கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2021-01-09 10:58:47

மருதமுனை ஜமீலின் "மீதமிருக்கும் சொற்கள்" கவிதை நூல் சாகித்திய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது ! 

(நூருல் ஹுதா உமர்,ஏ.எல்.எம்.ஸினாஸ்)

மருதமுனை கவிஞர் அப்துல் ஜமீலின் "மீதமிருக்கும் சொற்கள்" கவிதை நூல் இம்முறை நடைபெற உள்ள கிழக்கு மாகாண சாகித்திய விருது விழாவில் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்குப் பகுதியில்  அம்பாரை மாவட்டத்தின் மருதமுனை கிராமத்தில் 1969 ஆம் ஆண்டு பிறந்த இவர் மருதமுனை அல்- மதீனா வித்தியாலயத்தில்  அலுவலகப் பணியாளராக கடமையாற்றி வருகிறார். 

தமது இளமைப் பருவத்திலேயே இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு செயல்படத் தொடங்கிய கவிஞர் அப்துல் ஜமீல், இதுவரை துயர் கவியும் பாடல், உடையக் காத்திருத்தல், காற்றை அழைத்து சென்றவர்கள், தாளில் பறக்கும் தும்பி, அவன் பையில் ஒழுகும் நதி, சிறகு முளைத்த ஊஞ்சல், ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம், மீதமிருக்கும் சொற்கள் என 08 கவிதைத் தொகுப்புகளை தமிழுக்குத் தந்துள்ளார். 

இவரின் 'துயர் கவியும் பாடல்', எனும் கவிதைநூலுக்காக 2007ம் ஆண்டுக்கான ஐயாத்துரை விருதினையும் 'காற்றை அழைத்துச் சென்றவர்கள்', நூலுக்காக 2013ம் ஆண்டு 'பேனா கலை இலக்கியப் பேரவை' விருதினையும் 'ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம்', நூலுக்காக 2019ம் ஆண்டு 'கொடேக சாகித்ய' விருதினையும் பெற்றுள்ளார்.

மேலும் 'தாளில் பறக்கும் தும்பி' கவிதைத் தொகுப்பிற்காக 'கவிஞர்கள் திருநாள் -2016' விருதினை இந்தியாவில் தமிழக மண்ணில் மதுரையில் 2017ம் ஆண்டு ராஜா முத்தையா மண்டபத்தில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 50 ஆயிரம் ரூபாயும் விருதுக் கேடையமும் கவிஞர் வைரமுத்து அவர்களின் கரத்தால் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

கவிஞர் அப்துல் ஜமீலின் கவிதைகள் உருவகங்களும் படிமங்களும் குறியீடுகளாலும் ஆனவை. இயற்கையும் கடலும் அதன் அலைகளும் இவரது கவிதைகளில் இடம்பிடிக்கும் தனிச்சிறப்பு மிக்கவை. இவரின் மகள் 'ஹயா'வை பாத்திரமாகவும் பாடுபொருளாகவும் வைத்து எழுதுதும் கவிதைகள் ஹயாவைப் போலவே அழகானவை. இலக்கியப் பணியுடன் சமூக, அரசியல் செயல்பாடுகளிலும் ஆர்வம் உள்ளவர் அப்துல் ஜமீல்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts