கல்வி | கல்வி | 2020-05-20 12:18:27

கல்முனை நூலகங்களின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள பொது நூலகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள பொது நூலகங்களின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் இன்று மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் உட்பட நூலகர்களும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இந்நூலகங்களில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் நூலகர்களிடம் கேட்டறிந்து கொண்ட முதல்வர், முன்னுரிமை அடிப்படையில் கட்டம் கட்டமாக அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று அபாய சூழ்நிலை காரணமாக மாநகர சபை எதிர்நோக்கியுள்ள நிதிப்பற்றாக்குறை காரணமாகவே நூலகங்களில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த முதல்வர், நிலைமை சீரடைந்த பின்னர் அவர்கள் மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

சாய்ந்தமருது பொது நூலகக் கட்டிடத்தை புனரமைப்பு செய்வது குறித்தும் இக்கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts