உள்நாடு | அரசியல் | 2020-12-01 13:18:23

இனவாதம் என்பது தேர்தலை வெற்றிகொள்வதற்கு வாய்ப்பாக அமையலாம்.ஆனால் ஒரு நாட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கு ஒரு போதும் பங்களிக்காது!

(சர்ஜுன் லாபீர்)

இனவாதம் என்பது ஒரு தேர்தலை வெற்றிகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையலாம்.ஆனால் இனவாதம் என்பது ஒரு நாட்டை வளர்ச்சியடைய செய்வதற்கு ஒரு போதும் பங்களிக்காது என்கின்ற யதார்த்தத்தை பாராளுமன்றத்தில் இருக்கின்ற 225 உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் இன்று(30) பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...

எமது நாட்டை முதலாவது கொரோனா அலையில் இருந்து சிறப்பாக காத்தமைக்காகவும், இரண்டாவது கொரோனா அலையில் போராடி கொண்டு இருக்கும் சுகாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர்,பொதுச் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மற்றும் இரானுவத்தினர் என யார் யாரெல்லாம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக போராடுகின்றார்களோ அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கொரோனா என்கின்ற இந் நோய் ஏற்படுத்தி இருக்கின்ற அழிவு சாதாரண அழிவு அல்ல. இலங்கையின் எல்லாத் துறைகளும் சீரழிந்து சின்னாபின்னமாக இருக்கின்ற சூழ்நிலையில் நாம் எல்லோருமாக சேர்ந்துதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். ஒரு அழிவு என்பது ஒரு ஆரம்பத்திற்கு வழிவகுக்கும் விதமாக அமைகின்ற போதுதான் நிச்சயமாக இந்த நாட்டிலும் ஒரு முன்னேற்றத்தை காண முடியும். இதற்கு ஜப்பான் போன்ற நாடுகளை முன்னுதாரணமாக எடுக்கலாம் ஹிரோசிமா,நாகசாகி போன்ற நகரங்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் குண்டுத்தாக்குதலினால் அழிந்த போது இதற்கு பிறகு இந்த நாடு சின்னாபின்னமாகிவிடும் என்பதாக எல்லோரும் நினைத்துக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த அழிவில் இருந்துதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற தார்மீக உணர்வு பிறந்து ஜப்பான் இன்று மிகப் பெரிய வல்லரசாக திகழ்கின்றது.

அதேபோன்று தான் சுனாமி பேரலையினால் அழிந்துபோன பல நாடுகள் தங்களை கட்டியெழுப்பிய உணர்வுகளையும் குறிப்பிடலாம். இதேபோல கொரோனா தாக்கத்தினால் நாங்கள் இன,மத மொழி,கட்சி பேதங்களற்று இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எல்லோரும் ஒன்று படவேண்டும்.
எமது நாட்டை பொருத்தளவில் சுகாதாரத் துறையின் பங்களிப்பானது உண்மையில் சாதாரணமான,எளிமையான மக்களினுடைய வாழ்க்கையில் பெரும் பங்களிப்பு செய்துள்ளதை கண்டு இருக்கின்றோம். போலியோவை முற்றாக ஒழித்த நாடு, யானைக்கால் நோயற்ற நாடு அதேபோன்று 2012ம் ஆண்டு மலேரியா நோயற்ற நாடு என்று தென்னாசிய பிராந்தியத்தில் சுகாதார துறையில் நாம் நிலைநாட்டிய சேவைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.எனவே இவ்வாறான சாதனைகளைப் படைத்த நாங்கள் இந்த கொரோனா தாக்கத்திலும் கூட உலகத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற போது முடிந்தளவுக்கு நாங்கள் இதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக போராடி வருகின்றோம்.

எமது நாட்டில் உள்ள வளங்களைக் கொண்டு இவ்வாறான நோய்களை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றி வருகின்ற ஒரு விடயத்தை நினைவு கூர்ந்த நிலையில் இவ்வாறான ஒரு சூழலில் எல்லோருக்குள்ளும் இப்பொழுது மிகுந்த கவலையாக இருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால் உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தொழில்நுட்ப விடயத்தில் உலகத்திற்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கின்ற பல்வேறுபட்ட நிபுணர்களை கொண்டுள்ள ஒரு ஸ்தாபனமாகும்.இந்த உலக சுகாதார ஸ்தாபனம் அதேபோன்று யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தும் கூட அவற்றையெல்லாம் பொறுட்படுத்தாது இன்று முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற ஒரு விடயம் பெரும் துயரமாக மாறி இருக்கின்றது.

இங்கே ஒரு விடயத்தை நான் பதிவு செய்ய விரும்புகின்றேன் "இனவாதிகள் என்பவர்கள் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும் என்பது அல்ல..மாறாக அதிகாரிகளாகவும் இருக்க வேண்டும்" .கொரோனா ஜனாஸக்களை நல்லடக்கம் செய்யலாம் என்கின்ற விவகாரம் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்ற சூழலில் முஸ்லிம்கள் இலங்கையில் இவ்வாறு நல்லடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்படுவதன் பின்னணியில் எக்ஸ்பேட் கொமிட்டி என்கிற அரசாங்கத்தின் சுகாதர துறையினரால் ஒழுங்கமைப்பு செய்து இருக்கின்ற துறைசார் நிபுணர்களின் பிழையான வழிகாட்டுதல்களால் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தினுடைய மத கலாச்சார நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்தும்,உடைந்துபோய்க்கொண்டு இருக்கின்ற நிலையில் எமது சமூகம் இந்த கொரோனா நோய்த்தாக்கத்தினால் இரட்டிப்புத் தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள் என்பதை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

இங்கு நான் தெரிவிக்கின்ற விடயம் என்னவென்றால் கொரோனா தாக்கத்தினால் ஏற்படுகின்ற இறப்பை விடவும் இறந்த உடல்களை எரிப்பதனால் வருகின்ற வலி முஸ்லிம் சமுகத்திற்கு மிகப் பெரும்வலியாக இருக்கின்றது. எனவே இந்த நிபுணர்கள் என்கின்றவர்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களை விட மிகுந்த நிபுணர்களா? என்கின்ற கேள்வியை நியாயமாக எல்லோர் முன்னிலையிலும் வைக்க விரும்புகின்றேன்.இந்த துறைசார் விற்பனர்கள் கொண்ட குழாமில் உள்ளவர்களின் கருத்துக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நாம் பார்க்கின்ற போது அதிகாரிகளின் கருத்துக்களாக இல்லாமல் இனவாதம் மிகுந்த அரசியல்வாதிகளுடைய கருத்துக்களாக இந்த அதிகாரிகளிகளுடைய கருத்துக்கள் பிரதிபளிப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எமது நாட்டின் ஜனாதிபதி,பிரதமர், சுகாதாரத் துறை அமைச்சர்,அரசின் பக்கம் இருக்கின்ற பலரும் இணைந்து சுகாதாரத் துறை அதிகாரிகளை காரணம் காட்டி தொடர்ந்தும் ஜனாஸாக்களை எரிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விடயம் முஸ்லிம் சமூகத்தில் மட்டும் அல்ல கத்தோலிக்க சமூகத்தினுடைய நம்பிக்கையாகவும் இருக்கின்ற ஒரு விடயமாகும்.இந்த விடயத்திற்கு அரசாங்கம் சுகாதார நிபுணர்கள் குழுவின் அதிகாரிகளை காரணம் காட்டி உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயத்தினை இலங்கையில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஒரு கேலிக்கூத்தான நிலைக்கு சுகாதார துறை நிபுணர்களை இட்டுச் சென்றுவிடக்கூடாது என்கின்ற மிகப் பணிவான வேண்டுகோளினை முன்வைக்கின்றேன்.என குறிப்பிட்டார்


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

AD-01

Popular Posts