உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-18 17:15:48

கொரோனா தொற்று உள்ள கல்முனை பிரதேசத்தில் ஆதன மற்றும் திண்மக்கழிவகற்றல் வரி அறவிடுவது காலப்பொருத்தமல்ல - பீ.எம். ஷிபான்

(ஹுதா உமர்)

கல்முனை ஆதன திண்மக்கழிவகற்றல் வரி மாகாணசபைத் தேர்தலுக்கான முதலீடா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது. கல்முனை மாநகர் முழுவதிலும் ஆதன மற்றும் திண்மக்கழிவகற்றல் வரி அறவிடும் வேலைத்திட்டம் முடுக்கி விடப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்று கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக கல்முனை சுகாதார பிராந்தியத்தை ஆட்டிப் படைக்கின்ற இவ்வேளையிலே இந்தத் திண்மக்கழிவகற்றல் வரி வேலைத் திட்டமானது தேவைதானா என மக்கள் அங்கலாய்க்கின்றனர் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் விசனம் வெளியிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ள ஆதன மற்றும் திண்மக்கழிவகற்றல் வரி அறவிடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

குறித்த வரியானது 2019, 2020, 2021 ஆகிய மூன்று வருடங்களுக்குமான மொத்த வரியாக அறவிட திட்டமிடப்பட்டு கடிதம் மூலம் அனுப்பியமை கண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை ஓட்ட கஷ்டப்படும் மக்கள் தொடக்கம் அரச ஊழியர்கள் வரை விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2019, 2020 காலப்பகுதியில் தேர்தலை மையமாகக் கொண்டு,மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க எண்ணியே மாநகர சபையை ஆட்சி செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரி அறவீடுட்டை நிறுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது மொத்தமாக அறவீடு செய்யநாடி பாரிய சுமைகளை மக்களின் மீது சுமத்தி இருக்கின்றது.

மேலும் இந்த வரி அறவீட்டுக்கான கடிதமானது எதிர்வருகின்ற மாகாணசபைத் தேர்தலினை நோக்கியதா? என்ற அச்சமும் எழுகிறது. காரணம் மாகாணசபைத் தேர்தலின்போது குப்பை வரியை பேசுபொருளாக்கி, அதனை நிறுத்துவதாக வாக்குறுதியளித்து, மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் திட்டமாகவும் அது இருக்கலாம் .

மாத்திரமின்றி மக்களுக்கு அனுப்பப்படும் கடிதத்திலே, ஏலவே வரி செலுத்தியோர், வரி செலுத்தாதோர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே தொகையை அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளமையானது , காசுக் கட்டளை பதிவுகளை தொடர்ந்து பேணுவதில் உள்ள சிக்கல் நிலைமையை தெட்ட தெளிவாக எடுத்துக் காட்டுவதோடு உத்வேகத்தோடு செயற்படும், கல்முனை மாநகர மேயரையும், உறுப்பினர்களையும், நிருவாகிகளையும் பொதுமக்கள் குறை கூறும் அளவுக்கும் ஆக்கிவிட்டுள்ளது.

ஆகவேதான் கௌரவ மேயர் அவர்கள் இது விடையத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் அல்லோலகல்லோலப்படும் நமது பிராந்திய மக்களின் நன்மை கருதி வரி அறவீட்டு விதிகளில் இலகு தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். ஏலவே வரி செலுத்திய மக்களின் விடையத்தில் கோப்புக்களை சரியாக பேண உத்தரவிடுங்கள். இந்த தொற்றுநோய் காலத்தில் உடலாலும் உள்ளத்தினாலும் வெந்து நொந்துபோயுள்ள மக்களுக்கு நிவாரணமளிக்கும் செயற்றிட்டங்கள் சிலவற்றை செய்ய முன்வாருங்கள் என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts