உள்நாடு | அரசியல் | 2020-11-18 09:34:00

தகவலறியும் சட்ட மூலம் தொடர்பில் கல்முனை மேயரின் கருத்து நாட்டின் இறைமையை கேள்விக்குட்படுத்துகிறது : அரச உயர்மட்டங்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைப்பு.

(அபு ஹின்ஸா)

கடந்த மாதம் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தகவலறியும் சட்ட மூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மஹிந்தவை வீழ்த்த தற்காலிய கூட்டாக அமைக்கப்பட்ட ரணில்- மைத்திரி ஆட்சியில் பிந்நாளில் முரண்பாடுகள் வரும் என்பதை அறிந்து உடனடியாக இந்த திருத்தத்தை கொண்டுவந்தார்களே தவிர நாட்டின் நலனுக்காக கொண்டுவரவில்லை. அந்த திருத்த சட்டத்தில் கொண்டுவந்த தகவலறியும் சட்டமூலம் வீணான தொல்லையாக இருக்கிறது. தேவையில்லாத தகவல்களையெல்லாம் கேட்கிறார்கள் இதற்கு பதிலளிப்பது கடினமான விடயமாக இருக்கிறது. நிர்வாகத்தை கொண்டுசெல்ல மிகப்பெரும் இடையூறாக அந்த தகவலறியும் சட்டமூலம் இருக்கிறது. தகவலறியும் சட்டமூலத்தை புத்திஜீவிகள் பயன்படுத்துவதில்லை. நிர்வாகத்தை முடிச்சிப்போட என்னும் துஷ்ட சிந்தனை கொண்டோர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த தகவலறியும் சட்டமூலம் இந்த 20 ஆம் திருத்தத்தில் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த சட்டத்தையும் நீக்காமல் வைத்துள்ளார்கள் என்றார்.

இந்த கருத்து சர்ச்சையாகி தகவலறியும் சட்டமூலத்தை அதிகம் பயன்படுத்துவோர் மத்தியில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரச உயர்மட்டங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

கல்முனை மேயரின் 2016/12 ம் இலக்க சட்டப்புறக்கணிப்பு தேசத்தின் இறைமையை புறக்கணிக்கும் செயல் எனும் தலைப்பில் எமது நாட்டின் நீதியமைச்சர், சபாநாயகர், ஆளுநர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், தகவலறியும் சட்டமூல ஆணையாளர் சட்டமா அதிபர், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் போன்றோருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளர் இசட்.ஏ. நௌசாத்தினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் அவர்,

நான் அம்பாரை மாவட்ட நிருவாக எல்லைப்பரப்பிற்குட்பட்ட கல்முனை மாநகர சபை உள்ளுராட்சி ஆதிக்கத்திற்குட்பட்ட மருதமுனையை பிறப்பிடமாகவும், வதிவிட மாகவும் கொண்டவன். நாட்டின் சட்டதிட்டங்களை தலை வணங்கி ஏற்று வாழும் பிரஜை. நாட்டின் சட்டங்கள் புறக்கணிக்கப்படும் போது எமது தேசியமும் புறக்கணிக்கப்படுகின்றது என்பதை விழித்தவனாய் இம்மனுவை சமர்ப்பிக்கின்றேன்.

தேசத்தின் மக்கள் பிரதிநிதியாக பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் தேசத்தையும் அதன் இறமையையும் பாதுகாப்பேன் என்ற உறுதிமொழிப் பிரமாணத்தை அரசுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தியே பதவி ஏற்பது மரபு.

கல்முனை மாநகர மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக, கொண்டுவரப்பட்ட தகவலரியும் சட்டத்தினை 20வது திருத்தச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 2016/12 ம் இலக்க சட்டத்தை வறிதாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது இவர் தனது மேயர் பதவியை பொறுப்பேற்க மேற்கொண்ட சத்தியபிரமாணத்தை புறக்கணிக்கும் செயலாகும்.

தான் மேற்கொண்ட சத்தியப் பிரமாணத்தை புறக்கணித்தவர், அப்பதவியையும் புறக்கணித்தவராக கருத வேண்டும்

225 பாராளுமன்ற பிதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்திருத்தச் சட்டம் தேசத்தின் முழு பிரஜைகளும் பேதமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படுகின்றது.

தகவலறியும் சட்டம் எமது தேசத்தின் ஜனநாயகத்தின் பிரகாசத்தை உலகுக்கு முன்னிலைப் படுத்தியதாக ஜனநாயகவாதிகளும், அரசயில் நிலை பற்றிய எதிர்வு கூறுபவர்களும் ஆங்காங்கே பாராட்டியதை நாம் புறக்கணிக்கலாகாது.

சட்டம் மக்களின் விருப்பங்களையும், செயல்களையும் கட்டுப்படுத்தும் ஒன்றாகவும் அதன் மூலம் அவர்களுக்கிடையிலான இடையூறுகளையும், பிணக்குகளையும் அகற்றுகின்ற ஒன்றாகவுமுள்ளது.

கல்முனை மேயர் தகவலறியும் சட்டம் அதிகாரிகளுக்கு தொல்லை என வெளிப்படுத்தியது அவரது பதவியைக்கொண்டு மக்களை தவறான வழியில் திசை காட்டியதாக கருதக்கூடியதாக உள்ளது.

ஆகையால்,

1. தனது மேயர் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதை ஏற்கவேண்டும்
2. தேசத்தையும், தேசத்தின் இறமையையும் மக்களின் உயர்மன்றாகிய பாராளுமன்றத்தையும் அவமானப்படுத்தியுள்ளார்.
3. மக்களுக்கு தகவலறியும் சட்டத்தை ஒரு சாபக்கேடாக திரிவுபடுத்திக் கூறியுள்ளார் என்பதை ஏற்று இவருக்கெதிராக எமது தேசத்தின் சட்டப்பிரமாணங்கள் எதனை முன்வைக்கின்றதோ அதனைக் கொண்டு நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

தமது உரிமை தொடர்பில் கவனமின்றி தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சட்ட நிவாரணம் கிடைப்பதில்லை. அது சட்டத்தால் ஏற்றுக்கொள்ள சிந்தாந்தமாகும். இது நீங்கள் உட்பட சகல தேச மக்களுக்கும் ஏற்புடையதெனக் கொண்டு இம்முறையீட்டை கவனயீர்ப்புக்கொள்ள வேண்டுமென பணிவாய் வேண்டிக்கொள்கின்றேன். என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts