உள்நாடு | சமூக வாழ்வு | 2020-11-27 22:57:39

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் சம்மந்தமாக கடற்றொழில் அமைச்சருடன் ஹரீஸ் எம்.பி கலந்துரையாடல்

(சர்ஜுன் லாபீர்)

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் வேண்டுகோளுக்கு இணங்க ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடி துறைமுகமாக மாற்றுவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தும் கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  நேற்று(25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடித் துறைமுகமாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக மீீன்பிடி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.விரைவில் இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அத்தோடு கடந்த அரசாங்கத்தின் காலத்தில்  ஹம்பாந்தோட்டை, றக்கவவ பிரதேசத்தில் ஆரம்பிக்கத் திட்மிடப்பட்டிருந்த  கிரப் சிட்டி திட்டத்துக்காகப் பெறப்பட்ட இடம் தொடர்பில் சட்டச் சிக்கல் காணப்படுவதுடன், இதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து தனியார் துறையுடன் இணைந்து இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு வடக்கு கிழக்கு மாத்திரமன்றி தென்பகுதியிலும் காணப்படுவதாகவும், இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி, சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன், காதர் மஸ்தான், சாந்த பண்டார, சந்திம வீரக்கொடி, எச்.எம்.எம்.ஹரிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts