உள்நாடு | கல்வி | 2020-10-24 21:39:04

விசேட கல்விப்பிரிவில் கல்வி கற்பவர்களையும் சமமாகவே மதிக்க வேண்டும்  கல்முனை வலயக் கல்வி கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர் தெரிவிப்பு 

(நிந்தவூர்  நிருபர் - ஏ.பி.அப்துல் கபூர்)

இந்த நாட்டில் அரச பாடசாலைகளில் கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி பெறும் வாய்ப்பினை உறுதிப்படுத்துவது கல்வித்துறை அதிகாரிகளின் கடமையாகும், என 

கல்முனை வலயக் கல்வி கணக்காளர் கே. றிஸ்வி யஹ்ஸர் தெரிவித்தார். 

கல்முனை கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் உள்ள வசதிகளை அதிகரிக்கும் வகையில் முறைசாரா கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று (23) வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறியரக துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த சிறிய ரக துவிச்சக்கர வண்டிகளை மாணவர்களின் உடல் மற்றும் உள விருத்திக்காக பயன்படுத்துமாறும் அவற்றை பயன்படுத்தாமல் பாடசாலைகளுக்குள் காட்சிக்காக மட்டும் வைக்க வேண்டாம். இந்த துவிச்சக்கர வண்டிகள் பயன்படுத்தி பழுதாகினால் அவற்றை திருத்தி மாணவர்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க அதிபர்கள் முன்வர வேண்டும் என நிகழ்வில் பங்குபற்றிய பாடசாலை அதிபர்கள் மற்றும் விசேட பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களிடமும்  கேட்டுக்கொண்டார். 

நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ஏ.எச். பெளஸ் உரையாற்றுகையில், விசேட கல்வித்துறையில் கல்வி கற்பது ஒரு வரப்பிரசாதமாகும். கல்முனை கல்வி வலயத்தில் உள்ள 65 பாடசாலைகளில் 06 பாடசாலைகளில் மாத்திரம் தான் இந்த விசேட மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பிரிவு இயங்குகிறது. நமது கல்வி வலயத்தில் இப்பிரிவில் கல்வி கற்பதற்காக அதிகளவான மாணவர்கள் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களும் எவ்வித வேறுபாடிகளுமின்றி நல்ல பிரஜைகளாக வர வேண்டும். பாடசாலைகளில் இயங்குகின்ற இப்பிரிவுகளை சிறப்பாக இயக்குவதற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அவசியமாகும். இப்பிரிவிற்கு அதிபர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அதனை முதன்மையானதொரு பிரிவாக பாடசாலைகளில் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். இத்துறையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த துவிச்சக்கர வண்டிகளினை மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்துவதற்கு பாடசாலைகளில் ஒரு குறிப்பிட்ட தளத்தினை தயார் செய்து வழங்க வேண்டும். இன்று இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு கால்கோளாக இருந்த வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட கணக்காளர், முறைசாரா கல்விப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

இந்த துவிச்சக்கர வண்டிகள் கமு/உவெஸ்லி உயர் பாடசாலை, கமு/அல்-மிஸ்பா மாகா வித்தியாலயம், கமு/சண்முகா வித்தியாலயம், கமு/றியாழுள் ஜன்னா வித்தியாலயம், கமு/அல்-அதான் வித்தியாலயம் உட்பட கமு/அல்-மதீனா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கே வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. சரவணமுத்து, சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல். அப்துல் றஹ்மான், காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜயக்கொடி டேவிட், ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.சியாம் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts