கட்டுரைகள் | சமூக வாழ்வு | 2020-12-25 20:06:51

முஸ்லிம் சமூகத்தை மேலும் சங்கடப்படுத்த வேண்டாம்! - பேராசிரியர் றமீஸ் அப்துல்லா

(ஹுதா உமர்)

இலங்கை முஸ்லிம் சமூகம் வரலாற்றில் சமகாலத்தில் மிக மோசமான நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. அந்நியர் ஆட்சிக்காலத்திலும் பல்வேறு முரண்பட்ட சூழ்நிலைகள் உருவாகியிருந்தாலும் மத ரீதியான இம்சைக்கு பெரிதும் உட்படவில்லை. சமகாலத்தில் கொரோனா தொற்று நோயை காரணமாக வைத்து இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி மீண்டும் அதிலிருந்து மீள்வதற்காக முஸ்லிம் சமூகம் மண்டியிட்டுக்கிடக்கிறது.

ஈழத்தின் இனப்பிரச்சினை ஆரம்பத்தில் சிங்கள – தமிழ் பிரச்சினையாகவே இருந்தது. பின்னர் அது சிங்கள – தமிழ் - முஸ்லிம் பிரச்சினையாக உருவெடுத்தது. இந்தக் காலப்பகுதியிலேயே முஸ்லிம்கள் தனித்தரப்பாக தம்மை அடையாளப்படுத்த முனைந்தனர். சில சிறிய கட்சிகள் முஸ்லிம்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்டாலும் அது அவ்வப்போதே கரைந்துவிட்டது. ஆனால் எண்பதுகளுக்கு பின்னால் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி பெருவளர்ச்சி கண்டது. அக்கட்சியின் தலைமைத்துவம் 2000 ஆண்டளவில் தனது தனித்துவ அடையாளத்தை மாற்றி தேசிய ஐக்கிய முன்னனி (நுஆ) என்ற கட்சியினையும் உருவாக்கியது. அஷ்ரபின் மரணத்திற்கு பின்னர் இந்தக் கொள்கைகளை முன்னெடுப்பதை விட முஸ்லிம் காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலே அதிக அக்கறை செலுத்தியது. அதேநேரம் அக்கட்சி இக்காலத்திலே துண்டு துண்டாக உடைந்து போனது.

முஸ்லிம்களிடமிருந்து வந்த அரசியற்கட்சிகளின் பேரம் பேசும் திராணியும் அதேநேரம் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே இடம் பெற்ற மத ரீதியான சிந்தனைச் சலவையின் விஷ்வரூபமும் தேசிய அபிவிருத்தியில் முஸ்லிம்களின் இணக்க ரீதியான பங்களிப்பும் பிற சமூகத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியது. உண்மையில் இது அதீத கற்பிதமான ஓர் அச்ச உணர்வாகும். இந்த உணர்வினை பிற சமூகத்திலுள்ள தீவிர சிந்தனையாளர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். இந்த காலகட்டத்தில்தான் அளுத்கம, அம்பாறை, திகன சம்பவங்கள் நடந்தேறின. ஈஸ்டர் தாக்குதலும் இதனைத் தொடர்ந்தே நடந்தது. முஸ்லிம்கள் சூழ்நிலையின் கைதியாக மாறினர். கிறிஸ்தவ சமூகம் அமைதி காத்த அதேவேளை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவும் பிற சமூக தீவிர சிந்தனையாளர்கள் தவறவில்லை.

இந்தக் கட்டத்தில் தான் ஆட்சி மாற்றம் இலங்கையில் ஏற்பட்டது. பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்க சிலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட கோத்தபாய அரசின் அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சரே இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் பெருமளவிலான முஸ்லிம்கள் அரசாங்கத்தில் இல்லாத ஒரு சூழ்நிலை இக்காலத்தில் இடம்பெற்றது. இந்த சூழ்நிலையில்தான் கொவிட் - 19 வைரஸ் உலகெங்கும் பரவத் தொடங்கியது. அது இலங்கையையும் ஆட்கொண்டிருந்தது.

இதன் காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் தகனம் செய்யவும் உலக சுகாதார அமைப்பு ஆலோசனை வழங்கியது. இந்த ஆலோசனையை உலகின் 189 நாடுகள் ஏற்றுக்கொண்டு சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதித்தோடு இலங்கை மாத்திரம் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்று கட்டாயமாக்கியது. இது முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிக கவலையான ஒரு தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு எதிராக முஸ்லிம் தரப்பிலிருந்த வழக்குகளும் முன்வைக்கப்பட்டன. அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச மன்னிப்பு சபை முதலானவும் இந்த தீர்மானத்தை கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார நிபுணத்துவக்குழுவை காரணம் காட்டி இலங்கை அரசாங்கம் பல தடவை தப்பித்துக்கொண்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முஸ்லிம்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். உலக நாடுகளின் பல அமைப்புக்களும் தொற்றுநோயியல் நிபுணர் பலரும் இந்தத் தீர்மானத்திற்கு எதிரான கருத்தினை முன்வைத்திருக்கிற சூழ்நிலையில் இந்த வழக்கிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமென்று முஸ்லிம்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாதே தள்ளுபடி செய்யப்பட்டது. முஸ்லிம்களும் நியாயமாக சிந்திக்கின்ற தரப்பினரும் எதிர்பார்த்திராத இந்த முடிவினால் ஏமாற்றப்பட்டனர்.

இந்த வழக்கில் முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் பிரபலமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வாதிட்டமை குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சில நாட்களில் பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இது தொடர்பான மிகக் காரசாரமான உரையொன்றை ஆற்றினார். 'தமிழ் மக்களுக்கு எதிராகவும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகவும் இன வாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது' என்ற கருத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்தார். இதன் பின்னர் முஸ்லிம் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் விழித்துக்கொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காமை குறித்தும் சுகாதார நிபுணர் குழு குறித்தும் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார். இவற்றுக்கு நீதி கிடைக்காவிட்டால் முஸ்லிம்கள் வேறு பாதையில் செல்லக்கூடும் எனவும் எச்சரித்தார். அதேநேரம் நீதியமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்க நேரும் என மிக வெளிப்படையான கருத்தினை முன்வைத்துள்ளார்.

முற்போக்கு பெரும்பான்மை ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களின் சடங்களை எரிப்பது குறித்து கண்டனங்களை வெளியிட்டனர். முஸ்லிம் சிவில் சமூகமும் ஏனையோரும் வீதிக்கு இறங்கினர். கனத்தை மயானத்தின் புறச்சுவர்களில் வெள்ளைச் சீலைகளை கட்டினர். அது கபன் சீலைப் போராட்டமாக நாடெங்கும் உருவெடுத்திருக்கிறது. பிரித்தானியாவிலும் பிரான்ஸிலும் கனடாவிலும் இத்தாலியிலும் முஸ்லிம்கள் சடலங்களை எரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் இறங்கியள்ளனர். நாளடைவில் சடலங்களை எரிக்கின்ற நிகழ்ச்சி தொடருமாக இருந்தால் முஸ்லிம்கள் தமது மதக்கடமைகளை நிறைவேற்றமுடியாத சூழ்நிலைகளினால் தம்மை இழக்க முற்படுவர்.

நாட் செல்லச்செல்ல இந்தப் பிரச்சினை சர்வதேச மயப்படுகிற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தமிழர் தரப்புப்போல முஸ்லிம்களும் தமக்கு சர்வதேச நீதி வேண்டும் என கோர முற்படலாம். கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கின்ற வைத்தியசாலைகளை அடிப்படையாகக் கொண்டு அதன் சுற்றுப்புற சூழலின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. மரணித்த ஜனாஸா ஒன்றினை எரிக்காது பாதுகாப்பது குறித்தும் நீதி கோரப்பட்டிருக்கிறது. இவை எல்லாமே மேலும் மேலும் சங்கடத்தினை உள்ளாக்குகின்ற செய்திகளாகும்.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக கிறிஸ்தவ பாதிரிமாரும் கனத்தை மயானத்திற்குச் சென்றிருக்கிறார்கள். மங்கள சமரவீர, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சஜித் பிரேமதாஸ முதலானோரும் மீண்டும் மீண்டும் தமது எதிர்ப்புக் கருத்துக்களை வன்மையாக வெளியிட்டு வருகின்றனர். 'சந்தர்ப்பவாத அரசியல் எதிர்ப்பு களையப்பட்டு ஒரு நேர்மறையான சமூக சித்தாந்தத்தை ஊக்கவிக்கும் ஒரு பயிற்சியாக இது மாற்றப்பட வேண்டும்' என இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவும் முஸ்லிம்களின் சடலம் எரிக்கப்படுவது குறித்து மீண்டும் தமது கருத்தினை வலியுறுத்தியுள்ளனர். அதேநேரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டான முயற்சி குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. மொத்தத்தில் முஸ்லிம் சிவில் சமூகம் ஆறாத துயரத்திற்குட்பட்டிருக்கிறது. அதேநேரம் ஜனாஸாக்களை குளிரூட்டிகளில் தொடர்ச்சியாகப் பாதுகாப்பது குறித்தும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.

இந்த சூழ்நிலையில் சடலங்களை எரிப்பதனை விட அடக்குவதற்கு சாதகமான கருத்துக்களை உலக சுகாதார நிறுவனங்களும் நுண்கிருமி தொடர்பான வல்லுனர்களும் தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றனர். அதேநேரம் சிங்கள, தமிழ், கிறிஸ்தவ அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் மதச்சார்பற்று தமது கருத்துக்களை தெரிவித்துவருகின்ற சூழ்நிலையில் அரசு முஸ்லிம்களை மேலும் சங்கடத்திற்குட்படுத்துவது நல்லதல்ல. இந்த சூழ்நிலையை கவனமாகக் கையாள அரசு தீவிரமாக முன்வரவேண்டும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கிறது. இந்த இடத்தில் மிலிந்த மொரகொடவின் இந்தக் கூற்று இன்னும் கூர்மையாகக் கவனிக்கத்தக்கது. 'சக்தி உதவியற்றது ஆனால், பொறுமை முடிவுக்கு வரக்கூடிய ஒரு இடம் இருக்கிறது. இது வெறுப்பாக இருக்கக் கூடும்'


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

AD-01

Popular Posts