கல்வி | கல்வி | 2021-04-06 16:01:05

மருதமுனையின் கல்விப் புரட்சி எல்லா எல்லா பிரதேசங்களுக்கும் பரவ வேண்டும் -   எம்.ரீ.ஏ. நிஸாம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ், பி.எம்.ஏ.காதர்,றாசிக் நபாயிஸ்)


மருதமுனையின் கல்விப் புரட்சி எல்லாம் பிரதேசங்களுக்கும் பரவ வேண்டும் என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ நிஸாம் தெரிவித்தார்.
 

மருதமுனை பிரதேசத்தில் மூத்த கல்விமான்  ஓய்வு நிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமது அவர்களின் 41 வருட கால கல்விப் பணியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் 'கல்விப் பணியில் ஏ.எம்.ஏ.சமது' எனும் நூல் வெளியீட்டு நிகழ்வும் நேற்று (03.4.2021)  மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் அதிபர் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தியோடு எனது உரையை தொடங்குகின்றேன். கல்முனை கல்வி வலயத்தில் நான் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற காலத்தில் அதிபர் சமது அவர்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு ஆரம்பித்தது. சமது அவர்கள் தைரியமாக கேள்விகளைக் கேட்கக் கூடியவர் சமூகத்தின் நலன் கருதி தீர்க்கமான தீர்மானங்களை எடுத்த ஒருவர்.

இன்று ஷம்ஸ் மத்திய கல்லூரி தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. என்னுடைய தொழில் வாழ்க்கையில் நான் கண்டிராத அதிசயங்களில் ஒன்று சமது அதிபர் அவர்களின் அதிபர் சேவைக்கு பின்னால் ஷம்ஸ் மத்திய கல்லூரியில் அதிபர் சேவையை பொறுப்பேற்றுக்கொண்ட எல்லா அதிபர்களும் ஒரே வரிசையில் வருவார்கள். பாடசாலையின் நலன் கருதி அதன் வளர்ச்சியில் இவ்வாறு அதிபர்கள் எல்லோரும் ஒன்றாக நின்று பணியாற்றுவதை இந்தப் பாடசாலை தவிர நான் எங்கும் கண்டது கிடையாது.

ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து இவர் என்னுடைய மாணவர் என்பதிலும் பார்க்க. மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து இவர் எனக்கு கற்றுத்தந்தவர் என்று சொல்லுவதே மிகச்சிறந்த கௌரவமாகும். அந்தப் பட்டியல் சமது அதிபர் அவர்களுக்கு அதிகமான இடமிருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மருதமுனை கிராமம் கல்வியை பிரதானமான தொழிலாகக் கொண்டு ஒரு கல்விப் புரட்சியை செய்து கொண்டிருக்கின்ற ஒரு மண்ணாகும். இது ஏனைய பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்கு சமது அதிபர்கள் போன்றவர்களுடைய அனுபவம் தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்  

நூல் நயவுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை தலைவர் கலாநிதி எம். எம்.பாஸில் நிகழ்த்த நூல் பற்றிய சிறப்புரையை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் வீடியோ தொழில்நுட்ப முறை மூலம் உரையாற்றினார்.

வெளியீட்டு உரையை நூலாசிரியரியரும் விரிவுரையாளருமான ஏ.ஜெ.எல்.வஸீல் நிகழ்த்தியதுடன் நூல்  பிரதியை ஓய்வு நிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமது அவர்களிடம் கையளித்தார். இதனைத் தொடர்ந்து நூலின் முதல் பிரதிகள் பிரதம அதிதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

ஓய்வு நிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமது அவர்களின் சேவையைப் பாராட்டி ஊர் பிரமுகர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி இங்கு கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் நீதிபதிகள், திணைக்கள தலைவர்கள், விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், நிர்வாக சேவை உயர் அதிகாரிகள், இலக்கியவாதிகள் பிரதேசத்தின் மூத்த கல்வியலாளர்கள் உட்பட பாடசாலையின் அதிபர்கள், பழைய மாணவர்கள், அதிபரின் குடும்ப உறவினர்கள், என பலர் கலந்து கொண்டனர்.  


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts