கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2021-03-17 20:53:54

கிழக்கின் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடி மூத்த இலக்கியவாதி கலாபூசணம் எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யிது ஹஸன் மௌலானா காலமானார்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கிழக்கின் மூத்த இலக்கியவாதியும், தமிழறிஞரும், ஓய்வுபெற்ற  ஆசிரியருமான கலாபூசணம் அல்ஹாஜ்.எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யிது ஹஸன் மௌலானா அவர்கள் நேற்று (17.03.2021) அதிகாலை நிந்தவூரில் காலமானார்.

1937ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி மருதமுனையில் பிறந்த செய்யிது ஹஸன் மௌலானா அவர்கள்,

இஸ்லாமிய தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாடுகளை உலகின் பல பாகங்களிலும் நடத்த உந்து சக்தியாக விளங்கியவர்.

1960ம் ஆண்டு அனைத்துலக இஸ்லாமிய ஆராய்ச்சி மாநாடுகளுக்கான முதல் விழாவை பிரதம அமைப்பு நிர்வாகியாக இருந்து அவர் பிறந்த ஊரான மருதமுனையில் சிறப்புற நடத்தி வெற்றி கண்டார்.

இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகைகள்,சஞ்சிகைகள் போன்றவற்றில் கவிதைகள், இலக்கிய கட்டுரைகள் போன்றவற்றை எழுதிப் புகழ்பெற்ற இவர் முகைதீன் புராணம் என்னும் காப்பியத்துக்கு உரையும் , இஸ்லாமிய தமிழ் இலக்கிய சொற்பொழிவுகள், அரபுத் தமிழ் கவிதைகளின் யாப்பமைதி மற்றும் இஸ்லாமும் தமிழும் இலக்கிய சங்கமம் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார்.

புலவர்மணி ஆ.மு..சரிபுத்தீன் அவர்களின் மாணவராகிய இவர் 1993ம் ஆண்டு; முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சினால்  'தாஜுல் அதீப்' என்னும் பட்டம் வழங்கி  கௌரவிக்கப்பட்டார்.

அகில உலக இஸ்லாமிய தமிழிலக்கிய ஆறாவது மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற்றபோது தமிழறிஞர் ,கலைஞர் மு.கருணாநிதி அவர்களினால் பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கி நினைவுச் சின்னமும் பாராட்டுப் பத்திரமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டிலும்  'இஸ்லாமிய இலக்கிய காவலர்' என மகுடம் சூட்டப்பட்டார்.

2015ம் ஆண்டு கம்பன் கலைக் கழகத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு விழாவில் பாராட்டும், அறக்கட்டளை விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கின் இலக்கிய முதுசங்களில் ஒருவரான செய்யிது ஹஸன் மௌலானா அவர்கள் அண்மைக் காலமாக நோய்வாய்பட்டிருந்த நிலையில் நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான செய்யிது ஹஸன் மௌலானா அவர்களின் இழப்பு தென்கிழக்கு இஸ்லாமிய தமிழ் இலக்கியத் துறையில் ஈடு செய்ய முடியாத வெற்றிடமாகும்

இவரது ஜனாஸா நல்லடக்கம் (17.03.2021) காலை 7.00 மணிக்கு நிந்தவூர் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts