பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-08-01 18:44:48

முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் தலைவருமான அல்ஹாஜ். வை.கே.றஹ்மான் (JP) அவர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தி..

தியாக சிந்தையையும், சகிப்புத் தன்மையையும் அதிகம் வலியுறுத்தும் “ஈதுல் அழ்ஹா” எனப்படும் தியாகத் திருநாளில் நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலைமையையும், நெருக்கடியான சூழ்நிலைகளையும் கருத்திற் கொண்டு இனங்களுக்கிடையிலான நல்லெண்ணமும், நல்லுறவும் நீடித்து நிலவ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் தலைவருமான அல்ஹாஜ். வை.கே.றஹ்மான் (JP) அவர்கள் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் அல்ஹாஜ். வை.கே.றஹ்மான் (JP) அவர்கள் தெரிவித்ததாவது...

நபி இப்றாஹீம் (அலை) அவர்களும் அன்னாரின் அருமைப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களும், ஹாஜரா அம்மையாரும் அன்றைய அரேபிய தீபகற்பகத்தில் முகங்கொடுத்த இன்னல்களுக்கு அவர்களது அளப்பரிய தியாகம் வரலாற்றில் சான்று பகன்று கொண்டிருக்கின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்காவிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் ஒன்று திரண்டு தங்களது ஈமானிய உணர்வை பிரகடனப்படுத்துகின்றனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை ஒவ்வொரு வருடமும் உலகம் கண்டு வியக்கின்றது.

இஸ்லாத்தின் இறுதி கடமையான ஹஜ் தியாகத்தையும் சகிப்புதன்மையின் சிறப்பையும் அதிகம் வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் இறுதிக் கடமையான புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய திருப்தியில் ஹஜ்ஜாஜிகள் 'ஈதுல் அழ்ஹா' தியாகத்திருநாளை கொண்டாடும் இவ் வேளையில், உலகளாவிய முஸ்லிம் உம்மத்துடன் ஒன்றிணைந்து இலங்கை முஸ்லிம்களாகிய நாங்களும் இந்தத் திருநாளைச் சந்திக்கின்றோம்.

இலங்கையை பொறுத்தவரை ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன ரீதியான செயல்பாடுகள் தொடர்ந்தும் நீடிப்பது துக்ககரமானதாகும். இவ்வாறான சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சியில் அபிவிருத்தியிலும் உயரிய பங்களிப்பை செய்கின்ற அதே வேளையில், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமதானத்தையும் ஏற்படுத்துவதிலும் ஒத்துழைத்து வருகின்றனர்.

உலகில் பொதுவாக இஸ்லாத்தின் எழுச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள வெறுப்பும் அச்ச உணர்வும் அதிகரித்துள்ளதால் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவற்றை வெற்றிகரமாக முறியடித்து அல்லாஹ்வின் அருளால் சாந்தியும் சமாதானமும் நிலைபெற இந்த நன்னாளில் பிரார்த்திப்போமாக.

இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில் அவர்களது வாழ்வில் மலர்ச்சியும், புத்தெழுச்சியும் ஏற்பட வேண்டுமென மீண்டும் உளப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts