பிராந்தியம் | அரசியல் | 2020-12-02 23:33:40

மருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக பயன்படுத்துவதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை 

(ஏ.எல்.எம். ஷினாஸ்)    

மருதமுனை பிரதேச வைத்தியசாலை Covid-19 கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டதை அடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன. சன நெரிசல் மற்றும் வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் பாடசாலை, அரபுக் கல்லூரி என்பன அமைந்திருப்பதால் பல்வேறு அசெளகரியங்களை பொதுமக்கள் எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மருதமுனை பிரதேச வைத்திய அதிகாரிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ஜீ.சுகுணன் அவர்களுக்கும் இடையிலான   கலந்துரையாடல்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் (30) மாலை நடைபெற்றது.

இங்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கும் போது,

மருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக மாற்றப்படுவதால் யாரும் அச்சமடையத் தேவையில்லை. எதிரான சிந்தனைகளிலிருந்து மக்கள் வெளியில் வந்து சாதகமாக சிந்திக்க வேண்டும். சாதரண மக்கள் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் வைத்தியர்கள் உள்ளே இருந்து சேவையாற்றுபவர்கள். ஆனால் இதுவரை  வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களிடமிருந்து சுகாதார துறையினருக்கு தொற்று ஏற்பட்டதாக எந்தப் பதிவுமில்லை. 

கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் அதிக சனநெரிசலை கொண்ட பிரதேசம் காத்தான்குடி நகரமாகும். அங்கு மக்கள் ஆரம்பத்தில் சில சந்தேகங்களை எழுப்பிய போதிலும் தற்போது அந்த வைத்தியசாலையால் மக்களுக்கு எதுவித பாதிப்பும் கிடையாது. அதேபோன்றுதான் பாலமுனை வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக எடுத்த பொழுது சிலர் விமர்சனங்களைச் செய்தார்கள். ஆனால் இன்று தங்களுடைய கொரோனா நோயாளர்களை தூர இடங்களுக்கு எடுத்துச் செல்லாமல் பாலமுனை வைத்தியசாலையில் அனுமதியுங்கள் என்று அந்த மக்கள் கூறுகின்றார்கள். கொரோனா தொற்று சமூகத்திற்கு பரவாமல் தடுப்பதற்காக நாம்   இரவு-பகல் பாராது போராடி  பல்வேறு முயற்சிகளை செய்கின்ற பொழுது  சிலர்  சுகாதார தரப்பினரை  உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்யும் அளவுக்கு  விமர்சனங்களை செய்கிறார்கள்.

கொரோனா தொற்றாளர்களுக்கு  சிகிச்சை வழங்கும் நிலையங்கள்  மிகவும் பாதுகாப்பான முறையில்  சகல வசதிகளும் கொண்டதாக  அமைக்கப்பட்டிருக்கின்றது. 

அன்றாட வாழ்க்கையில்  அடுத்தடுத்த கட்டங்களுக்கு  செல்வதற்கான  தயார்படுத்தல்களைச் செய்ய வேண்டியது கட்டாயமாகும். வைத்தியசாலைகளில் இருந்து பிரதேச மக்களுக்கு கொரோனா தொற்று வந்துவிடும் என்பது மாயையான சந்தேகம் மட்டுமே எனவே மன தைரியத்தோடு சவால்களைை வெற்றி கொள்கின்றவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்முனைை மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். ஏ. ஆர்.எம். அஸ்மி, சாய்ந்தமருது பிரதேச வைத்திய அதிகாரி  டாக்டர் .ஏ.எல்.எம்.மிஹ்லார், பாடசாலைகளின் அதிபர்கள்  உட்பட  பலர் கலந்து கொண்டனர். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts