உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-02 09:46:24

வெளியூர் சென்று வருவோர் தகவல்களை மறைக்காதீர் ; கல்முனை தெற்கு வைத்திய அதிகாரி றிஸ்னி வேண்டுகோள்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு போதியளவு கிடைப்பதில்லை என  கவலை தெரிவித்துள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி, கொரோனா  அபாயத்தை உணர்ந்து,  இயன்றளவு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது விடயமாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

"தற்போது அக்கரைப்பற்று பிரதேசம் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு கொரோனா எனும் கொடிய நோய் கொத்தணியாக விஸ்பரூபம் எடுத்து வருகின்றது. அது எமது கல்முனை பிராந்தியத்திலுள்ள ஒரு பகுதி என்பதனால், இவ்விரு பிரதேசங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதனால் கல்முனைப் பிரதேச மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக எவரும் அக்கறைப்பற்றுக்கு செல்வதோ, அங்கிருந்து எவரும் கல்முனைக்கு வருவதோ முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். அத்துடன் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என கடுமையாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் இவ்வளவு நடந்தும் எமது பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. பலரும் வெளியூர்களுக்கு சென்று வந்து, சுகாதாரத்துறையினருக்கு அறிவிக்காமல் தகவல்களை மறைத்து விட்டு, பொது இடங்கள், கடைத்தெருக்களில் சாதாரணமாக நடமாடுகின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று இருந்து, மற்றவர்களுக்கும் பரவினால் யார் பொறுப்புக்கூறுவது? இவர்களது பொறுப்பற்ற செயற்பாடுகள் எமது பிரதேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனால் வீடுகளில் இருக்கின்ற அப்பாவி மக்களும் கொரோனா தொற்றுக்கு இலக்காக நேரிடும். பல உயிரிழப்புகள் ஏற்படலாம். மரணம் நிகழ்ந்தால் அதன் விபரீதம் என்னவென்று நாம் சொல்ல வேண்டியதில்லை.

எவராவது வெளியிடங்களுக்கு சென்று வந்தால், சுகாதார துறையினருக்கு அறிவித்து, முறையான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் பாரிய அனர்த்தங்களை தவிர்க்க முடியுமாக இருக்கும். ஆனால் இவ்வாறானவர்களை நாமே தேடிப்பிடிக்க வேண்டியுள்ளது. அவர்கள் தாமாக முன்வருகிறார்கள் இல்லை. நாம் தேடிப்பிடிக்கின்ற நபர்கள் கூட உண்மையான தகவல்களைத் தராமல் பல விடயங்களையும் மறைக்கின்றனர்.

அவசியத் தேவை கருதி வெளியிடங்களுக்கு செல்வோர் தயவு செய்து இனியாவது சுகாதாரத்துறையினருக்கு அறிவித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வாருங்கள்.

சந்தைகளில் வியாபாரம் செய்கின்ற, வெளியிடங்களுடன் தொடர்புடைய வியாபாரிகளுக்கு பி.சி.ஆர், பரிசோதனை செய்ய முற்பட்டால், அவர்கள் ஓடி, ஒளிந்து விடுகின்றனர். இதற்கு அவர்களது ஒத்துழைப்பை பெறுவதென்பது பெரும் சிரமமாக இருக்கிறது. இதனால் சுகாதாரத்துறையினராகிய நாம் பாரிய சவாலை எதிர்கொள்கின்றோம்.

கல்முனைப் பிரதேசத்தில் கொரோனா அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் கூடுகின்ற இடங்களில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகர மேயருடன் இணைந்து பல்வேறு தீர்மானங்களை  எடுத்துள்ளோம். அவற்றை முழுமையாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு வியாபாரிகளும் பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்" என்றும் டொக்டர் றிஸ்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts