உள்நாடு | சமூக வாழ்வு | 2021-01-11 17:07:15

கல்முனை மாநகர சபையில் 115 ஊழியர்களுக்கு பரிசோதனை; எவருக்கும் கொரோனா இல்லை

(அஸ்லம் எஸ் மௌலானா)

கல்முனை மாநகர சபையின் சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த இரு தினங்களாக கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் இப்பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதன்போது முதல் நாளன்று 75 ஊழியர்களுக்கும் இரண்டாம் நாள் 40 ஊழியர்களுக்கும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் முன்வந்து தம்மை பரிசோதனைக்குட்படுத்திக் கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தொற்று அச்சுறுத்தல் சூழ்நிலைக்கு மத்தியிலும் மாநகர சபையின் அனைத்துப் பிரதேசங்களிலும் திண்மக்கழிவகற்றல் சேவையில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்ற சுகாதாரத் தொழிலாளர்களாவர்.

இவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை துரிதமாக மேற்கொண்டு, முடிவுகளை வெளியிட்டமைக்காக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய தொற்று நோய்ப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர சபை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்- எனவும் டாக்டர் அர்ஷாத் காரியப்பர் குறிப்பிட்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts