வெளிநாடு | குற்றம் | 2021-04-19 11:23:52

"நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளும் ரஸ்யா எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னியின் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கவலை தெரிவித்துள்ளன.

வலது கால் மரத்துப்போய், முதுகுவலியால் அவதிப்படும் நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் சில நாள்களில் அவர் இறக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் ரஷ்யா இதை மறுக்கிறது. கவனம் பெறுவதற்காக நவால்னி இப்படி நடந்து கொள்வதாகக் கூறும் பிரிட்டனுக்கான ரஷ்ய தூதர், "அவரை சிறையில் சாக விடமாட்டோம்" என்றார்.

பழைய பணமோசடிக் குற்றச்சாட்டின்கீழ் கடந்த பிப்ரவரி மாதம் அலெக்ஸே நவால்னி சிறையில் அடைக்கப்பட்டார். அதிபர் விளாதிமிர் புதினைக் கடுமையாக விமர்சிக்கும் நவால்னி, தன்மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுகிறார்.

நவால்னி அடைக்கப்பட்டிருக்கும் சிறை தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொக்ரோவ் என்ற பகுதியில் அமைந்திருக்கிறது.

தனது மருத்துவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறி கடந்த மாரச் 31-ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் நவால்னி. அவரது சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய ரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நவால்னி நடத்தப்படும் விதம் குறித்து பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

"நவால்னிக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை நியாயமற்றது, முற்றிலும் பொருத்தமற்றது" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவன் சிஎன்என்-க்கு பேசும்போது, "நவால்னி இறந்தால் கடும் விளைவுகள் ஏற்படும். சர்வதேச சமூகம் ரஷ்யாவைப் பொறுப்பாக்கும்" என்று கூறினார்.

அலெக்ஸி நவால்னிக்கு கடந்த ஆண்டில் நோவிசோக் என்று ரசாயன நஞ்சு அளிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்றார். இது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அரசுமுறை மோதலை ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறது.

நவால்னிக்கு நோவிசோக் நஞ்சைச் செலுத்துவதற்கு அதிபர் புதின் உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் மாளிகை மறுக்கிறது. ஆனால் நஞ்சு செலுத்தப்பட்டற்குப் பின்னணியில் ரஷ்ய அரசாங்கம் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவு ஆய்வு செய்து முடிவுக்கு வந்தது. இதன் பிறகு மூத்த ரஷ்ய அரசு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts