உள்நாடு | சமூக வாழ்வு | 2020-10-24 18:10:45

கல்முனை பிராந்தியத்தில்  9 பேருக்கு  கோரோனா; இறுக்கமான சுகாதார நடைமுறைகளை  பின்பற்ற வேண்டும்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)     

கல்முனை பிராந்தியத்தில்  9 பேருக்கு  கோரோனா; இறுக்கமான சுகாதார நடைமுறைகளை  பின்பற்ற வேண்டும் பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  டாக்டர் ஜி.சுகுணன்  வேண்டுகோள்.

கல்முனைப் பிராந்திய  சுகாதார சேவைகள்  பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட  பகுதிகளில்  இதுவரை  தற்போது  கோரோனா தொற்றுக்கு  உள்ளவர்களாக  9 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இவர்களுள்  பேலியகொடை  மீன் சந்தைக்கு  சென்று வந்தவர்கள்  என  அறியப்பட்ட 8 பேரும், வெளிநாடு ஒன்றில் இருந்து  வருகை தந்த  நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த  ஒருவரின்  சகோதரிக்கும் என 9 பேருக்கும் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  டாக்டர் ஜி.சுகுணன்  இன்று (24) தெரிவித்தார்.

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே  வைத்திய பணிப்பாளர்  இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பேலியகொட  மீன் சந்தைக்கு  சென்று வந்தவர்கள்  என  அடையாளம் காணப்பட்ட  33 நபர்களை  நாம் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம்.  இவர்களுக்கு  PCR பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டபோது   இதில்  8 நபர்களுக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்களில்  கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 3 நபர்களும்  பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 5 நபர்களும் அடங்குகின்றனர்.  இன்னும் 10 நபர்களுடைய PCR  முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தோற்றுக்குள்ளானவர்களை  மட்டக்களப்பு மாவட்டத்தின்  கரடியனாறு பிரதேசத்தில் அமைந்துள்ள கொவிட் 19 சிகிச்சை முகாம்  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களது நெருங்கிய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 129 பேரை  அவர்களது வீடுகளில்  தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றோம்.  இவர்களுக்கும்  PCR  பரிசோதனைகளை  மேற்கொள்வது  தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்.

பொதுமக்கள்  சுகாதார பிரிவினர் வழங்குகின்ற  இறுக்கமான கட்டுப்பாடுகளை  தொடர்ந்து பின்பற்ற வேண்டியது  அவசியமாகும்.  திணைக்களத்தின் தலைவர்கள் , பொலிசார் , இராணுவ உயர் அதிகாரிகளோடு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம். இந்த கலந்துரையாடலுக்கமைய கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் பொது மக்கள் ஒன்றுகூடும் அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்வது என முடிவு செய்துள்ளோம்.  அதே போன்று  பொதுச் சந்தைகள் மற்றும்  வர்த்தக நிலையங்களுக்கு மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தடுத்து  அவற்றை  வேறு இடங்களுக்கு நகர்த்துவது  பற்றியம்  பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளோம். ஒலிபெருக்கி  உதவிகள் மூலம்  இவற்றை  விழிப்புணர்வூட்டி வருகின்றோம்.  தற்போதைக்கு  பிரதேசத்தை முற்றாக முடக்கி  ஊரடங்கு சட்டத்தை  அமுல்படுத்துவதில் இருந்து தவிர்ந்து  பொதுமக்கள்  ஒன்று சேர்வது  களியாட்டங்களில் ஈடுபடுவது,  விழாக்களை நடத்துவது  என  அனைத்து ஒன்றுகூடல் செயற்பாடுகளையும்  தவிர்த்துள்ளோம்.  அதேபோன்று  சமய நிகழ்வுகளுக்காக  மக்கள் ஒன்று சேர்வதையும்  முற்றாக தடை செய்துள்ளோம்  என்று  தெரிவித்தார். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts