கட்டுரைகள் | அரசியல் | 2020-08-21 15:27:32

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு அநீதி : அரசு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சங்க பிரதம செயற்பாட்டாளர்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை இந்த அரசாங்கம் அண்மையில் வழங்கிய நியமனங்களில் இணைத்துக் கொள்ளாமல் விட்டது மிகப்பெரும் அநீதியாகும். கடந்த காலங்களில் வழங்கிய நியமனங்கள் போது எவ்வித பாகுபாடுகளுமில்லாமல் வழங்கப்பட்ட நியமனம் இம்முறை இவ்வாறு பாகுபாடு பார்க்க காரணம் என்ன என்பது குழப்பமாக உள்ளது என அம்பாறை மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சங்க பிரதம செயற்பாட்டாளர் யூ.எல்.என். ஹுதா தெரிவித்தார்.

வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் அண்மைய நியமனங்களில் சேர்த்துக்கொள்ளப்படாமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர். தொடர்ந்தும் பேசுகையில்,

அரசின் முக்கிய பல உயர் பதவிகளில், அமைச்சுக்களின் உயரிய பதவிகளில் ஏன் இந்த அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்களே வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் தான். இருந்தும் இவ்வாறு எங்களை ஒருவிதமாக ஓரங்கட்டியிருப்பது கவலையளிக்கும் விடயமாக உள்ளது. பல இன்னல்களை கடந்து எங்களுடைய கனவுகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் எங்களின் வாழ்க்கைக்கு அரசினால் வெளியிடப்பட்ட நியமனப்பட்டியல் மிகப்பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. இதனால் பலத்த மன உளைச்சலை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.

வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் என்றால் அவர்கள் எதோ மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் போல எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள 90 சதவீதமானவர்கள் அன்றாட தினக்கூலிகளின் பிள்ளைகள் என்பதுதான் கசப்பான உண்மை. கனவுகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் வெளிநாட்டு பல்கலைக்கழகளில் தங்களுடைய பட்டங்களை முடித்தவர்கள் அவர்கள்.

பல்கலைக் கழகமானிய ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்லது அதற்கு சமமான டிப்ளோமா தகைமைகளைக் கொண்ட 50,000 பட்டதாரிகளை பயிற்சி வழங்கி அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது அந்த விளம்பரத்தில் இவ்வாறான வேறுபாடு இருக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தோற்று உச்சநிலையை அடைய முன்னர் தெரிவு செய்யப்பட்ட தகமை கொண்ட பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் அரசினால் வெளியிடப்பட்டு அவர்களில் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் பலருக்கும் நியமனக்கடிதங்களும் வழங்கப்பட்டிருந்தன. ஆனாலும் தேர்தல் காரணமாக குறித்த நியமனம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் கடந்த ஆகஸ்ட் 17 அன்று பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையதளத்தில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்பட்டியல் புதிதாக இடப்பட்டிருந்தது.

குறித்த பட்டியலில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற சகல பட்டதாரிகளினதும் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. ஆயினும் மார்ச் மாதம் வெளியான பெயர்ப் பட்டியலில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் பெயர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன் நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டிருந்தது. இப்போது அது இரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பதிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற நாடுதழுவிய பட்டதாரிகள் தங்களுக்கான நியமனங்களைப் பெற்றுத் தரக் கோரி இன்று (21) காலை 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்க்கு கவனயீற்ப்பு பேரணியொன்றையும் மேற்கொண்டிருந்தனர் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எங்களின் வாழ்வாதார நிலையை சரியாக உணர்ந்து அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எங்களுக்கான இந்த உரிமையை துரித கெதியில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்லா மாவட்ட பட்டதாரிகள் சார்பிலும் கோரிக்கையை முன்வைக்கிறேன் என்றார்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts