வெளிநாடு | சமூக வாழ்வு | 2021-03-23 11:25:57

பாகிஸ்தானின் தேசிய நாள் இன்று : அக்கினி சிறகு விரித்த தேசத்தின் வரலாற்று சிறப்பு பார்வை

(ஹுதா உமர்)

2021 மார்ச் 23 அன்று பாகிஸ்தானின் தேசிய நாள். எதிர்காலத்தை காட்சிப்படுத்துவதற்காக வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானின் உருவாக்கம் ஒரு மிகப்பெரிய சாதனை என்பதே வரலாறு. நாட்டை கட்டியெழுப்ப இந்திய துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம் சமூகம் ஆளும் பிரிட்டிஷ் காலனித்துவ சக்தியின் எதிர்ப்பையும் பெரிய முஸ்லிம் அல்லாத சமூகத்தையும் முறியடிக்க வேண்டியிருந்தது. சுயாதீனமானவுடன், ஏழு மில்லியன் அதிர்ச்சிகரமான அகதிகள், தொழில்துறை தளம் இல்லை, ஒரு சிறிய ஆயுதம் ஏந்திய இராணுவம் மற்றும் பகுத்தறிவற்ற கூற்றுக்கள் கொண்ட விரோத அண்டை நாடுகளுடன் யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. பல வெளிநாட்டு பார்வையாளர்களும் அயலவர்களும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்கள் மிகப் பெரியவை, இந்த புதிய நாடு பிழைக்காது என்று மதிப்பிட்டனர். அவற்றெல்லாம் உடைத்துக்கொண்டு துளிர்த்த நாடே பாகிஸ்தான்.

பாகிஸ்தான் ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் உருதுச் சொல்லுக்குப் பொருள், (பாக் + ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத். இருந்தாலும் கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம்.

180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான், மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது. 796,095 கிமீ2 (307,374 சதுர மைல்) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமன் குடாவில் 1,046-கிலோமீட்டர் (650 mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானிஸ்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதியால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முஸ்லிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசிடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துராணிப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாகிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாகிஸ்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் என்ற பெயரில் உதயமானது.

பலூச்சிஸ்தான், கைபர் பக்தூன்க்வா, பஞ்சாப், சிந்து என நான்கு மாநிலங்களும், நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாகிஸ்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது. உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாகிஸ்தான் அணுவாற்றல் மற்றும் அணு ஆயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக விளங்குகின்றது. முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாகிஸ்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

விடுதலைக்குப் பின்னரான பாகிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாகிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. மிகுமக்கட்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ஹேப்பி பிளானட் குறியீட்டில் 16வதாக வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் பாகிஸ்தான் உறுப்பினராக உள்ளது.

பாகிஸ்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாகிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாகிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

பாகிஸ்தான் அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம் என்பது வெளிப்படையான உண்மை. பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது என்பது வரலாறு சொல்லும் உண்மை. பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது எனினும் அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாகிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அதிபராக இருந்தார். முஷாரப் – பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். என்பது பாகிஸ்தானின் வரலாற்றில் ஒரு தடயமாக பதிந்துள்ளது.


பாகிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் முக்கியமான ஒன்று. பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவை நம்பியே இந்த நாட்டின் பொருளாதாரம் உள்ளது. இராணுவ பலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே பாகிஸ்தான் உள்ளது. அதுமட்டுமின்றி மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் இந்த நாட்டுக்கு உண்டு. ஆப்கானிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் இந்த நாட்டுக்கு உண்டு.

நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம் எனும் குறிக்கோள்களை கொண்ட பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற கிரிக்கட் வீரரான இம்ரான் கான் இப்போது பிரதமராக இருக்கிறார். மேலும் சோதனைகள் நிறைந்த வரலாறும் இந்த நாட்டுக்கு இருக்கிறது. இயற்கை பேரழிவுகள் கூட பாகிஸ்தானை விடவில்லை. அக்டோபர் 2005 பூகம்பம் ஒரு சில மணி நேரங்களுக்குள் 67,000 மக்களைக் கொன்றது, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டின் வெள்ளம் நாட்டின் பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளை மூழ்கடித்தது, ஆனால் நாடு மீண்டும் எழுந்தது. இதேபோல், கொரோனா வைரஸ் முதன்முதலில் பிப்ரவரி 2020 இன் பிற்பகுதியில் பாகிஸ்தானுக்கு வந்தபோது, அதிகரித்த நோய் சுமையை நிர்வகிக்கும் நாட்டின் திறனைப் பற்றி பரவலான கவலை இருந்தது. மற்ற பிராந்தியங்களிலிருந்து மக்கள் வீடு திரும்பியதால் கோவிட் -19 விரைவாக அதிகரித்து வந்தது. மேலும் பொது சுகாதார அமைப்பு அவசரமாக வலுப்படுத்தப்பட வேண்டும் எனும் நிலை உருவானது. இவற்றெல்லாம் தாண்டி சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கும் பாகிஸ்தான் இன்று தன்னுடைய தேசிய தினத்தை கொண்டாடுகிறது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts