உள்நாடு | சமூக வாழ்வு | 2021-04-05 23:15:35

கல்வி மறுசீரமைப்புக்கு தொழிற்சங்கங்களின் கருத்துகள் பெறப்பட வேண்டும்

(அஸ்லம் எஸ் மௌலானா)

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கல்வித்துறைசார் தொழிற்சங்கங்களின் கருத்துக்களை கல்வி அமைச்சு கோர வேண்டுமென இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார், கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கல்வித்துறையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் சீர்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளமை மிகவும் வரவேற்கக் கூடிய விடயமாகும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் 1996 ஆம் ஆண்டு இறுதியாக கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மாறிவரும் உலகமயமாக்கலுக்கு ஏற்ப இலங்கையின் கல்வித்துறையில் புதிய நவீன மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். பாடசாலை கலைத்திட்டம், பாடசாலைக் கட்டமைப்பு, பரீட்சை நடைமுறைகள், தொழிற்கல்வி, விஞ்ஞான கல்வி, ஆசிரியர் கல்வி, பல்கலைக்கழக கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம்
செலுத்த வேண்டியுள்ளது.

கல்வித்துறை சிறப்பாக இயங்குவதற்கு கல்விசார் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அரசாங்கம் கல்வி முறைசார் மாற்றங்களை கொண்டு வந்தபோதும் அதனை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றியடைய வைப்பவர்கள் அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகளாவர்.

இவர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு கல்வி முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானதாகும் என்பதனை கல்வி அமைச்சும் கொள்கை வகுபாளர்களும் உணர்ந்து கொள்ள முன்வர வேண்டும். ஆகையினால் புதிய கல்வி சீர்திருத்தப் பணிக்கு கல்வித்துறை சார்ந்த தொழிற்சங்கங்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts