கட்டுரைகள் | சமூக வாழ்வு | 2020-03-24 09:39:14

நடப்பவை யாவும் நன்மைக்கே

(மருதமுனை நிஸா)

வருடாவருடம் ஏதோ ஒரு பிரச்சினைகள் துளிர் விடுகிறது. கஷ்டத்திற்கு மேல் கஷ்டங்கள் தாங்க முடியாத சோதனைகளும் வேதனைகளும் விரட்ட முடியாத நோய்கள், அடுத்தடுத்து வலிகள், இன்னொருபக்கம் மன உளைச்சல், மன அழுத்தம்,மனச்சோர்வு இவைகளால் அன்றாட வேலைகள் பாழாகி பொருளாதார சிக்கல்களினால் உளம் சமனிலையற்று போகிறது.
இவைகள் ஏன் நடக்கிறது? எதற்காக தீமூட்டப்படுகிறது? என்னதான் என்றும் புரிகிறதே இல்லையே... என்னடா ஆண்டவா இது. என்று அங்கலாய்ப்பு அனைவரையும் வாட்டுகிறது தானே. இந்த ஆராய்ச்சி எதற்காக எமக்கு? இறைவனை நம்புகிற நாம் அவனை ஏற்றுக் கொண்ட நாம் இவ்வாறான வீணான ஆராய்ச்சி பண்ணி எம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டுமா?

எம்மை அச்சத்தில் ஆழ்த்தி உச்சநிலையில் கொண்டு நிறுத்தியிருக்கும் அந்த வைரஸ் "கொரோனா" பற்றி நாம் அனைவரும் உள்ளத்தால் நடுநடுங்கிப் போய் இருக்கின்றோம். இதனை மீண்டும் ஞாபக படுத்தி உங்களை கஷ்டப்படுத்த வரவில்லை.
படைத்தவன் எம் பெற்றோரை விட பல மடங்கு பாசமானவன். அவனுக்கு தெரியும் தன்உம்மாக்களுக்கு எதனை எப்போது கொடுக்கவேண்டும். எதனை எப்போது தடுக்க வேண்டும் என்று.
அல்லாஹ் அல் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான், " மெலும் வானங்கள் மற்றும் பூமியில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது அவன் நாடியவர்களை மன்னித்து விடுகிறான் அவன் நாடியவர்களை வேதனையும் செய்கிறான்.மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்."
(48:14)
அவன் அன்பானவன் என்பதை நாம் புரிந்துகொள்ள இது போதுமானது.

ஆகவே ,இந்த வைரஸ் அது கொண்டுவந்த தீமைகளை மட்டும் நாம் நினைத்து அனுபவித்து மனதை காயப்படுத்தி கொண்டே இருக்கின்றோம். தீமையான பாதிப்புகளையும் கவலைகளையும் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு நன்மைகளையும் சற்று சிந்தித்து பார்க்கலாமே. இந்த வைரஸ் கொண்டு பல நன்மைகளும் இருக்கின்றது.அது என்ன நன்மை இந்த பாரிய வைரஸினால் உயிர்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்ற போது நன்மைகளா என்று யோசிக்கிறீர்களா?
இருக்கிறது சற்று என்னோடு வாருங்கள்.

பெரியதொரு விடுமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது அரசாங்கத்தினால். இந்த விடுமுறையில் நான் சொல்லாமலேயே சில நன்மைகளை இருப்பீர்கள்.
அதாவது,

குடும்பத்தோடு நாம்...

இந்த வைரஸ் வருமுன் நாம் எவ்வாறு இருந்தோம்?சற்று பின்னாலிருந்து சிந்திப்போமே...
வேலை வேலை என்று காரியாலயம் என்றும் பாடசாலை என்றும் மேலதிக கற்றல் விடயங்கள் என்றும் வகுப்புகள் என்றும் குடும்பத்தோடு வெளியிலே திரிந்தோம்.
பிள்ளைகள் தூங்கிய பின் பெற்றோர் வீட்டுக்கு வருவதும் பெற்றோர் வெளியில் வேலையாக இருக்கும் போது பிள்ளைகள் வீடுகளிலும். இவ்வாறு சொல்லொணா சோகத்தில் வீடு மட்டும் தனிமையில் அசையாமல் வீட்டுக்காரர்களுக்காய் ஏங்கிக் கிடந்தது.

இன்னொரு வகையில் சொல்லப் போனால் ஊரடங்கு சட்டம் அப்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் ஏற்பட்டு பெரும்பாலான வீடுகள் உறங்கிப் போய் கிடந்தது. இன்று என்ன நடக்கின்றது நாமே அடங்கினாலும் வீடுகள் கலகலவென குடும்பத்துடன் உண்டு உறங்கி விளையாடி இருக்கின்றோம்.
உள்ளத்தில் ஒருவகை பீதிதான் கவலைதான் என்றாலும் எம் குடும்பத்தை ஒன்றுசேர்த்த சந்தர்ப்பமாக கருதலாமே.
பிள்ளைகளின் ஏக்கம் இந்த தருணத்தில் தீர்ந்து இருக்கலாம். கணவருடன் நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசவோ , மனைவியிடம் நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசவோ என்று இருவருக்கும் உள்ளுக்குள் இருந்த ஏக்கமும் எதிர்பார்ப்புக்களும் நிறைவேற இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட விடுமுறையாக இருக்கலாம் இல்லையா?..
குடும்பம் தலைவர்களாகிய ஆண்கள்
வீடுகளில் பெண்களுக்கு சமையல், வீட்டு வேலைகளில் உதவி ஒத்தாசையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடயம் ஒரு பக்கமிருக்க அயலவர், சகோதரர், இரத்த உறவுகள் என்று பேசி உறவாடி எத்தனையோ வாரங்கள் மாதங்கள் எத்தனை மாதங்கள் வாரங்கள் ஆகி இருக்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் வீட்டோடு முடங்கி இருக்கும்போது வேறு வேலைகள் இல்லாத காரணத்தினால் இவ்வாறான உறவுகளை நினைத்து அவர்களோடு உறவாடவும் மனம் விட்டு பேசவும் தயாராகிவிட்டோம்.
இவ்வாறு பேசிக் கொள்வதனால் மனங்களில் கவலைகளை மறந்து திசை திருப்பப்பட்டு ஒற்றுமையும் மேலோங்குகிறது.அயலவர்களுக்கு சமைப்பதில் பரிமாறுவதும் நடைபெறுகிறது. அடுத்தவருக்கு உதவும் மனோநிலை இருந்தும் நேரப் பற்றாக்குறை காரணமாக எம்மால் உதவ முடிவதில்லை. உடன்பிறந்த சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனோநிலை ஆசை இருந்தும் செய்வதற்கும் எமது வேலைகள் இடம் தருவதில்லை. இவ்வாறான நேரப் பற்றாக்குறைகளினால் தான் உண்டு தன் வேலையுண்டு என தன் குடும்பத்தை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தோம் ஆனால் பாருங்கள் இன்று கண் குளிர்ச்சியான உறவுகள் பலப்படுத்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. துண்டிக்கப்பட்டு இருந்த உறவுகள் கூட இன்று சேர்ந்து விட்டது. அந்த அளவிற்கு நன்மை இருக்கின்றது இறைவன் நாட்டம் எல்லாம் நலவுக்கு என்பதை இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுத்தத்தில் நாம்....

சுத்தத்தில் அதிகம் அக்கறை செலுத்துகிறோம். உடல் சுத்தம், வீடு வாசல் சுத்தம், அசுத்தம் பிள்ளைகளை சுத்தமாக வைத்திருப்பது சுத்தங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். "சுத்தம் ஈமானின் பாதி" என்று தெரிந்தும் அலட்சியம் செய்து இருந்தோம். ஆனால் இன்று அதிக அளவிலான சுத்தத்தில் அதிகமாக ஈடுபடுகின்றோம். இந்த விடுமுறையும் இந்த அல்லாஹ்வின் ஏற்பாடும் எம்மை ஒரு பாடம் புகட்ட கூடியதாக இருக்கின்றது.

இறை நினைவில் நாம்

இறைவனை மறந்த எத்தனையோ செயற்பாடுகள் உரையை பொருத்தமற்ற நிகழ்வுகள் தொழுகையில் பொடுபோக்கு மேலதிக சுன்னத் தொழுகையின் தர்மங்கள் மறந்து போயிருந்தது குர்ஆன் அடுக்கிலிருந்து உறுதியளித்த அல்லாஹ்வின் வசனங்கள் வாசிப்பு அக்கரை குறைவு அச்சமின்மை ஈமான் இல்லாத பேச்சுக்கள் மரணம் பற்றிய சிந்தனை போன்ற இவ்வாறான உரையை தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தது ஆனால் இன்று இவை அனைத்தும் உயிர்ப்பிக்கப் பட்டு உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றது இங்கு இறைவனின் ஏற்பாடு சரியான திட்டமிடல் சட்டப்படி அமைந்திருக்கின்றது எல்லாம் இவையும் அளவுக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நேரகாலத்துடன் வீட்டில் நாம்...

நேரம் பாராது பொழுது பாராது தொழில் வேலை வெளிபயணங்கள் வீணான கூட்டங்கள் தூக்கம் இழந்து, தொழில் புரிந்து, இரவு பகல் பாராது ஓடிஓடி ஓடாய் தேய்ந்த எமக்கு பிரயோசனமற்ற நட்புகளின் சவகாசம் இவையெல்லாம் மட்டுப்படுத்தப்பட்டு நேர காலத்துடன் பறவைகள் கூடு வந்து சேர்வது போல் நேரகாலத்துடன் வீடு சேர்ந்து வீட்டில் குடும்பத்துடன் உறவாடுகிறோம். தாமதித்து இரவுகளில் தூங்குவது நின்று நேர காலத்துடன் தூங்கிய எழும்புகிறோம். குடும்பத்தோடு வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுகிறோம்.இதுவும் நலவென்பது புரிகிறது.

எதிர்கால ஆசையின்மை...

சேமிப்பு உலக ஆசையோடு பின்னிப்பிணைந்து இருந்த நாம், சொத்து சேர்ப்பதற்காக தலைதெறிக்க ஓடிய கால்கள், பணத்தை சேமிக்க உளநோய்க்கு ஆளான நாம் இன்று அன்றாட தேவைபற்றி மட்டுமே சிந்திக்க தொடங்கிவிட்டோம். அன்றாடம் சமைத்து அன்றைக்குத் தேவையான நாளை முடித்துக் கொள்கிறோம். மேலதிக ஆசை எதற்கு என்ற எண்ணமும் உருவாகியது.அது மட்டுமல்லாது ஏழை எழியோரைப்பற்றி சிந்திக்கவும் தொடங்கிவிட்டோம். மறுமைக்கான தேடலே எம்மிடம் அதிகரித்துள்ளது.

இறுதியாக நாம் பெருமைப் பட்டு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய மாபெரும் அருள் சந்தோசப்பட வேண்டிய விடயம்தான் இலங்கைத் தாயின் மக்களாக பிறந்தது.இந்த கொடிய நோய் எம் தேசத்திற்கு எதிர்வரும் ஏப்ரலுக்கு முற்கூட்டியே பரவியதும் ஒரு நலவிருக்கிறது.எப்படி என்று யோசிக்கின்றீர்களா?ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகின்ற காலம்.ஏப்ரலுக்கு முன்கூட்டி பரவியமையினால் நாம் மிகவும் பெருமைப் படவேண்டும் சந்தோஷப்பட வேண்டும். ஏனென்றால்,அவர்களின் வருகைக்கு முன்னரே வெளிநாட்டு வரவை தடைசெய்யப்பட்டு விமான சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளது.இதனை நாம் சிந்தித்து இறைவனுக்கு சுஜுது செய்ய வேண்டும்.இவ்வாறான நிறைய நன்மைகளை நாம் நினைத்து இறைவனுக்கு சிரம் பணிந்து எது நடந்தாலும் இறைவன் நாட்டமே அதனை ஈமான் கொண்ட நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் பொறுமையோடு.அத்தோடு நாம் அறியாத விடயங்களையும் மறைமுகமான நன்மைகளையும் அவனே அறிந்தவன்.அதனை அல் குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,
"ஆதமே! நீர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு தெரிவிப்பீராக! எனக்கூறுகிறான்;அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களைத் தெரிவித்த போது ,அவன் வானங்கள் மற்றும் பூமியில் மறைந்திருப்பதை நிச்சயமாக நான் நன்கறிவேன்;நீங்கள் வெளிப்படுத்துவதையும்,மறைத்துக்கொண்டிருந்தீர்களே அதையும் நான் நன்கறிவேன்"என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.ஆகவே தீமையானவற்றையும் அசௌகரியங்களையும் இன்னல்களையும் மட்டும் எண்ணி பீதியில் சோர்வுற்று போய்விடாது நன்மைகளையும் எண்ணி மனதை திடமாக வைத்திருப்போம்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts