்பிக்கப்பட்டது !

-நூருல் ஹுதா உமர்-

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா மூன்றாம் அலை இப்போது நாளொன்றுக்கு மூவாயிரம் பேரை தாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. இதனால் நாட்டில் பல்வேறு சிக்கல் நிலைகள் தொடங்க ஆரம்பித்துள்ளது. இதில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது பட்டினியும், பசிக்கொடுமையுமே. இதனை இல்லாதொழித்து நாங்கள் சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமையை உதவும் பண்பில் உருவாக்க வேண்டும். இதனை மையமாக கொண்டு "அயலவருக்கு உதவுவோம்" எனும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம் என அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

இன்று (08) அக்கரைப்பற்றில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், வீதிக்கு இறங்கி நிவாரணம் சேமித்தல், பள்ளிவாசல்கள், மத ஸ்தலங்களில் பொருட்களை சேகரித்து பங்கிடுவது என்பன இந்த காலகட்டத்தில் செய்யமுடியாமல் உள்ளதனால் உங்களுக்கு அண்மையில் வசிப்போரின் நிலையறிந்து உங்களினால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலம் பட்டினி நிலையை இல்லாதொழிக்கலாம். இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும், உறவுகளின் அன்பை சம்பாதிக்கவும் இந்த காலகட்டம் சிறந்த ஒரு சந்தர்ப்பமாகும். மரணம் எப்போதும் எம்மை சந்திக்கலாம் அதற்கு முன்னர் தான தர்மங்களை செய்வது எமக்கு மனநிம்மதியை தருவதுடன் இறைவனிடமும் நன்மையை பெற்றுத்தரும்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அன்றாட கூலிகள் தொழில்களை இழந்து, சுயதொழில் கூட செய்யமுடியாத சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளதால் உதவிகள் தேவைப்படுவோர் அதிகமாக உள்ளனர். அரசினால் வழங்கப்படும் உதவிகள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதாமல் உள்ளதால் "அயலவருக்கு உதவுவோம்" எனும் இந்த திட்டத்தின் மூலம் மக்களின் பசியை போக்க முயற்சிகளை செய்துவருகிறோம். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உதவிகள் வர ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டில் உள்ள உறவுகள், தனவந்தர்கள் இந்த திட்டத்தில் தாங்களும் இணைந்து கொண்டு தேவையுடைய மக்களுக்கு உதவ  0767443772 எனும் தொலைபேசி மற்றும் வாட்ஸாப் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளமுடியும் என்று மேலும் தெரிவித்தார்.
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts