பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-08-01 13:25:12

கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சமூக, பொருளாதார, கலாசார ரீதியில் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்ற முஸ்லிம்கள், தம்முடைய தனித்துவமான உரிமைகளை விட்டுக் கொடுக்காதவாறு, தமது வாழ்வொழுங்கு முறைமையை சீர்படுத்தி, சகவாழ்வுக்கு முன்னுரிமையளிப்போம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"மனிதனைப் புனிதப்படுத்துகின்ற ஹஜ் எனும் தியாகம் நிறைந்த வணக்கம் எமக்கு நிறைய படிப்பினைகளைக் கற்றுத் தருகின்றது. முஸ்லிம்களிடையே காணப்பட வேண்டிய ஒற்றுமை, சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு அம்சம் ஹஜ்ஜை விட வேறெதுவும் இருக்க முடியாது. அவ்வாறே மனிதர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சகிப்புத்தன்மை, தியாகம் என்பவற்றையும் ஹஜ் எமக்கு கற்றுத்தருகின்றது. அதில் எமக்கு நிறையவே படிப்பினைகள் இருக்கின்றன.

தவிரவும் இறையச்சத்துடன் தீய நடத்தைகளைத் தவிர்த்து, நற்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் எந்தவொரு மனிதரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுபவர்களாகவும் மாறுவதற்கு ஹஜ் வழிகாட்டுகிறது.

அவ்வாறே எந்த இனமாயினும் மதமாயினும் 'மனிதம்' என்கிற பண்புடன் நடந்து கொள்வதற்கான வழிகாட்டியாக எமது புனித மார்க்கம் இஸ்லாமும் அதில் விசேடமாக ஹஜ் எனும் வணக்கமும் திகழ்கின்றன. பொதுவாக 'ஹஜ்' போதிக்கும் தத்துவங்களை ஒவ்வொருவரும் தமது வாழ்வில் கடைப்பிடிப்பாராயின் சமூகத்திலும் தனி நபர்களிடையேயும் ஒருபோதும் பிளவுகளோ பிணக்குகளோ ஏற்பட வாய்ப்பிருக்காது.

இன்றைய எமது நாட்டு அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்கள், மாற்று இனங்களை சேர்ந்த சகோதரர்களுக்கு முன்மாதிரியாக வாழ்வதன் மூலமே, அவர்கள் எம்மீது கொண்டிருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக வாய்ப்பேற்படும். அதற்காக இன்றைய ஈகைத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம். அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts