கட்டுரைகள் | அரசியல் | 2020-07-27 17:09:37

திகாமடுல்லையில் கொழுந்து விட்டெரியும் அரசியல் தீச்சுடர்

(மிஸ்பாஹுல் ஹக்)

இலங்கையில் அரசியல் ஆட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. திகாமடுல்லயிலும் தேர்தல் ஆட்டங்கள் உச்சத்திலுள்ளன. திகாமடுல்லவானது 07 ஆசனங்களை கொண்ட ஒரு தேர்தல் மாவட்டம். 20 கட்சிகளும், 34 சுயேற்சைக் குழுக்களும் களம் கண்டுள்ளன. தேர்தல் முடிவுகளை ஊகிப்பதும் கடுமையான சவாலாக உள்ளது. முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையுமா, தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படுமா போன்ற பல்வேறு வினாக்களை பெரிதும் அவதானிக்க முடிகிறது.

ஒரு ஆசனத்துக்கு தேவையான வாக்கு எண்ணிக்கை..?

அம்பாறை மாவட்டத்தில் 503 700 பேர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பொதுவாக பாராளுமன்ற தேர்தல் ஒன்றில் 74 சதவீத வாக்களிப்பையே எதிர்பார்க்க முடியும். கடந்த முறை அவ்வாறே இருந்துள்ளது. 74 சதவீதம் என்பது 372 738 வாக்குகளாகும். இதில் வெட்டுப்புள்ளியை நெருங்காத கட்சிகளின் வாக்குகள், செல்லுபடியற்ற வாக்குகள் அண்ணளவாக 25 000 அளவானதாக இருக்கும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 18 423 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததோடு, மக்கள் விடுதலை முன்னணி 5391 வாக்கையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது ( வெட்டுப்புள்ளியை நெருங்கவில்லை ). அளிக்கப்பட்டதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காக 347 738 வாக்குகள் இருக்கும். ஒரு ஆசனத்திற்கு 57 956( 347 738 ÷ 6 ) வாக்குகள் தேவைப்படும்.

கட்சிகள் எடுக்க சாத்தியமான வாக்குகள்..?

மொட்டு...?

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை தொகுதியில் மொட்டு அணியானது 89 674 வாக்குகளை பெற்றிருந்தது. கடந்த முறை அம்பாறை தொகுதியில் 87.2 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. இது கடந்த ஐனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களிடையே விதைக்கப்பட்டிருந்த இனவாத விழிப்புணர்வினால் ஏற்பட்டது. இம் முறை அவ் விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக 74 சதவீத வாக்களிப்பையே எதிர்பார்க்க முடியும். 2015ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலில் 77 சதவீதமே வாக்கு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் 74 சதவீதமே வாக்களிக்கப்படும் என கொண்டால், இம் முறை அம்பாறை தொகுதியில் 75274 [ (89 674×74) ÷ 87 ] வாக்கையே மொட்டு அணியினர் எதிர்பார்க்க முடியும்.

அம்பாறை தொகுதி தவிர்ந்து பொத்துவில் தொகுதியில் 12 000 அளவான சிங்கள வாக்குகளையும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 10 000 அளவான முஸ்லிம், தமிழ் வாக்கையும் மொட்டு அணியால் பெற முடியும். இம் முறை மொட்டு அணியில் மு.அமைச்சர் அதாவுல்லாஹ் இல்லாததன் காரணமாக மொட்டுவுக்கு குறைந்தளவான முஸ்லிம் வாக்கே கிடைக்கும் என்பது அனைவரும் ஏற்கக் கூடிய விடயம். இம்முறை திகாமடுல்லவில் மொத்த வாக்காக 97 272 வாக்குகளை மொட்டு அணி பெறக் கூடும். இது மொட்டு அணியினர் பெறச் சாத்தியமான ஆகக் குறைந்த வாக்கெண்ணிக்கை. ஆளும் கட்சி என்ற வகையில் நான் இங்கு கணிப்பிட்டுள்ளதை விட ஒரு சிறு எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

டெலிபோன்

இம் முறை டெலிபோன் சின்னத்தில் மு.காவும், ஐ.ம.ச அணியினரும் இணைந்து போட்டியிடுகின்றனர். தற்போது மு.காவினரிடம் 60 000 அளவான முஸ்லிம் வாக்குகளே உள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட மு.கா 69 080 வாக்குகளையே பெற்றிருந்தது. இதில் பெருமளவான ஐ.தே.கவினதும், தமிழ் மக்களது வாக்குகளும் உள்ளன. இவ் வாக்குகள் இத் தேர்தலில் மு.காவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் மு.காவின் வாக்கு வங்கியில் 80 000 வாக்குகள் இருந்தன. இப்போது மு.காவை பூரணமாக ஆதரித்த பெருமளவான வாக்கை கொண்ட பிரதேசங்களான சாய்ந்துமருது, பொத்துவில், நிந்தவூர் வாக்குகள் பெரும் சரிவை சந்துள்ளன. இது 20 000 வாக்கை விட அதிகமாக இருக்கும் என்பதை சாதாரண கணக்கினூடாகவே ஏற்க முடியும். எக் கோணத்தில் நோக்கினால் மு.காவுக்கு 60 000 என்ற வாக்கு அதிகமாக இருக்குமே தவிர, குறைவாக இருக்காது. இம் முறை அட்டாளைச்சேனை, கல்முனை, ஒலுவில் ஆகிய மூன்று பிரதேசங்களிலேயே மு.காவுக்கான பேராதரவை அவதானிக்க முடிகிறது. இதில் கல்முனையில் மு.காவானது ஏனைய கட்சிகளை விட கூடுதலான வாக்கை பெறும் என்ற நிலையில் உள்ள போதும், அது கடந்த காலங்களை போன்றிருக்காது. கல்முனையில் மு.மா.ச.உ ஜவாத்தும், சட்ட முதுமாணி வை.எல்.எஸ் ஹமீதும் மயில் கட்சியில் களமிறக்கப்பட்டுள்ளனர். தே.காவில் பிரபல உயிரியல் பாட ஆசான் றிஷாத் ஷெரீப் களமிறங்கியுள்ளார். இவர்கள் மூவரும் குறித்தளவு தாக்கம் செலுத்தக் கூடியவர்கள். கடந்த காலங்களில் எவ்வித சிறு சவாலுமின்றி மு.கா கல்முனையில் வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச 42 241 வாக்குகளை பெற்றிருந்தார். அத் தேர்தலில் ஐ.தே.கவின் தீவிர பற்றாளர்கள் மாத்திரமே சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருந்தனர். இது குறைவடைய வாய்ப்பில்லை. தற்போது ஐ.தே.கவிலிருந்து சஜித் அணியினர் பிரிந்துள்ளதால், இவ் வாக்குகள் இரு அணியினருக்கும் சமனாக பிரிவதாக கொள்வோம். ஒரு அணிக்கு 21 121 வாக்குகள் வரும். அம்பாறையில் ஐ.ம.சவை விட ஐ.தே.கவே பலமாக உள்ளது. அம்பாறையில் ஐ.தே.க சார்பாக மு.அமைச்சர் தயா கமகேயின் மனைவி அனோமா கமகே தேர்தல் கேட்கிறார். ஐ.ம.சக்தியில் சிங்கள வேட்பாளர் கலப்பதி தேர்தல் கேட்கிறார். கலப்பதியை விட தயா கமகே பண, மக்கள் செல்வாக்கு மிக்கவர். கலப்பதியும் சாதாரணமாக மட்டிடக் கூடியவரல்ல.

இம் முறை ஐ.ம.ச அணியின் சிங்கள வேட்பாளர்கள் பொத்துவில் தொகுதி சிங்கள வாக்குகளையும் சேர்த்து 25 000 அளவான வாக்கை பெறுகிறார்கள் என கொள்வோம். யானைச் சின்னம் போன்று டெலிபோன் சின்னம் மக்களிடைய பிரபலமானதல்ல என்பதால் டெலிபோனுக்கு குறிப்பிட்ட வாக்குகள் மாத்திரமே கிடைக்கும். சின்னத்தை பார்த்து வாக்கு போடும் நிலை இருக்காது. இருந்தும் கடந்த காலங்களில் ஐ.தே.கவின் அமைப்பாளர்களாக இருந்த சிலர், தற்போது ஐ.ம.சக்தியின் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் 2000 அளவான ஒரு சிறு வாக்கு அதிகரிப்பை முழு அம்பாறையிலும் எதிர்பார்க்கலாம். இவற்றின் அடிப்படையில் நோக்கும் போது திகாமடுல்லவில் டெலிபோன் சின்னம் மொத்தமாக 87 000 வாக்குகளை பெறும். இது டெலிபோன் அணியினர் பெறச் சாத்தியமான ஆகக் கூடிய எண்ணிக்கையாகும்.

தமிழ் மக்களது வாக்குகள்?

இம் முறை திகாமடுல்லவில் தமிழ் மக்களது வாக்கை குறி வைத்து த.தே.கூவும், கருணாவும் களம் கண்டுள்ளனர். இன்னும் சில தமிழ் கட்சிகள் களம் கண்டிருந்தாலும் அவர்கள் தமிழ் மக்களிடையே பெரும் தாக்கம் செலுத்துவதை அவதானிக்க முடியவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் த.தே.கூவானது
45 421 வாக்குகளை பெற்றிருந்தது. கடந்த தேர்தலில் த.தே.கூவுக்கு சவால் விடுக்குமளவு எந்த அணியும் இருந்திருக்கவில்லை. அத் தேர்தலில் த.தே.கூவை எதிர்த்து களம் கண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 439 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது. இம் முறை திகாமடுல்லவில் ஏற்பட்டுள்ள வாக்காளர் அதிகரிப்பு போன்றவற்றை வைத்து சிந்திக்கும் போது பெரிதான சவால் ஏதும் இல்லாத நிலையில் த.தே.கூ 50 000 வாக்கை பெறக் கூடிய சாதக நிலை உள்ளது.
இம் முறை களம் கண்டுள்ள கருணாவை கடந்த தேர்தலில் களமிறங்கியிருந்த அ.இ.த.காங்கிரஸ் போன்று பலம் குன்றிய ஒரு அணியாக கூற முடியாது. இவர் ஒரு குறித்தளவான வாக்கை பெறுவார் என்று நம்பப்படுகிறது. கருணா 5000 அளவான வாக்கை பெறுவார் என கொண்டால், த.தே.கூவானது 45 000 வாக்குகளை பெறும். 2010ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 1490 வாக்குகளை பெற்றிருந்தது. இதனை வைத்து ஒப்பிட்டு நோக்கும் போது கருணா 5000 அளவான வாக்கை பெறுவது கடினமான விடயமல்ல. கருணா அணியினர் 10 000 இற்கும் மேல் வாக்கை பெற்றால், அது த.தே.கூவின் வெற்றியை பாதிக்கும் என்பதை ஆசனப்பகிர்வு பற்றி ஆராயும் போது உணர முடியும். 1994ம் ஆண்டு TULF இற்கும் TELO இற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியால் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மயில்..?

திகாமடுல்லவில் 2015ம் ஆண்டு முதன் முறையாக களமிறங்கியிருந்த அ.இ.ம.கா 33 102 வாக்குகளை பெற்றிருந்தது. 1600 வாக்குகளாலேயே மயில், தனது ஆசனத்தை தவற விட்டிருந்தாலும், மரத்தின் கோட்டைக்குள் புகுந்து மயில் ஆடிய ஆட்டம் சாதாரணமாக நோக்க கூடிய ஒன்றல்ல. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறையில் போட்டியிட்ட அ.இ.ம.காவானது சாய்ந்தமருது ஊரிலும், அக்கறைப்பற்று மாநகர சபையில் களம் காணாது 42 000 வாக்குகளை பெற்றிருந்தது. இது அவர்களின் கட்சியில் போட்டியிட்டு பெற்ற வாக்குகள். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சம்மாந்துறை, நிந்தவூர் சபைகளின் தவிசாளர் பதவிகளையும் பெற்று அ.இ.ம,கா இன்னும் பலம் பெற்றிருந்தது. இந்த இரு ஊர்களிலும் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததோடு, நிந்தவூரில் பைஸால் காசிம் இராஜாங்க அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் அ.இ.ம.கா ஒரு ஆசனத்தை பெற்றால், அதனை வீ.சி பெறுவார் என்பது வெள்ளிடை மலையாக இருந்தது. இதனால் அ.இ.ம.காவில் களமிறங்கியிருந்த ஏனைய வேட்பாளர்கள் பெரிதும் முயற்சிக்கவில்லை. இது கடந்த முறை மயில் கட்சி ஆசனத்தை இழந்ததற்கான பிரதான காரணம். இம் முறை மயில் கட்சியில் களமிறங்கியுள்ள 10 வேட்பாளர்களில் ஒரு டம்மி வேட்பாளர் தவிர்ந்து ஏனைய 9 பேரும் பெரு முயற்சி செய்வதை அவதானிக்க முடிகிறது. அ.இ.ம.காவில் வெற்றி பெற 15 000 அளவான வாக்கே தேவைப்படும் என கருதப்படுவதால், சிறிய ஊர் மக்களும், தங்களது ஊர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. இம் முறை மருதமுனை, இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் மு.கா வேட்பாளர் எவரையும் களமிறக்காமை மயிலுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அம்பாறையில் அதி கூடிய வாக்குகளை கொண்ட ஊர் சம்மாந்துறையாகும். 38 000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களை கொண்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மயிலின் பேரெழுச்சிக்கு சம்மாந்துறை மக்களது ஆதரவே பிரதான காரணமாகும். இதனடிப்படையில் தான் சம்மாந்துறையை சேர்ந்த வீ.சி இஸ்மாயிலுக்கு அ.இ.ம.காவினால் தேசியப்பட்டியல் வழங்கப்பட்டிருந்தது. சம்மாந்துறையில் மு.மா.ச.உ மாஹிர் அ.இ.ம.கா சார்பாகவும், மு.பா.உறுப்பினர் மன்சூர் மு.கா சார்பாகவும் களமிறங்கியுள்ளனர். இந்த ஊரின் தேர்தல் முடிவுகள் அனைத்திலும் மு.மா.ச.உறுப்பினர் மாஹிரின் செல்வாக்கை அவதானிக்க முடியும். மு.மா.ச.உறுப்பினர் மாஹிருக்கும் மு.காவுக்குமிடையில் 2008ம் ஆண்டிலிருந்து தொடர்பு ஆரம்பமாகியிருந்தது. அன்றிலிருந்து 2018ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரை ( இக் காலப்பகுதி வரை மாஹிர் மு.காவுடனேயே இருந்தார். ) இடம்பெற்ற தேர்தல்களில் மு.மா.ச.உ மாஹிர் நேரடியாக களமிறங்கியிருந்த தேர்தல்களில் மாத்திரமே மு.கா சம்மாந்துறையிலிருந்து கூடுதலான வாக்கை பெற்றிருந்தது.

மு.பா.உறுப்பினர் மன்சூரை பொறுத்த வரையில் அவரை ஒரு போதும் சம்மாந்துறை மக்கள் ஆதரிக்கவில்லை. கடந்த தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களான தயா கமகே ( 2008,2010,2012,2015 ), சரத் வீரசேகர ( 2010 ) ஆகியோர் சம்மாந்துறையிலிருந்து பெற்ற வாக்கை கூட மன்சூரால் பெற முடியவில்லை. இதனை அவரே பல மேடைகளில் கூறுயுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவரது சொந்த வட்டாரம் கூட மயிலிடம் தோல்வியை சந்தித்திருந்தது. 2010, 2015 ம் ஆண்டைய தேர்தல்களில் மன்சூர் மிக இலகுவாக வெற்றிபெறக் கூடிய நிலை இருந்தது. அவ்வாறான நிலையில் கூட சம்மாந்துறை மக்கள் அவரை ஆதரிக்கவில்லை. இம் முறை மன்சூரின் வெற்றி 06 வேட்பாளர்களை களமிறக்கி கேள்விக்குறியாகியுள்ள நிலையில் ஆதரிப்பார்களா?

இவ்வாறான விடயங்களை வைத்து நோக்கும் போது, இம் முறையும் வழமை போன்று சம்மாந்துறை மயிலுக்கு ஒரு பலமான அடித்தளத்தை வழங்கும் என்பதை அறிய முடியும். சம்மாந்துறையில் வாக்குச் சிதறல்கள் அதிகமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இம் முறை சம்மாந்துறை, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், பாலமுனை, நற்பட்டிமுனை, நாவிதன்வெளி, மாவடிப்பள்ளி ஆகிய ஊர்களில் மயிலின் செல்வாக்கு ஓங்கியுள்ளதை அவதானிக்க முடியும். இவைகள் வைத்து சிந்திக்கும் போது, இம் முறை அ.இ.ம.காவானது 45 000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய காங்கிரஸ்...?

இம் முறை தேசிய காங்கிரஸ் தனது குதிரை சின்னத்தில் தனித்து களம் கண்டுள்ளது. இது தனித்து களம் கண்டுள்ளமையானது மு.காவுக்கும், அ.இ.ம.காவுக்கும் சவாலானது என்பதை மறுப்பதற்கில்லை. இதனை ஆசனப்பிரிப்பின் போது தெளிவாக உணர முடியும். குதிரையானது மொட்டு அணியோடு நேரடியாக இணைந்து தேர்தல் களம் கண்டிருந்தால் ஏனைய முஸ்லிம் கட்சிகள் மிக இலகுவாக குதிரையின் சவாலை கையாண்டிருக்கும். ஆசன ரீதியாக சிந்திக்கும் போது அதாவுல்லாஹ் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளார். அதே நேரம் அவர் மொட்டோடு இணையாததால், தற்போது மயோன் அணியினர் மொட்டு சார்பான அம்பாறை மாவட்ட முஸ்லிம்களது அதிகாரத்தை தன் பக்கம் எடுக்க முயற்சிப்பதோடு, அதாவுல்லாஹ்வை மொட்டுவிலிருந்து தூரப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். தே.கா, தனது ஆசனத்தை உறுதி செய்தால், மொட்டு அணியில் ஆதாவுல்லாஹ் ஹீரோவாக இருப்பார் அல்லாது போனால் ஸீரோவாக இருப்பார்.

இம் முறை குதிரையானது அக்கறைப்பற்றில் பெருமளவான வாக்கையும், சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ஆகியவற்றில் சொல்லுமளவான வாக்கையும் எடுக்கும். அக்றைப்பற்றில் மொத்தம் 29 656 வாக்குகள் உள்ளன. இதில் 74 வீதம் வாக்களிக்கப்படும் என கொண்டால் 21 945 வாக்குகளை அளிக்கப்படும் வாக்குகளாக கொள்ளலாம்.

ஒருவர் எப்படிப்பட்ட அவ்லியாவாக இருந்தாலும் ஓரிருவர் அவரை எதிர்ப்பார்கள். இது வழமை. பொதுவாக மு.கா அக்கறைப்பற்றில் குறைந்தது 4000 வாக்கை எடுக்கும். இம் முறை மு.மா.ச.உறுப்பினர் தவம் அக்கறைப்பற்றில் களம் கண்டுள்ளார். இதன் காரணமாக சிறிய அதிகரிப்பை எதிர் பார்க்கலாம். நாம் மு.மா.ச.உறுப்பினர் தவம் 4 500 வாக்கை பெறுவார் என்று கணக்கில் கொள்வோம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் களம் கண்டிருந்த தே.கா 2 544 வாக்குளையும், அ.இ.ம.கா 659 வாக்குகளையும் பெற்றிருந்தது. அதாவது அக்கறைப்பற்று பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் பெற்ற வாக்கின் கால் பங்கை அ.இ.ம.கா பெற்றுள்ளது. இந்த வகையில் நோக்கும் போது அக்கறைப்பற்றில் பெரும் வாக்கை அ.இ.ம.கா பெறும் என நிறுவலாம். பொதுவாக உள்ளூராட்சி மன்ற முடிவுகளை வைத்து இவ்வாறான பெரும் நிறுவல்களுக்கு செல்ல முடியாது. இருந்தாலும், அக்கறைப்பற்றில் அ.இ.ம.கா ஒரு சிறிய வாக்கை பெறும் என்பதை ஏற்றேயாக வேண்டும். கடந்த அக்கறைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டிருந்த NFGGயானது 2711 வாக்கை பெற்றிருந்தது. இம் முறை NFGGயானது அம்பாறையில் அ.இ.ம.காவை ஆதரிக்கின்றது. இவைகளை வைத்து நோக்கும் போது அ.இ.ம.கா அக்கறைப்பற்றில் 2500 அளவான வாக்கை பெறும் சாத்தியமுள்ளது. அக்கறைப்பற்றில் மு.காவுக்கும், அ.இ.ம.காவுக்கும் சேர்த்து குறைந்தது 7000 வாக்குகள் பிரியும். இது தவிர்ந்து ஐ.தே.கவின் வாக்கு, பொதுஜன பெரமுனவின் வாக்கு, செல்லுபடியற்ற வாக்குகள் என குறைந்தது 500 வாக்குகள் இருக்கும். ஆகக் குறைந்தது அக்கறைப்பற்றில் அளிக்கப்படும் வாக்குகளில் அதாவுல்லாஹ்வுக்கு கிடைக்காமல் 7500 பிரியும் என்பதை அறிய முடியும். இம் முறை ஆதாவுல்லாஹ்வினால் அதி உச்சமாக அக்கறைப்பற்றில் 14 500 வாக்குகளையே பெற முடியும்.

சாய்ந்தமருதில் 6000 அளவான வாக்குகளையும், சம்மாந்துறையில் 3500 அளவான வாக்குகளையும், அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் 4000 அளவான வாக்குகளையும் அதாவுல்லாஹ் பெறக் கூடிய நிலையில் உள்ளார். இவற்றை வைத்து நோக்கும் போது அதாவுல்லாஹ் மொத்தமாக 35 000 அளவான வாக்கை பெறுவதற்கான சாத்தியமுள்ளது.

ஐ.தே.க...?

இன்று அம்பாறை மாவட்ட அரசியல் களத்தில் ஐ.தே.கவை யாரும் பெரிதாக தூக்கிப் பிடிப்பதாக இல்லை. இருந்தாலும் ஐ.தே.கவும் கவனத்திற்கொள்ளத் தக்கதே. இம் முறை ஐ.தே.கவில் தயா கமகேயின் மனைவி அனோமா கமகே தேர்தல் கேட்கிறார். கடந்த முறை அம்பாறையில் சஜித்துக்கு கிடைத்த வாக்கில் அரைவாசியையும், பொத்துவில் தொகுதியில் உள்ள சிங்கள வாக்குகளையும் வைத்து நோக்கினால், இவர்களால் ஆகக் குறைந்தது 25 000 அளவான சிங்கள வாக்கை பெற முடியும். இது தவிர்ந்து 10 000 தமிழ், முஸ்லிம் வாக்குகள் ஐ.தே.கவுக்கு கிடைக்க கூடிய நிலையுமுள்ளது. பெருமளவான முஸ்லிம்கள் தயாவின் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். அங்கு வேலை செய்பவர்கள் அவரை ஆதரிப்பார்கள் தானே! வெட்டினாலும் பச்சை இரத்தம் என கூறும் தமிழர்கள், முஸ்லிம்கள் இன்றுமுள்ளனர். அட்டாளைச்சேனை லொயிட்ஸ் உட்பட சில முஸ்லிம் வேட்பாளர்களும் ஐ.தே.கவில் களமிறங்கியுள்ளனர். தயா கமகே பெரும் பண பலம் கொண்டவரும் கூட. கடந்த பாராளுமற்ற தேர்தலில் 30 000 இற்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகளை தயா கமகே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றை வைத்து நோக்கும் ஒருவரால் இம் முறை ஐ.தே.க 10 000 அளவான தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெறும் சாத்தியமுள்ளது என்பதை ஏற்க முடியும். இதனடிப்படையில் இம் முறை ஐ.தே.க 35 000 அளவான வாக்கை பெறும்.

ஆசனப் பங்கீடு..?

இம் முறை மொட்டு அணியினர் ஆகக் குறைந்தது 97 272 வாக்கையும், டெலிபோன் ஆகக் கூடியது 87 000 வாக்குகளையும், த.தே.கூவானது கருணா 5000ஐ பிரிப்பார் என்ற நிலையில் 45 000 வாக்குகளையும், அ.இ.ம.கா 45 000 வாக்குகளையும், தே.கா மற்றும் ஐ.தே.க ஆகியன 35 000 அளவான வாக்குகளையும் பெறும்.

அம்பாறை மாவட்டத்தில் அதி கூடிய வாக்கை பெற்று பொதுஜன பெரமுன அணியினர் போனஸ் ஆசனத்தை கைப்பற்றுவர். வாக்கு அடிப்படையில் ஆசனத்தை நோக்கினால் முதல் சுற்றில் மொட்டுவும், டெலிபோனும் ஒரு ஆசனத்தை உறுதி செய்யும். முறையே மொட்டு, டெலிபோனுக்கு 39 316, 29 044 வாக்குகள் எஞ்சும். ஏழு ஆசனங்களில் மூன்று ஆசனங்கள் பிரிந்துவிட்டன. எஞ்சிய வாக்குகளுக்கான ஆசன சுற்றில் த.தே.கூ, அ.இ.ம.கா, மொட்டு ஆகியன தலா ஒரு ஆசனத்தை உறுதி செய்துகொள்ளும். ஏழாவது ஆசனத்திற்கு தே.காவுக்கும், ஐ.தே.கவுக்குமிடையில் போட்டி நிலவும்.

கருணா அணியினர் 10 000 அளவான வாக்கை பெற்றால் த.தே.கூவின் ஆசனம் சவாலுக்குட்படும். அதனை விடவும் கருணாவின் வாக்கு கூடினால் நிச்சயம் த.தே.கூ ஆசனத்தை இழக்கும். தே.கா, ஐ.தே.க ஆகியன ஆசனத்தை உறுதி செய்யும். கருணா முதன் முறையாக அம்பாறையில் களமிறங்கியுள்ளதால் அவர் பெறக்கூடிய வாக்குகளை ஊகிப்பது சவாலான விடயம். டெலிபோனானது தனது ஆசனத்தை இரண்டாக அதிகரிக்க பெரும் பிரயத்தனத்தை செய்து கொண்டிருக்கின்றது. மொட்டுவுக்கும், டெலிபோனுக்குமிடையில் சிறிய வாக்கு இடைவெளியே காணப்படுகின்ற போதிலும், அதனை எட்டுவது டெலிபோனுக்கு பெரும் சவாலான விடயம். டெலிபோனுக்கு இதனை விட கூடுதலான வாக்களிப்பு சாத்தியமில்லை. தற்போது அவர்கள் செய்து கொண்டிருப்பது, தங்களது வாக்குகளை தக்க வைப்பதற்கான முயற்சியே!


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts