உள்நாடு | சமூக வாழ்வு | 2021-01-02 12:31:04

நவீன வசதிகளுடன் திண்மக்கழிவை அகற்ற கல்முனை மாநகரசபை தயாராகிறது : பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர்.

(ஹுதா உமர்)

கல்முனை பிராந்திய மக்களின் நன்மை கருதி கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவு அலுவலக நேரங்களில் முழுமையாக அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றது. ஏனைய அலுவலகங்களை போன்று அரைவாசி ஊழியர்கள், சுழற்சி முறையிலான பணி நடவடிக்கைகள் எதுவுமில்லாது எல்லோரும் முழுமனதுடன் பணிக்கு சமூகம் தருகிறார்கள். இருந்தாலும் கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள், இன்னோரென கொரோனா தொற்று கால காரணங்களை கொண்டு சுகாதார துறை ஊழியர்கள் வருகையில் சில தொய்வு நிலை இருப்பதை மறுப்பதற்கு இல்லை. இருந்தாலும் எங்களிடமுள்ள வளங்களை மீறிய சேவையை கல்முனை மாநகர சுகாதார பிரிவு செய்து வருகின்றது என கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜெ.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.

திண்மக்கழிவகற்றலில் பெரிய பிரச்சினை இருப்பது போன்ற விடயத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (02) சனிக்கிழமை தன்னுடைய அலுவலத்தில் வைத்து விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடரந்து கருத்து தெரிவித்த அவர்,

பொறுப்பற்ற விதத்தில் சிலர் மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகள், கடற்கரை ஓரங்கள், பாலத்தின் அடிப்பகுதிகள், நீர் நிலைகளில் குப்பைகளை விசுவதனால் பொதுமக்கள் மட்டுமல்ல அதை துப்பரவு செய்யும் மாநகர ஊழியர்களும் சங்கடத்திற்கு முகம் கொடுக்கின்றனர். பொதுமக்களையும் இந்த சமூகத்தையும் பற்றி சிந்திக்காதவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அப்படியானவர்களை கையும் களவுமாக பிடித்து எவ்வித கருணைகளுமில்லாது சட்டநடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இந்த கொரோனா காலத்திலும் எங்களின் சுகாதார பிரிவு ஊழியர்கள் தங்களின் உயிரை கூட மதிக்காமல் தங்களின் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் தொழில் நேர்மைக்கு அண்மைய கல்முனை நகர மண்டப வீதி சம்பவம் சாட்ச்சியாக இருக்கின்றது. இந்த கல்முனை மாநகரை முன்னேற்றகரமான நகராக மாற்ற கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், ஆணையாளர் எம்.சி. அன்சார் போன்ற சகலரும் கடுமையாக உழைக்கிறார்கள். இந்த திண்மக்கழிவகற்றல் விடயத்தில் இருந்த தொய்வை போக்க அண்மையில் 06 வாகனங்களை சிறப்பாக திருத்தியமைத்து சுகாதார துறைக்கு கௌரவ முதல்வரினால் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் சில வாகனங்கள் விரைவில் திருத்தியமைக்கப்பட்டு சேவைக்கு திரும்ப உள்ளது. அந்த வாகனங்கள் இப்போது மக்களின் கழிவுகளை அகற்றும் பணியை சிறப்பாக செய்து வருகின்றது.

இனி வரும் காலங்களில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய திண்மக்கழிவகற்றல் சேவையை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் அடிப்படிப்படையில் திண்மக்கழிவகற்றல் வாகனங்களுக்கு ஒலி எழுப்பும் கருவிகளை பூட்டுதல், GPS வசதிகளை ஏற்படுத்தல், கழிவுகளை தரம் பிரிக்கும் பைகளை வழங்குதல், தொலைபேசி செயலிகளை உருவாக்குதல் போன்றவைகளை அறிமுகம் செய்ய உள்ளோம்.

எங்களின் மாநகரத்தில் வருகைதரும் மக்கள் அடங்கலாக ஒருநாளைக்கு சுமார் 1.5 லட்சம் மக்களின் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றது. அக்கழிவுகள் சுமார் 100 டொன்னுக்கும் அதிகமாக உளது. அதை அகற்ற எங்களிடம் சரியான இடமில்லை. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பள்ளக்காடு பிரதேசத்தையே பயன்படுத்தி வருகின்றோம். போக்குவரத்துக்கு அதிக நேரம் எடுப்பதனால் கழிவுகளை அகற்றுவதில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அதை அரசியலாக்க சிலர் முனைவது தேவையான ஒன்றல்ல.

இந்த காலம் மழைக்காலமாக இருப்பதனால் கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள சாய்ந்தமருது, கல்முனை தெற்கு மற்றும் கல்முனை வடக்கு  அடங்களான சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு எரிபொருள், வாகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துளோம். மக்களின் சுகாதார பிரச்சினைகளை அறிவிக்க எமது மாநகர சபையின் சுகாதார பிரிவின் தொலைபேசி இலக்கமான 067226675 ஐ அழைக்க முடியும் என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts