உள்நாடு | சமூக வாழ்வு | 2020-10-13 11:48:50

பிரதமரின் பணிப்புரைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் : மாளிகைக்காடு மையவாடிக்கு நிரந்தர தீர்வு.

(ஹுதா உமர்)

அண்மைக்காலமாக பாரிய கடலரிப்புக்குள்ளாகியுள்ள காரைதீவு பிரதேச மாளிகைக்காடு பொது மையவாடியை பாதுக்காக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நேற்று (12) பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயதத்திற்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக இன்று (13) காலை அம் மையவாடியை பாதுகாக்க நிரந்தர தீர்வை வழங்கும் முதல் கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சில தினங்களாக உச்சகட்ட கடலரிப்புக்கு இலக்காகி பகுதிளவில் இடிந்து விழுந்த மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடி தொடர்பிலும் ஒலுவில் பிரதேச கடலரிப்பின் பாதிப்புக்கள் தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை அவரது விஜயராம வாசஸ்தலத்தில் நேற்று  (12) சந்தித்து பேசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதமருக்கு நிலமையை தெளிவாக விளக்கினார். இதையடுத்து ஜனாஸா மையவாடி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜனாஸாக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குமாறு கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றுக்காலை பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் மாளிகைக்காடு பொது மையவாடியை பாதுக்காக்க நிரந்தர தீர்வை பெறுதல் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (13) காலை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலில் போஷகர் ஏ.பௌசர் ஹாஜியின் தலைமையில் நடைபெற்றது. இங்கு கரையோரம் பேணல் திணைக்கள பிராந்திய  பொறியியலாளர் கே.எம். றியாஸ் கலந்துகொண்டு பாரியளவிலான பாராங்கற்களை கொண்டு நிரந்தர தீர்வுக்கான வழிகளை ஏற்படுத்தும் போது இப்பிரதேசம் எதிர்நோக்கும் சாதக, பாதங்களை விளக்கினார்.

இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபை பிரதிதவிசாளர் ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ பாவா, சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா, செயலாளர் ரோஷன் மரைக்காயர், காரைதீவு பிரதேச செயலக கரையோரம் பேனல் திணைக்கள அதிகாரி, தேசிய காங்கிரசின் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளர் யு.எல்.என். ஹுதா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முதலாம் வட்டார அமைப்பாளர் எம்.எச்.எம். நாஸர், அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் உட்பட நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டு நிரந்தர தீர்வாக பாரியளவிலான பாராங்கற்களை கொண்டு தடுப்புவேலியமைத்தலே சிறந்த தீர்வாகும் என ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அத்துடன் மீனவர்களின் தொழிலுக்கான வசதிகளையும் கரையோரம் பேணல் திணைக்கள உதவியுடன் செய்து கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டு ஆரம்ப வேலைகளை கரையோரம் பேணல் திணைக்கள பிராந்திய  பொறியியலாளர் கே.எம். றியாஸ் தலைமையிலான அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts