உள்நாடு | சமூக வாழ்வு | 2021-02-07 19:18:15

கல்முனை புகுந்த வீடாயினும் நிறைய சேவையாற்றியவர் சட்டத்தரணி தாஹா; பள்ளிவாசல் தலைவர் அஸீஸ் பெருமிதம்

(அஸ்லம் எஸ் மௌலானா)

காலம்சென்ற மூத்த சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்களுக்கு கல்முனை புகுந்த வீடாயினும் இப்பிரதேசத்திற்கு நிறைய சேவையாற்றியுள்ளார்கள் என கல்முனைக்குடி முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

காலம்சென்ற கிழக்கின் முதுபெரும் வழக்கறிஞரும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்களுக்கான ஜனாஸா தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வு கல்முனைக்குடி முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று ஞாயிறு (07) பிற்பகல் ளுஹர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. இதில் தலைமை வகித்துப் பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

எங்கள் மண்ணில் மிகவும் கண்ணியத்துடன் வாழ்ந்த மூத்த சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்கள் புன்முறுவலுடன் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகி வந்த ஒரு சிறப்புக்குரிய மனிதர். அவர் இந்த மண்ணில் ஒரு முன்மாதிரியான சட்டத்தரணியாக சேவையாற்றியிருக்கிறார்.

அவர் அக்கரைப்பற்றில் பிறந்து, கல்முனையில் திருமணம் முடித்து நீண்ட காலம் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார். என்றாலும் தானும் தன் தொழிலும் என்று அவர் இருக்கவில்லை. இப்பிரதேசத்திற்கும் இப்பள்ளிவாசலுக்கும் பாரிய சேவைகளை செய்திருக்கிறார். இந்த பள்ளிவாசல் சம்மந்தப்பட்ட வழக்குகள் அனைத்திலும் பள்ளிக்கு சார்பாக அவரே ஆஜராகியிருக்கிறார். பள்ளிவாசல் கட்டுமாணத்தில் அவரும் குடும்பத்தினரும் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர்.

அவரது சேவைகளை வல்ல இறைவன் பொருத்திக்கொள்ள வேண்டும் என பிரார்த்திக்கிறோம்- என்று குறிப்பிட்டார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஆரிப் சம்சுதீன் உட்பட அரசியல் பிரமுகர்களும் பெரும் எண்ணிக்கையிலான சட்டத்தரணிகள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை ஜம்மியத்துல் உலமா தலைவர் ஜனாஸா தொழுகையையும் பள்ளிவாசல் இமாம் துஆப் பிரார்த்தனையும் நடாத்தி வைத்தனர்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர் நன்றியுரை நிகழ்த்தினார்.

சிரேஷ்ட சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்கள் வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் காலமானதுடன் அன்னாரது ஜனாஸா ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts