உள்நாடு | அரசியல் | 2020-11-25 20:33:44

உரிமை போராட்டங்களை தமிழர், முஸ்லிம் என்ற கோணத்தில் நோக்காது சிறுபான்மையினர் என்ற கோணத்தில் நோக்குங்கள் - கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான்

(ஹுதா உமர்)

எமது உரிமைகள் பற்றி குரல் கொடுத்தல் அவற்றில் எந்த ஒரு நியாயமுமில்லை என்ற விடயத்தை மிகவும் வெற்றிகரமாக மக்கள் மயப்படுத்துவதில் சிங்கள இனவாதிகள் வெற்றி கண்டுள்ளனர். நான் இங்கு சிறிய உதாரணமொன்றை முன்வைக்க விரும்புகின்றேன். 1956 இல் பண்டாரநாயக்கா அற்ப அரசியல் லாபத்துக்காக தனிச்சிங்களச் சட்டத்தை கொண்டு வந்தது முதல் இந்த நாட்டின் தமிழ் மக்களை சீண்டியதன் வெளிப்பாடே 1983ம் ஆண்டு கலவரம் வரை தொடர்ந்தது . பிரதானமாக மொழியை அடிப்படையாக கொண்டே யுத்தமே நடந்தது என்று எமது மனதில் அன்றிலிருந்து பதியப்பட்டிருந்தது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் கல்முனை மாநகர சபா மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு போசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு பேசிய அவர். தனது உரையில் சிங்கள இனவாதிகள் காலத்துக்கு காலம் ஆட்சியை கைப்பற்றவும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் சிறுபான்மையினரையே துரும்பு சீட்டாக பயன்படுத்தினர். நடப்பிலும் அதனை வெற்றிகரமாக செய்து வருகின்றனர். முதலாவதாக தமிழர்களை காலத்துக்கு காலம் சீண்டி பார்த்தனர். அதன் வெளிப்பாடே முப்பது வருட கால யுத்தம். 2009 யுத்த வெற்றியின் பிற்பாடு கடந்த தசாப்தமாக முஸ்லிம்களையே இவர்கள் துரும்பு சீட்டாக பயன்படுத்தி வருகின்றனர்.

முஸ்லிம்களின் பள்ளிகளை உடைப்பது, சொத்துக்களை சூறையாடுவது, என்ற தொடரில் அதன் அடுத்த அங்கமே முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது. இந்த நாட்டிலே ஜனாஸாக்களை அடக்கம் செய்ய கேட்பது முஸ்லிம்களாகிய எங்களது உரிமை. அவ்வாறு நாம் எமது உரிமை பற்றி குரல் கொடுக்கும்போது. உரிமையை விட கொரோனவிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பது அல்லவா இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் என சொல்கிறார்கள். பார்த்த பார்வையில் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும், சில நியாயவாதிகளையும், இந்த கருத்து ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டுக்கு இலகுவாக கொண்டு செல்ல கூடியது.

இதை நான் ஏன் பதிவு செய்கின்றேன் என்றால் இந்த சபையில் தமிழ் முஸ்லிம்கள் என சிறுபான்மையினத்தை சேர்ந்த இரண்டு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இருக்கின்றோம். காலத்துக்கு காலம் நாம் இரண்டு சமூகமும் எமது உரிமைகள் பறிக்கப்படும்போது மறுக்கப்படும்போது குரல் கொடுத்து போராட்டங்கள் செய்து வருகின்றோம். ஆனால் இனவாத அரசாங்கங்கள் ஒருபோதும் அவற்றை காதில் எடுத்த பாடில்லை என்பது நாம் நன்கறிந்த உண்மை. அவர்கள் எவ்வாறு நமது உரிமை போராட்டங்களை பலவீனப்படுத்தினார்கள் என்பதை தமிழ் முஸ்லிம் என்ற கோணத்தில் நோக்காது பொதுவாக சிறுபான்மையினர் அந்தக் கோணத்தில் சிந்தித்து பாருங்கள்.

இந்த நாட்டினுடைய தமிழ் மக்கள் அவர்களுக்காக குரல் கொடுக்கும்போது மிகவும் கச்சிதமாக முஸ்லிம்களை தம் பக்கம் சாய்ப்பர்கள் அல்லது வாய்க்கு பூட்டு போடுவார்கள். முஸ்லிம்கள் குரல் கொடுக்கும்போது தமிழர்களை கச்சிதமாக தம் பக்கம் சாய்ப்பர்கள். அல்லது வாய்க்கு பூட்டு போடுவார்கள். எந்த விதத்திலாவது நாம் இரண்டு சமூகமும் அவர்களின் பிரித்தாளும் சதியின் பொறியில் நம்மை அறியாமலேயே சிக்குண்டு பிளவுபட்டு எம்மிரு சமூகத்தினதும் உரிமைகளை இறுதியில் விட்டு கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களின் போராட்டத்தின் நியாயம் புரியும். ஏனெனில் அவர்களிலும் பெரும்பாலானவர்களுக்கு சிங்களம் தெரியாது. தனி சிங்கள அரச கரும மொழியாக்களின் விபரீதத்தை உணரக்கூடியவர்கள். அவ்வாறெனில் ஏன் வடகிழக்கிலும் வடகிழக்குக்கு வெளியிலும் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஆதரவு தமிழர் போராட்டத்தில் கிடைக்கவில்லை என சிந்திக்கலாம்.
ஆம் நியாயமான கேள்வி. இங்கே தான் சிங்கள பேரினவாதிகளின் பிரித்தாளும் சதி தன் வேலையை காட்டுகின்றது.

இலகுவாக சிங்களத்தில் கதைத்து தம் வேலைகளை செய்து முடிக்கக்கூடிய வடகிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களை தம் வசமாக்கி இந்த நிலைமையை எடுத்து காட்டி வட கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களிடம் தமிழர்களின் உரிமை போராட்டத்தின் நியாய தன்மையை இழக்க செய்தனர்.வட கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் நிலைப்பாட்டிற்கு வட கிழக்கில் வாழும் முஸ்லிம்களையும் கொண்டு வரும்வரை சதிகாரர்கள் ஓயவில்லை என்பதே உண்மை.போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் வடகிழக்கு முஸ்லீம் வாலிபர்களும் விடுதலை போராட்டத்தில் இருந்துள்ளார்கள் என்ற செய்தியையும் நான் இங்கே நினைவு கூற விரும்புகின்றேன்.

ஜனாஸா விவகாரத்திலும் எங்களது பிரச்சினையை தம் பிரச்சினை போன்று நோக்காத விடத்து அதில் நியாயத்தன்மை புரிவதில்லை என்பதே உண்மை. அதனால் தான் நீங்கள் ஜனாஸா அடக்கம் செய்ய கேட்பது கொரோனவை பரப்ப கேட்பது போல் என்ற கருத்தாடலை சமூக மயப்படுத்தியுள்ளனர். கவலைக்குரிய விடயம் என்னவெனில் சிங்கள இனவாதிகளின் எலிப்பொறியில் சில தமிழ் அரசியல்வாதிகளும் சிக்கியுள்ளதாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கொரோனோ ஜனாஸாக்களை அதி உலர் வலயம் ஆகிய மன்னாரிலே நல்லடக்கம் செய்ய முடியாது என்று கூறிய கருத்தும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து விட்டது. எவ்வாறு அவர்கள் தமிழர் போராட்டத்தில் வட கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களை பொறியில் சிக்க வைத்தனரோ அவ்வாறே முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களில் தமிழர்களை கச்சிதமாக வளைத்து போடுகின்றனர் என்பதை நாம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நானறிந்த மட்டில் அதிகமாக தமிழர்கள் தகனம் செய்வதையே பின்பற்றுகின்றனர் அதனால் இது ஒரு பெரிய பிரச்சினையாக விளங்காமல் இருக்கலாம். அதனால் தான் நாம் கேட்பது எங்களது ஸ்தானத்தில் இருந்து இந்த பிரச்சினையை நோக்குங்கள் இதன் மனிதாபிமான வேண்டுதலை புரிந்து கொள்வீர்கள்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

AD-01

Popular Posts