பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-04-15 17:04:00

கல்முனை மாநகர சந்தையில் சில்லறை வியாபாரத்திற்கு தொடர்ந்தும் தடை; அனைத்து வியாபாரஸ்தலங்களிலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாளை வியாழக்கிழமை (16) ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் வேளையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொதுச் சந்தைகளில் முன்னர் போன்று மொத்த வியாபாரம் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என்பதுடன் பொது இடங்களில் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து வியாபாரஸ்தலங்களிலும் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைப்பட்டியல் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (15) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில், இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு, முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

* அத்தியாவசியப் பொருட்களுக்கான நிர்ணய விலை எக்காரணம் கொண்டும் மீறப்படக் கூடாது.

* மொத்த வியாபாரமாயினும் சரி, சில்லறை வியாபாரமாயினும் சரி, அனைத்து வியாபாரஸ்தலங்களிலும் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைப்பட்டியல் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

* கல்முனை பொதுச் சந்தையில் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மொத்த வியாபாரம் மாத்திரம் இடம்பெறும்.

* இச்சந்தையில் எவரும் எக்காரணம் கொண்டும் சில்லறை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

* இதனை மீறும் வகையில் அங்கு சில்லறை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது மாநகர சபை, பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து நடவடிக்கை எடுக்கும்.

* சில்லறை வியாபாரம் வழமை போன்று சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* கல்முனை மாநகர சபைக்குட்பட்டஏனைய சந்தைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதுடன் சன நெரிசல் ஏற்படாதவாறு மைதானம் உள்ளிட்ட விசாலமான பொது வெளிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்து வியாபாரஸ்தலங்களின் முன்னாலும் கை கழுவுவதற்கான அல்லது கிருமி தொற்று நீக்கும் (Sanitize) ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

* மக்கள் மத்தியில் போதிய இடைவெளி பேணப்படுதல் வேண்டும் என்பதுடன் அனைவரும் மாஸ்க் அணிந்திருத்தல் அவசியம்.

* நுகர்வோர் மத்தியில் போதிய இடைவெளி இருப்பதையும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

* பொருள் கொள்வனவுக்காக கடைத்தெருக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மாத்திரமே செல்ல வேண்டும்.

* சமீப காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்தோர் கடைத் தெருக்களுக்கு செல்வதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

* மேற்படி ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக மாநகர சபை உத்தியோகத்தர்களுடன் பொலிஸ், இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப் படை, நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

* இவற்றை பின்பற்றத் தவறுகின்ற எவராக இருந்தாலும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறி, கொரோனா வைரஸ் பரவலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் தகுதி, தராதரம் பாராமல் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts