கட்டுரைகள் | சமூக வாழ்வு | 2021-02-04 20:25:34

ஒவ்வொரு குடிமகனுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கும்போதே நாட்டின் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும்;

(அஸ்லம் எஸ் மௌலானா )

இந்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்போது அவரவர் சமய, கலாசாரங்களுடன் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழக்கிடைக்கிறதோ அன்றுதான் எமது நாட்டின் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும் என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஆட்சியாளராக இருந்த ரொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் வெற்றிக்காக இனவாதத்தைக் கையிலெடுத்ததால், அவர் படுதோல்வியடைந்திருப்பதானது உலக அரசியல் அரங்கில் அனைத்து தலைமைகளுக்கும் ஒரு சிறந்த பாடமாக அமைந்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (04) கல்முனை வாசலில் இடம்பெற்ற கல்முனை மாநகர பிரதான விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றுகையிலேயே முதல்வர் ஏ.எம்.றகீப் இதனைக் குறிப்பிட்டார்.

மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

"முழு உலகையும் நிலைகுலையச் செய்திருக்கின்ற கொரோனா வைரஸ் எமது நாட்டிலும் தலைவிரித்தாடுகின்ற அபாயகரமான சூழ்நிலைக்கு மத்தியிலும் கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற எமது முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுகின்ற துக்ககரமான சூழ்நிலைக்கு மத்தியிலுமே நாங்கள் எமது தாய்நாட்ட்டின் 73ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுகின்றோம்.

இந்த நாட்டில் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை இடம்பெறுகின்ற இந்த சூழ்நிலையில் சுதந்திர தினத்தை தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் கொண்டாடத்தான் வேண்டுமா என்கிற ஆதங்கம் எல்லோர் மனதிலும் எழவே செய்கிறது. இதன் பிரதிபலிப்புகளை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

உண்மையில் நாம் கொண்டாடுவது அரசாங்கத்திற்கான சுதந்திர விழாவல்ல. இது நாம் பிறந்து, வளர்ந்து, பூர்வீகமாக குடியிருக்கின்ற எமது தாய் நாட்டுக்கான சுதந்திர விழாவாகும். இலங்கை என்பது சிறுபான்மையினராகிய எமக்கும் சொந்தமான தேசமாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது. அரசாங்கத்தின் மீதான அதிருப்திக்காக நாட்டின் சுதந்திரத்தை மறுப்போமாயின் அல்லது உதாசீனம் செய்வோமாயின் நாங்கள் இந்நாட்டுப் பிரஜைகள் அல்ல என்றோ அல்லது நாங்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் அல்ல என்றோ நாமே பிரகடனம் செய்வதற்கு ஒப்பாகிவிடும்.

இத்தேசத்தின் அரசு என்பதும் அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவையாகும். அரசாங்கமானது காலத்திற்கு காலம் மாறக்கூடியதாகும். அரசு என்பது நிலையானதும் சுதந்திரமானதும் இறைமை கொண்டதுமாகும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்துவதிலும் எங்களது உரிமைகளையும் அபிலாஷைகளையும் மழுங்கடிப்பதிலும் அவர்களை அடக்கி, ஒடுக்கி ஆள்வதிலும் முனைப்புக்காட்டியே வந்திருக்கின்றன.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மையினர் மீது தனிச் சிங்களச் சட்டத்தை திணித்தது முதல் பல்வேறு அநியாயங்கள் இழைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதனால் மூன்று தசாப்த காலம் எமது நாடு யுத்தத்தை சந்தித்து, பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களும் காவு கொள்ளப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து, கடன் சுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அந்த போரினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் நீங்கி விடவில்லை.

இந்த நீண்ட நெடிய பின்னணியிலேயே இன்றும் சிறுபான்மைச் சமூகங்கள் மீதான அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் இன்று வெவ்வேறு வடிவங்களில் விஸ்வரூபம் பெற்றிருக்கின்றன.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாங்கள் எந்த அநியாயத்தையும் சகித்துக் கொள்வோம். ஆனால் ஜனாஸா எரிப்பை மாத்திரம் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. அது எமது உயிரிலும் மேலான மார்க்க உணர்வுடன் சம்மந்தப்பட்ட விடயமாகும். நாட்டின் எந்த மூலையிலாவது ஒரு முஸ்லிம் ஜனாஸா எரிக்கப்பட்டுகின்ற செய்தியைக் கேள்விப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இதயத்தால் அழுகின்றோம்.

இந்த அக்கிரமத்தை சகிக்க முடியாமல்தான் எங்களில் பலர் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற மன நிலையில் இல்லை என்பதை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் நான் முன்னர் சொன்னது போன்று அரசு என்பதும் அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன, மத, கலாசார, மொழி வேறுபாடுகளைக் கடந்து, நாட்டுப் பிரஜைகளை ஒன்றிணைப்பது அரசாகும். இந்த அரசு என்பது அரசாங்கத்தில் நின்றும் வேறானது என்பதை நாங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய அரசுக்கு மதிப்பளிப்பதும் கௌரவிப்பதும் நாட்டுப் பிரஜைகள் அனைவர் மீதும் கடமையாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டதே தேசப்பற்றாகும்.

காலணித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து எமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்தே போராடினார்கள். அதுவே நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது. அவ்வாறு பெறப்பட்ட சுதந்திரத்தையே நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்கான அத்தனை உரிமையும் எமக்கிருக்கிறது.

நாட்டின் சுதந்திரம் என்பது ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ மட்டும் சொந்தமானதல்ல. ஆனால் அவ்வாறானதொரு நிலையை சிலர் தோற்றுவித்திருக்கின்றனர். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எப்போது அவரவர் சமய, கலாசாரங்களுடன் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழக்கிடைக்கிறதோ அன்றுதான் எமது நாட்டின் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும் என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் இந்த சுதந்திர தின விழாவைக் கொண்டாடுகின்றோம். இதன் மூலம் நாட்டில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும். அனைத்துப் பிரஜைகளும் நிம்மதி, சந்தோசத்துடன் வாழக்கூடிய சூழல் ஏற்பட வேண்டும். எமது இந்த விழா இதற்குக் கட்டியம் கூற வேண்டும். இது அரசாங்கத்திற்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் நல்ல செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும்.

இனங்களிடையே ஒற்றுமை, ஐக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் எல்லாம் துடைத்தெறியப்பட வேண்டும். நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரும் ஏனைய பிரஜைகளை மதித்து- தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவதற்குரிய காலம் மலர வேண்டும். நாட்டில் புரையோடிப்போயுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்ற எமது நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அனைவரும் இலங்கையர் என்ற கொடியின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இவற்றை சாத்தியப்படுத்த முடியும். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமான நாடொன்றை கையளிப்பதற்கு தேசத்தின் விடுதலை தினமான இன்றைய தினத்தில் அனைவரும் கைகோர்ப்போம்' என்றார்.

இந்நிகழ்வில் இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மற்றும் பௌத்த சமயப் பெரியார்கள், அரச, தனியார் நிறுவனங்களின் பிரதானிகள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts