பிராந்தியம் | சமூக வாழ்வு | 2021-06-04 14:33:39

உஸ்தாத் அப்துல் காதர் சமூக விடயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்; அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா அனுதாபம்

(அஸ்லம் எஸ்.மௌலானா,றாசிக் நபாயிஸ்)

உஸ்தாத் அப்துல் காதர் அவர்கள் சிறந்த மார்க்க அறிஞராக திகழ்ந்ததுடன் சமூக விடயங்களிலும் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வந்துள்ளார் என அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

உஸ்தாத் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் காதர் (மிஸ்பாஹி) அவர்கள் வியாழக்கிழமை (03) தனது 72ஆவது வயதில் வபாத்தானதையிட்டு அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச் ஆதம்பாவா (மதனி), செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் நாஸிர் கனி (ஹாமி) ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

1949-02-02ஆம் திகதி சம்மாந்துறையில் முஹம்மது இப்றாஹிம், மர்யம்கன்டு தம்பதியினருக்கு புதல்வராக பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியை சம்மாந்துறை அல்மர்ஜான் வித்தியாலயத்தில் கற்றுவிட்டு, மார்க்க கல்வியை தென்னிந்தியா நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அறபுக் கல்லூரியில் கற்று, 1975 ஆம் ஆண்டு மௌலவியாக வெளியேறினார். பின்னர் ரியாத் மலிக் ஸுஊத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து பட்டதாரியாகவும் வெளியேறினார். 1976ஆம் ஆண்டு அஜ்ஜுமுகம்மது ஸல்மா என்பவரைத் திருமணம் முடித்து குடும்ப பந்தத்தில் இணைந்த இவர் 11 பிள்ளைகளுக்கு தந்தையானார்.

உஸ்தாத் அஷ்ஷெய்க் அப்துல் காதர் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழு உறுப்பினராகவும் 2013 தொடக்கம் 2019 வரை சம்மாந்துறை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராகவும் செயற்பட்டதுடன் நீண்ட காலமாக அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தொடர்ந்தும் செயற்பட்டு வந்தார். இவர் மாவட்ட சபைக் கூட்டங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் தவறாமல் சமூகமளிக்கும் கடமையுணர்வைக் கொண்டிருந்தார். கூட்டக்களில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அடக்கமாகவும் பணிவாகவும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் நல்கி வந்தார்.

சமூக விடயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டி வந்த இவர் விவாகப் பதிவாளராகவும் ஸகாத் நிதியத்தின் தலைவராகவும் கதீபாகவும் மத்தியஸ்த்த சபையின் உறுப்பினராகவும் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிபராகவும் பிரதி அதிபராகவும் நீண்ட காலமாக விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்தார்.

இவர் இஸ்லாமிய சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்ததால் இவரிடம் கல்வி கற்ற பல நூறு மாணவர்கள் இவரின் சட்ட புலமையிலிருந்து கூடுதலான அறிவுகளைப் பெற்றமை விசேட சிறப்பம்சமாகும்.
உஸ்தாத் அப்துல் காதர் அவர்கள் தன்னிகரில்லா அடையாளங்கள், பண்புகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தார்கள். இறையச்சம், பேணுதல், அடக்கம், பணிவு, மன்னித்தல், மன்னிப்புக் கோரல், அன்பு, ஆதரிப்பு, பொறுமை, குடும்ப உறவுகளைப் பேணல் ஆகிய சில பண்புகள் எடுத்துக் காட்டுக்குரியனவாகும்.

அன்னார் வபாத்தானதையிட்டு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆழ்ந்த கவலையடைகின்றது.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் ஆறுதலை அளிக்குமாறும் சமய, சமூக, கல்வி, கலாசார விவகாரங்களில் அவர் காட்டிய தியாகம், அர்ப்பணிப்புக்களை அங்கீகரித்து ஜன்னதுல் பிர்தௌஸை கொடுத்தருள எமது ஜம்இய்யதுல் உலமா பிரார்த்திக்கின்றது- என அந்த அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts