உள்நாடு | அரசியல் | 2020-12-02 08:54:19

ஜனாஸா எரிப்பு வழக்கு; மேற்கொண்டு விசாரிக்க மறுத்தமை துரதிஷ்டமாகும்; -ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கவலை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, மேற்கொண்டு விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளமை மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் கவலை தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக எடுத்துக் கொள்ளப்பட்ட மனுக்களை மேற்கொண்டு விசாரிக்காமல் தள்ளுபடி செய்து, தீர்ப்பளித்தமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தாக்கல் செய்த மனு சார்பாக இவ்வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவிக்கையில்;

"கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்கள் அனைத்தும் கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவரவர் சமய முறைப்படி இறுதிக்கிரிகைகள் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

எமது தரப்பு வாதங்களை மிகவும் உருக்கமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்து சமர்ப்பணங்களை செய்திருந்தோம். எமக்கு பக்கபலமாக மாற்று மத சட்ட வல்லுனர்களான எம்.ஏ.சுமந்திரன், விரான் கொரயா மற்றும் தவராசா போன்ற சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆக்கபூர்வமான வாதங்களை முன்வைத்து, சமர்ப்பணங்களை செய்திருந்தனர். அதற்காக அவர்களுக்கு எமது சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எவ்வாறாயினும் நாம் எதிர்ப்பார்த்த சாதகமான தீர்ப்பு கிடைக்காமல் போனமை எமக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இத்தீர்ப்பு கிடைத்திருக்கின்ற இன்றைய தினத்தை ஒரு துக்ககரமான நாளாகவே கொள்ள வேண்டியுள்ளது.

எமது மனுக்களை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு சார்பான வாதங்களும் சுகாதார அமைச்சு சார்பான சட்டமா அதிபர் திணைக்கள வாதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்ப்பால் எமது மனுக்களை மேற்கொண்டு விசாரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது" என்று ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 தொற்று நோயினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு சாதகமான தீர்ப்பாக அமையும் என மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு எதிர்மறையாக கிடைத்திருப்பதனால் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறாக அமையும் என்று அவரிடம் கேட்டபோது;  

உச்ச நீதிமன்றத்தை விட மேலானது எதுவுமில்லை என்பதனால் அத்தீர்ப்பினை நாம் சவாலுக்குட்படுத்த முடியாது. ஆகையினால் ஜனாஸா அடக்கம் தொடர்பில் இனி அரசியல் ரீதியான தீர்வினையே பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts