உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-16 22:02:47

வைத்தியர். ஏ.லதாகரன் மற்றும் வைத்தியர் ஜி.சுகுணன் உட்பட சுகாதார துறைக்கு சாய்ந்தமருதிலிருந்து பாராட்டு தெரிவிப்பு !

(ஹுதா உமர்)

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொறோனா தொற்றிலிருந்து எமது நாட்டு மக்களை பாதுகாக்கும் அர்ப்பணிப்மிக்க பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எமது சுகாதார துறையினரை சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் பாராட்டுகின்றது என சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் வெளியிட்டுள்ள பாராட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் கொறோனா தொற்று ஏற்பட்டு மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் நமது நாட்டின் சுகாதார துறையினரின் அயராத முயற்சியின் பயனாக மெச்சத்தக்க சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுவரும் கொறோனா பரவல் நமது பிராந்தியத்தின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதுடன் அதனால் மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நமது மாகாணத்தில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வளங்களைப் பயன்படுத்தி உச்ச அளவிளான சுகாதாரப் பணிகளை வழங்கிவரும் கிழக்கு மாகாண சுகாதரா சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். ஏ.லதாகரன் அவர்களுக்கு எமது சங்கம் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.


அத்துடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் அதிகரித்துவரும் கொறோனா தொற்றுக்கு மத்தியில் அனைத்து மக்களினதும் சுகாதார நலன்களைக் கருத்திற் கொண்டு இன, மத பாகுபாடின்றி பணியாற்றிவரும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் தொற்றுநோய்ப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் அத்துடன் வைத்தியர்கள், சுகாதரா பணியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

அதேவேளை, கொறோனா தொற்றிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்ததன் விளைவாக எமது பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நமது சுகாதரா துறையினர் நடவடிக்கை மேற்கொண்டதை நாங்கள் நேரடியாக கண்டு கொண்டோம். அக்கரைப்பற்று சந்தையை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட கொத்தனி பரவலை உரிய காலத்தில் கண்டறிந்து அந்த மக்களை மாத்திரமல்லாது முழு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவையும் பாதுகாக்கும் நடைமுறையை மேற்கொண்ட பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பளார் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

மேலும், கொறோனா அபாய வலயங்களில் இருந்து வேறு பிரதேசங்களுக்கு வந்தவர்கள் மூலம் கொறோனா தொற்று ஏற்பட்ட கடந்தகால அனுபவங்களை வைத்து, அவ்வாறான வலயங்களில் இருந்து வருகை தந்தவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தி இரவு பகல் பாராது பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் தொற்றாளர்களை அடையாளம் கண்டமையையிட்டு சுகாதார துறையினரை வெகுவாகப் பாராட்டுவதோடு இதற்காக உழைத்த அனைத்து உத்தியோகத்தர்களும் இத்தருனத்தில் நன்றியுடன் நினைவுகூறப்பட வேண்டியவர்கள்.

இப்பிரதேச மக்களுக்கு கொறோனா தொற்று ஏற்படுமிடத்து வெளிமாவட்டங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதால் அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப முன்கூட்டிய திட்டமிடல்களைச் செய்து இந்த மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தல் நிலையங்களையும், சிகிச்சை நிலையங்களையும் நிறுவி இம்மக்களின் மருத்துவ தேவைகளை சிறப்பாக பூர்த்திசெய்துவரும் கல்முனைப் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் அவர்களுக்கு மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மக்களின் நலன் கருதி சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் பணிகளை தொடர்ந்தும் திறம்பட செய்ய பொதுமக்கள் தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென்பதுடன் அவர்களது வழிகாட்டல்களையும், அறிவுறுத்தல்களையும் பின்பற்றி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும் ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றது என தெரிவித்துள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts