உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-04 22:30:28

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக தே.கா வேட்பாளராக இருந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீமை நியமிக்க அனுமதி

(ஹுதா உமர்)

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எல்.எம். சலீம் நியமிக்கப்படவுள்ளார்.இதற்கான அங்கீகாரத்தினை பாராளுமன்ற சபை நேற்று வியாழக்கிழமை வழங்கியுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பட்டாளர், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர், அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஆகியவற்றின் மேலதிக செயலாளர் ஆகிய பதவிகளில் இவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த பெப்ரவரியில் நிர்வாக சேவையிலிருந்து ஓய்வுபெற்ற இவர், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்றார்.
இந்த நிலையிலேயே அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நியமனத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபென்டி தலைமையிலான பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற சிவில் நிர்வாக அதிகாரிகளான வீ. சிவனாசோதி, ஏ.எல்.எம். சலீம், தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான லலித் வீரதுங்கவின் மனைவி இந்திரானி சுகததாஸ, பிரபல வர்த்தகரான டியான் கோம்ஸ், லீலசேனா லியனகம, டி.ஆர்.சீ. ரூபேரா, டப்ளியூ.எச். பியதாஸா ஆகியோரின் பெயர்களை பாராளுமன்ற சபையின் அனுமதிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்திருந்தார்.

இவர்களின் நியமனத்திற்கான அங்கீகாரத்தினை நேற்று வியாழக்கிழமை கூடிய பாராளுமன்ற சபை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts