பிராந்தியம் | அரசியல் | 2021-05-16 00:06:33

தமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை : மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்

-நூருல் ஹுதா உமர்-

எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவளித்துக்கொண்டிருந்த போது சாணக்கியன் முஸ்லிங்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார். தைரியமாக குரல் எழுப்பிய சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுமந்திரன் ஆகியோரும் குரல் கொடுத்தார்கள். அவர்களை முஸ்லிங்களாகிய நாங்கள் மதிக்கிறோம். கல்முனை  உப பிரதேச செயலகம் தொடர்பிலான கருத்து பிழையாக இருந்தாலும் அதனை நேரடியாக தொடர்புகொண்டு எந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன என்பதை அறிய உள்ளேன். கல்முனை  உப பிரதேச செயலகம் என்பது கிளறினால் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்- முஸ்லிம் உறவை பிரிக்கும் மையப்புள்ளியாக இது இருந்து வருகிறது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

அம்பாறை ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக இணைந்து அரசியல் செய்ய வேண்டும், ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும்.அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை உண்டாக்க பாடுபடுகிறோம். புரிந்துணர்வின்மையினால் அது கரையான் போன்று இருந்துவருகிறது. பெருந்தேசிய வாதமும் இதற்கு எதிராக உள்ளது. கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்பது வியாழேந்திரன், கருணா, ஹரீஸ் போன்றவர்கள் இதுவரை எடுத்துக்கொண்ட பிரச்சினையாக இருந்து வந்தது. அதனை இப்போது சாணக்கியன், சுமந்திரன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விக்னேஸ்வரன் ஆகியோரும் இப்போது கையிலெடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழவேண்டும் என்று கூறிக்கொண்டு மறுமுனையில் கல்முனையில் பிரிந்திருந்திருக்க வேண்டும் என்று கேட்பது எவ்வகையில் நியாயம். 60 வீதமான மக்களுக்கு 30 வீதமான நிலப்பரப்பும், 37 வீதமான மக்களுக்கு 60 வீதமான நிலப்பரப்பும் கேட்பது அநீதியான, இனவாத ரீதியான நயவஞ்சக போக்கினை காட்டுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் முஸ்லிம் உறவை பற்றி பேசிக்கொண்டு மறுமுனையில் அதற்கு எதிராக செயற்படுவது நியாயமில்லை. கல்முனை பல்லினம் வாழும் நகரம். அதனை அப்படியே பாதுகாப்பதா? இல்லை குரங்கின் கையில் அகப்பட்ட பூ மாலையாக கல்முனையை மாற்றுவதா? இல்லை யாருக்கும் நன்மை பயக்காத வகையில் கல்முனையை மாற்றுவதா எனும் கேள்வி எமக்கு எழுகிறது.

20 நாட்களான குழந்தையின் ஜனாஸா எரிக்கப்பட்டபோது தனது சொந்தப்பிள்ளை எரியூட்டப்பட்டது போன்று கொதித்த சாணக்கியன், சுமந்திரன் போன்றோர் வியாழேந்திரன், கருணா, ஹரீஸ் போன்று செயற்பட்டது வேதனையளிக்கிறது. அந்த பிரதேச செயலகம் விடுதலை புலிகளின் ஆயுதமுனையில் வன்முறையின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டது. அதற்கு நியாயம் கற்பிக்க முடியாது. அதிகாரப்பூர்வமான பிரிப்புக்கள் 1987க்கு முன்னர் இருந்திருக்கிறது. பிரிக்க எத்தணிப்பதாக இருந்தால் அந்த புள்ளியில் இருந்துதான் பிரிக்க முனையவேண்டும். பிரிப்பதில் எனக்கு எவ்வித உடன்பாடுகளை இல்லை. எமது நகரில் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே எனது வாதம் என்றார். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts