உள்நாடு | சமூக வாழ்வு | 2020-11-30 16:04:28

ஊழல் நிறைந்த கல்முனை மாநகர சபை இல்லாமல் ஆக்கப்பட்டு கல்முனையை நகரசபையாக மாற்றியமையுங்கள் : இசெட். ஏ. நௌஷாட்.

கல்முனை மாநகரசபையின் சாதனைகளை விட அதனால் ஏற்பட்ட வேதனைகளே அதிகமாகும். கடந்த நான்கு வருடத்தில் கல்முனை மாநகரம் மற்றுமொரு டுபாய், சிங்கப்பூர், மலேசியாவாக ஆகும் என கூறி வரைபடங்களை காண்பித்து 2000 மில்லியன் எங்கள் கைவசம் உள்ளது எனவும் கூறினார்கள். கடைசியில் 1954 ல் கட்டப்பட்ட சபைக் கட்டத்தினை தகர்த்து 6 மாடிகளைக் கொண்ட நவீன மயமாக்கப்பட்ட சபை கட்டடத் தொகுதியினை கட்டுவோம் என்றார்கள். இறுதியில் ஒன்றும் நடக்காமல் ஊழல்களே நிரம்பி வழிந்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை பிராந்திய அரசியல் செயற்பாட்டாளர் இசெட். ஏ. நௌஷாட் தெரிவித்தார்.

சமகால அரசியல் அரங்கில் கல்முனை மாநகர சபையில் நடப்பது என்ன? எனும் தொனிப்பொருளில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,


1994ம் ஆண்டு முழுக் கல்முனை தொகுதிக்குமான பிரதேச சபை உருவாக்கப்பட்டு அதன் பின்னர் 5 வருடங்கள் பிரதேச சபையாக ஆட்சி தொடர்ந்தது. பின்னர் வந்த காலப்பகுதியில் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் இப் பிரதேச சபையை நகர சபையாக 1999ம் ஆண்டு தரம் உயர்த்தினார்.

அவரது மறைவின் பின்னர் 2001ம் ஆண்டளவில் இந்நகர சபை, மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டது. இத்தரமுயர்வு அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதே தவிர இது ஒருபோதும் மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக இருக்கவில்லை. கடந்த 20 வருடங்களில் இம் மாநகர சபை கல்முனையை சேர்ந்த முகம்மது அஸ்மீர், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், மருதமுனையை சேர்ந்த செனட்டர் மசூர் மௌலானா, சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், சாய்ந்தமருதை சேர்ந்த கலாநிதி சிராஸ் மிராசாஹிப் போன்ற 06 மேயர்களைக் கண்டுள்ளது.

அவர்களின் ஆட்சியை பின்னோக்கிப் பார்த்தால் இம் மாநகர சபை அமைப்பினால் பாரிய அபிவிருத்திகளையோ, சிறந்த நிர்வாக ஆளுமையையோ மற்றும் பொது வசதிகளையோ இம்மாநகர மக்கள் அனுபவிக்கவில்லை. மாறாக மக்கள் தாங்க முடியாத சோலைவரி, வியாபார அனுமதிப்பத்திரவரி, விளம்பரவரி, குப்பைவரி இப்படியான கெடுபிடியான கட்டண அறவீடுகளினால் மக்கள் பெரும் நெருக்கடிகளையும், சுமைகளையும் தாங்கிக்கொண்டு யாரிடம் சொல்லி அழுவது என திகைத்து நிற்கிறார்கள்.

மொத்தத்தில் கல்முனை மாநகரசபையின் சாதனைகளை விட அதனால் ஏற்பட்ட வேதனைகளே அதிகமாகும். கடந்த நான்கு வருடத்தில் கல்முனை மாநகரம் மற்றுமொரு டுபாய், சிங்கப்பூர், மலேசியாவாக ஆகும் என கூறி வரைபடங்களை காண்பிடித்து 2000 மில்லியன் எங்கள் கைவசம் உள்ளது எனவும் கூறினார்கள். கடைசியில் 1954 ல் கட்டப்பட்ட சபைக் கட்டத்தினை தகர்த்து 6 மாடிகளைக் கொண்ட நவீன மயமாக்கப்பட்ட சபை கட்டடத் தொகுதியினை கட்டுவோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளையும் பெற்றதுதான் மிச்சம்.

இறுதியில் கட்டடமும் இல்லை கல்முனை மாநகரசபையும் அங்கும் இங்கும் அலைந்து திரிகிறது. அதனால் தான் நாம் சிந்திக்கிறோம். மாநகர சபை நமக்கு தேவையான ஒன்றுதானா? அம்பாரையை எடுத்துப் பாருங்கள் அதுதான் அம்பாரை மாவட்டத்தின் தலைநகரம். அங்கு பல வருடங்களாக நகர சபைதான் உள்ளது. இன்னும் ஒன்றரை வருடங்களில் மீண்டும் ஒரு உள்ளுராட்சி சபைத் தேர்தலை நாங்கள் 2022 இல் சந்திக்கவுள்ளோம்.

நாம் மீண்டும் ஒன்றுக்கும் உதவாத மாநகர சபைக்கு வாக்களிப்பதா? அல்லது மக்களுக்கு சுமையில்லாத, வரிகள் குறைந்த, கெடுபிடிகள் இல்லாத எளிமையான சபையாக கல்முனையை மாநகராட்சி சபையை நகர சபையாக மாற்றினால் என்ன? என்று சிந்தித்து கொண்டிருக்கிறோம். முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் நினைத்திருந்தால் அந்த நேரத்திலேயே கல்முனையை மாநகர சபையாக மாற்றியிருப்பார் அவர் எண்ணியதெல்லாம் மக்களுக்கு சுமையற்ற குறைந்த வரிகளையுடைய சுமையற்ற நகரசபையே போதும் என எண்ணியதுதான்.

இந்த கல்முனை மாநகர சபையில் 41 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதக் கொடுப்பனவும் வழங்கி போதாக்குறைக்கு பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் பஜட்டை நிறைவேற்ற வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும். அத்துடன் மின்குமிழ்கள் கொடுக்கப்படும். போதாக்குறைக்கு சில வகை கொந்தராத்துக்கள் கொடுக்கப்படும். இறுதியில் உறுப்பினர்கள் ஆதரவாக கையை உயர்த்துவார்கள். இதுதான் வழமையாக இங்கு நடக்கிறது.

இம்மாநகரசபையில் முறையற்ற செலவீனங்கள் மற்றும் வீண்விரயங்கள், அதிகார துஸ்பிரயோகங்கள், குடும்ப ஆதிக்கம், முறையற்ற நியமனம், உயரதிகாரிகள் சொத்து சேகரிப்பு, இவைகளுக் கெல்லாம் ஒரு மாநகர சபை தேவையில்லை. பிரதேச சபையே போதும்.

ஒரு படி முன்னேறி கல்முனையை நகர சபையாக்கினால் போதும். இதிலும் பிரயோசனம் இல்லை என்றால் மக்களின் ஆலோசனையும் விருப்பமும் நான்கு உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்கி தமிழ் முஸ்லிம்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து கல்முனைக்கு ஒரு நகர சபை, சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேச சபை, மருதமுனைக்கு ஒரு பிரதேச சபை, தமிழர் பிரதேசங்களுக்கு ஒரு பிரதேச சபை என மும்மொழிகிறோம். இடத்தின் மேல் பயணிப்பதை விட காலத்தின் மேல் பயணிப்பதே சிறந்தது என்பதை உணர்த்த வேண்டும் என தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts