கட்டுரைகள் | சமூக வாழ்வு | 2020-03-29 19:54:07

இது ஈமானை உரசிப்பார்க்கும் சோதனைக் காலம்.

(மருதமுனை நிஸா)

தற்போது அனைவராலும் அறியப்பட்டு அச்சத்தால் உச்சநிலை அடைந்திருக்கின்ற விடயமே இந்த கொரோனா வைரஸ். இதனால் சர்வதேசமே கதிகலங்கி நிற்கின்றது. எம் தேசமும் இந்நோய் தாக்கம், அச்சத்தின் வலையில் சிக்கி வெளிவர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் ஆறுபோல் போல் பெருக்கெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது.
உயிர் இழப்புகள் பற்றியும் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களின் தகவல் பற்றியும் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. அதே வேளை எமக்கு அச்சத்தின் உச்சம் கூடுவதோடு மன சோர்வும் மன உழைச்சலும் அதிகரித்த வண்ணமே இருக்கின்ற அதேவேளை,
புதிதாய் உருவெடுத்திருக்கின்ற இந்த வைரஸ் பற்றிய அச்சம் எம் அனைத்து வாழ்வையும் நடைமுறை மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிமிடம் வைரஸ் எமை தாக்குமோ இந்த இடத்தில் தாக்கமோ இந்த வேலையை செய்ய முடியாதுள்ளதே என்றெல்லாம் மன அழுத்தத்தினால் குமுறிக் கொண்டு இருக்கின்றோம். ஒவ்வொரு ஊடகங்களிலும் அறிவித்தல்கள் மூலமாக பரவிவருகிறது வைரஸ் போல் வைரஸ் பற்றிய தகவல்கள். வைரஸ் தொற்றும் முன் பாரிய வைரஸ் ஒன்று தற்போது எம்மை தாக்கிவிட்டது. அதுதான் கொரோனா நோய்க்கு ஆளாகி மரணித்து விடுவோம் என்கின்ற அச்சம். இந்த அச்சம் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகின்றான்
"(விசுவாசம் கொண்டோரே!) பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும் ,செல்வங்கள்,உயிர்கள்,கனிகளின் விளைச்சல்கள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம் மேலும் (நபியே! இவற்றை) பொறுத்துக் கொள்பவர்களுக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!"(சூறா பகறா:155) ஆகவே இறைவனே சொல்லிவிட்டான் எம்மை பயத்தைக்கொண்டு சோதிப்பேன் என்று.

எனவே ஏற்கனவே எமக்கு இவை இவை நடக்கும் என சொல்லப் பட்டவைதான் நடந்துகொண்டிருக்கின்றன.அவனால் விதிக்கப்பட்டவை விதிப்படி அவைகள் அப்படியேதான் நடந்து கொண்டு இருக்கின்றது. நாம்தான் எம் ஈமானை பலப்படுத்த வேண்டும். எமது ஈமானை உரசிப்பார்க்கவே இந்த சோதனைகள் வந்திருக்கலாம் இல்லையா?.இது எம் ஈமானை புடம் போட வந்த விதியின் விளையாட்டாகவும் இருக்கலாமே. எமது ஈமானை உரசிப்பார்க்கும் விடயத்தை ஓர் அறிஞர் இவ்வாறு கூறுகிறார், "சுவரில் ஆணி அடித்துவிட்டு அது உறுதியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக அதன் உறுதியை அசைத்துப் பார்க்கிறோமே அது போலதான் எமது ஈமானை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பதற்காக இவ்வாறான சோதனைகளைத்தருகிறான்" இதுவே போதும் நமக்கு வேறெந்த உதாரணங்களும் தேவைப்படாது.
எவ்வளவு அழகான உதாரணம்.
இதில் இருந்து நாம் என்ன புரிய வேண்டும் எமது ஈமானை உரசிப்பார்க்கும் ஒரு பரீட்சையே தவிர வேறில்லை. இந்தப் பரீட்சையில் சித்தி பெறுவது எம்மில்தான் இருக்கிறது. நாமும் நம் உள்ளத்தில் உள்ள எமது ஈமானும் திடமாக இருக்குமேயானால் யாராலும் எதுவானாலும் இறைவனைத் தவிர அசைக்கவே முடியாது. எது வந்தாலும் கம்பீரமாய் எதிர்த்துப் போராட துணிச்சல் வேண்டும். அதற்கு ஈமான் வலுவாக இருக்க வேண்டும். மரணம் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மரணம் எனக்கு எப்போது? எதன் மூலம் வரும் என்பது இறைவன் எமை படைக்கும்போதே எழுதப்பட்டது.அதனை யாராலும் மாற்றவோ முந்தவோ பிந்தவோ முடியாது என்பதனை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அல் குர்ஆன் அதனை இவ்வாறு கூறுகிறது,
(அவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான் , இன்னும் குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழவிட்டு) ப்பிற்படுத்தி வைப்பான்.நிச்சயமாக அல்லாஹ்வுடைய தவணை அது வந்துவிடுமானால் அது பிற்படுத்தப்படமாட்டாது,(இதனை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால் (என்றும் கூறினர்).

இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் ஒவ்வொரு வகையான சோதனைகளோடுதான் வாழ்கின்றனர்.அந்த வகையில் இந்த வைரஸ் பொதுவான பாரிய சோதனையாக இருக்கலாம். இதனைக் கண்டு எங்கும் விரண்டோட முடியாது ஈமான் உள்ள நாம் ஓடக்கூடாது. இது அல்லாஹ்விடமிருந்து வந்த சோதனை இதனை எதிர்கொள்ள துணிச்சல் வேண்டும். எங்களால் முடியுமானவரை பொறுமை ,சகிப்புத் தன்மை கொண்டு செயலாற்ற வேண்டும். எது நடந்தாலும் இறைவன் விதியை தாண்டி நடக்காது என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது
"விசுவாசம் கொண்டோரே நீங்கள் பொறுமையை கடைப்பிடியுங்கள்,
மேலும் (எதிரியை சந்திக்கும் போது)ஒருவருக்கொருவர் உறுதியாக இருந்து கொள்ளுங்கள் ,மேலும் (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் சித்தமாய் இருங்கள்.அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவீர்கள்."(சூறா ஆலு இம்ரான் :200)
பொறுமையாளர்களுடனே அல்லாஹ் இருக்கிறான்.பொறுமையோடு இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும்.

எனக்கு நோய் வரக்கூடாது என்று நினைத்து கண்ணாடிப் பெட்டியில் ஒளிந்து கொண்டாலோ, நான் ஆரோக்கியமாய்த்தான் இருக்கிறேன் என்று மார் தட்டவதனாலோ இறைவன் விதியை மாற்ற முடியாது. வரவேண்டும் என்பது இறைவன் நாட்டம் என்றால் யாரால் தான் மாற்ற முடியும்? அதே போன்று வைரஸ் தொற்றுக்குள்ளான இடங்களில் இருந்து வந்தவருக்கு நோய் தொற்றி இருக்கும் என நாம் வதந்திகளை பரப்புகின்றோம். ஆனால்,அவருக்கு இறைவன் நாட்டத்தில் எதுவுமே நடக்கவில்லை. அதுவும் அவருக்கு நடக்கக்கூடாது என்று இருந்தால் அவர் எப்படிப்பட்ட வைரஸ் தொற்றிய நபர்களுடன் பழகிவிட்டு வந்தாலும் நடக்ககூடாது என்று விதி இருந்தால் அதனையும் யாரால்தான் மாற்றமுடியும்.

ஆகவே வைரஸ் பற்றி வருகின்ற செய்திகள் தகவல்கள் நாளாந்தம் வெளிவருகின்ற வெறும் செய்தியாக மட்டும் பார்த்து விட்டு பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். அதுமட்டுமல்ல வைரஸ் பற்றி வருகிற ஆதாரமற்ற குரல் பதிவுகள் ஏனைய காட்சிகள், படங்கள் அனைத்தும் ஆதாரமில்லாமல் நம்பி தேவையற்ற அச்சங்களை உருவாக்க வேண்டாம் அச்சம் எம்மை அறியாமலேயே எம்மை பீடித்து விட்டது என்பதினால் பதட்டமும் பயமும் எம் இறைதொடர்பில் இருந்து நீக்கியும் விடலாம்.எனவே நிதானமாக எமது வாழ்க்கையை வழமைபோல் நடைமுறைப்படுத்தாவிடியும் எம் உள்ளத்தை உறுதியாகவும் துணிவாகவும் வைத்திருப்போம். அதிக பிரார்த்தனைகளில் ஈடுபட்டு ஈருலக வெற்றிக்காய் கரமேந்தி இறைதொடர்பை அதிகப்படுத்தி பொறுமையோடும் நிதானமாகவும் செயற்படுவோம்.
"மேலும் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகிறான், அவன் நாடியவர்களை வேதனையும் செய்கிறான்.மேலும்,அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக , மிக கிருபையுடையவனாக இருக்கிறான்"(சூறத்துல் பத்ஹ்:14)


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts