உள்நாடு | அரசியல் | 2021-05-07 19:39:07

கல்முனை விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் - பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை விவகாரத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் தனிப்பட்ட கருத்து வேற்றுமைகளை மறந்து ஒரு குழுவாக இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்று அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் கேரிக்கை விடுத்துள்ளது.  அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று (07) மாலை கல்முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் டொக்டர். எஸ். எம். அப்துல் அஸீஸ் கருத்து தெரிவித்தார் இதன்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது அண்மைக்கால உரைகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார். இதன் போதே இவ்வாறு தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர்,  தொடர்ந்து உரையாற்றும் போது,

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பவராக ஆரம்பத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இன்று முஸ்லிம் சமூகத்தின் முதுகுகளில் குத்துகின்ற ஒருவராக  உண்மையான முகத்தை காட்டியுள்ளார். கல்முனை தொடர்பாக இவர் வெளியிட்ட கருத்துக்கள் கவலையளிக்கிறது. இவர் அரசியலுக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் அரசியல் அனுபவம் இல்லை.  விடயங்களை நன்கு அறிந்து உரையாற்ற வேண்டும்.

கல்முனை மாநகரம் முஸ்லிம் சமூகத்தின் இதயம் இதனை ஏனைய சமூகங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. கல்முனை மாநகரத்தின் பூர்வீக வரலாற்று நெடுகிலும் இதனுடைய ஆளுகை முஸ்லிம் சமூகத்தை சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் ஏராளம் உள்ளன.

கல்முனையில் முஸ்லிம்கள் 70 வீதமும் தமிழர்கள் 30 வீதமும் வாழ்ந்து வருகின்ற னர். வரலாற்றை புரட்டிப் பார்த்தால் முஸ்லிம்களின் கேந்திர மத்திய நிலையமாக கல்முனை இருந்து வந்திருப்பதை அறியலாம்.

அரசியல் ரீதியாக கிராம ஆட்சி முறைமை இருந்த காலப்பகுதிகளில் கல்முனை ஸாகிறா கல்லூரி தொடக்கம் பாண்டிருப்பு தாள வட்டுவான் வரைக்கும் முஸ்லிம்களின் ஆள்புல எல்லையாக இருந்தது. இதனை தமிழர் சமூகமும் நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள்

பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்ட போது யுத்த சூழலை காரணம் காட்டி கல்முனையின் உப பிரதேச செயலகமாக இயங்கிய இந்தப் பிரதேச செயலகம் பின்னர் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்றும், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்றும் அவர்களாகவே பெயர்களை மாற்றிக் கொண்டார்களே தவிர, உப பிரதேச செயலகம் என்ற இதன் பெயர்  உண்மையில் தரக்குறைவு கிடையாது. இதனை இன்று வடக்கு-கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிழையாக விளங்கி முஸ்லிம்களையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தூற்றுவது வேதனை தருகிறது.

கல்முனை உப பிரதேச செயலகத்தின் எல்லைக்குள் முஸ்லிம்களின் 90 வீதமான வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள், ஆள்புல எல்லைகள், மாநகர சபை, பிரதேச செயலகம், பொலீஸ் நிலையம், கல்முனை பிரதான சந்தைக் கட்டடத் தொகுதி, உட்பட வயல் நிலங்கள் என இங்கு வாழும் முஸ்லிம் மக்களின் வாழ்விடங்கள் இந்த எல்லைக்குள் காணப்படுகின்றன.

இவற்றை பாராளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்து பேசுவதன் ஊடாக சாதித்துவிட முடியாது. மாறாக இங்கு வாழும் தமிழ் - முஸ்லிம் மக்கள் மிக நீண்ட காலமாக அன்னியொன்னியமாக வாழ்ந்து வருகின்றனர்.

முதலில் நாம் நமக்குள் ஒன்றுபட்டு பேச வேண்டும். ஒரு சரியான எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதன் ஊடாகத் தான் ஒரு முறையான ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்ட தீர்வைப் பெற முடியும். இரண்டு சமூகங்களும் ஒற்றுமையோடு வாழ முடியும் எல்.ரி.ரி. பயங்கரவாதிகளின் தாக்குதல் கல்முனை மாநகரத்தை அழித்த பொழுது அதை எதிர்கொண்டு நின்று மாநகரத்தை பாதுகாத்தவர்கள் முஸ்லிம் சமூகத்தவர்கள் என்பதை அரசாங்கமும் ஆட்சியாளர்களும் நன்கு அறிந்துள்ளார்கள்.

காரைத்தீவில் தமிழ் பிரதேச செயலகத்தின் கீழ் மாளிகைக்காடு, மாவடிப் பள்ளி முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். அதே போல நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் 40 வீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்படியானால்  கல்முனையில் மட்டும் ஏன் தமிழர்களுக்கு நல்லிணக்கத்துடன் வாழ முடியாது? என்று கேட்கத் தோன்றுகிறது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இவைகள் மக்களுக்கான அரச சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இவற்றை இனரீதியாக கேள்விக்குட்படுத்தும் சாணக்கியன் அவர்களுடைய கருத்து நகைப்புக்குரியது. இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்த பிராந்தியத்தில் வாழுகின்ற சகல சமூகங்களுக்கும் சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை நாம் இன்று கண் முன்னே கண்டு கொண்டிருக்கின்றோம்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக எவ்வாறு ஒன்றிணைந்து கொண்டு குழுவாக நின்று போராடுகிறார்களோ அதே போன்று கல்முனை விவகாரத்தில் ஒரு நிரந்தரமான தெளிவான தீர்வை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் ஒன்றாக இணைய வேண்டும். என்ற கோரிக்கையையும் நாம் முன்வைக்கின்றோம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் அம்பாரை மாவட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts